“தழும்பு”/குமரன்

காலையில் எழுந்திருக்கும் போதே சங்கருக்கு பதற்றம் பற்றிக் கொண்டது. இன்றைக்கு எப்படியாவது மேலதிகாரிகளிடம் பேசி வருங்கால வைப்பு நிதியிலிருந்து அட்வான்ஸ் பணத்தை வில்லவனுக்கு வாங்கித்தர வேண்டுமே என்பதே அவன் பதற்றத்திற்கு காரணம்.

இதே சிந்தனை சங்கருக்கு.

சங்கர் ஒரு வங்கியில் பணிபுரியும் ஒரு எழுத்தர். அந்த வங்கியில் இருந்த ஒரு தொழிலாளர் சங்கத்தின் மண்டல செயலாளர்.
மூன்று நாட்களுக்கு முன் சங்கத்தைச் சார்ந்த வில்லவன் அழுது கொண்டே சங்க அலுவலகத்துக்கு வந்தவர், தன் மகளுக்கு இதய நோய் உள்ளதாகவும் அவளை ஒரு பெயர் பெற்ற இதய நோய் ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளதாகவும், பணம் கட்ட வேண்டும் என்றும் கதறி அழுதார். அந்த அழகானகுழந்தையை எல்லோருக்கும் தெரியும். ஒரு துறு துறு 7 வயது குழந்தை. சங்க அலுவலகத்தில் தீபாவளி பட்டாஸ் விற்பனை செய்யும் போது , நான் பண்டல் போடறேன் , கட்டறேன் என்று ஓடி வருவாள். அழகாக ராகத்தோடு பாடுவாள்.
அந்தக்குழந்தைக்கா இந்த நோய் என்று எல்லோரும் அதிர்ந்துதான் போனார்கள்.
எவ்வளவு செலவு ஆகும் என்பதே அடுத்த கேள்வி. அவர் சொன்ன தொகையைக் கேட்டு அங்கிருந்த தோழர்கள் சிலையாகித்தான் போனார்கள்.
சங்கர்தான், வில்லவனை அமைதிப்படுத்தி , “கவலைப்படாதே தோழரே, எப்படியாவது ஆபரேஷன் பணத்தை தயார் செய்து விடலாம்” என்று தைரியப்படுத்தி, நாளை தலைமை அலுவலகத்துக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தான் .
அனைவரும் தங்களால் முயன்ற ஒரு தொகையை கொடுக்க முன் வந்தனர். தோழர்கள்
தெரிந்த சக நண்பர்களையும் தொலைப்பேசியில் பேசி ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இன்னும் ஒரு பெரிய தொகை தேவைப்பட்டது.

மறு நாள், வில்லவனோடு சங்கர், பி.எஃப் துறை அலுவலகத்திற்கு சென்று வில்லவன் மற்றும் அவனது கடன் மனுக்களை கொடுத்து அந்த வாரத்துக்கான பட்டியலில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்தான். வில்லவனின் வருங்கால வைப்பு நிதியில் அட்வான்ஸாக இன்னும் எவ்வளவு எடுக்கலாம் என்று தெரிந்து கொண்டு அந்த மனுவையும் தந்து விட்டு வில்லவனின் நிலைமையைக் கூறி உடனடியாக உதவி செய்யுமாறு எல்லோரையும் கேட்டுக்கொண்டான்.

பிறகு உதவிப் பொது மேலாளரைப் பார்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டான். ஏதோ மீட்டிங் போலும். உள்ளே கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்த போது ஐந்தாறு ஆபிசர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். சரியென்று வில்லவனை ஆஸ்பிடலுக்கு அனுப்பி விட்டு, இவரைப் பார்க்காமல் போகக்கூடாது என்று காத்திருக்க ஆரம்பித்தான். மதியம் 1 ஆகியது. ஒவ்வோருவராக வெளியே வர ஆரம்பித்தனர். ஒருவர் மட்டும் உள்ளே இருந்தார்.இதற்கு மேல் பொறுக்க முடியாதென்று, சட்டென்று உள்ளே நுழைந்தான் சங்கர்.

சங்கரைப் பார்த்து “நான் உள்ளே வரச்சொல்ல வில்லையே” என்றார் அந்த அதிகாரி.
சங்கர் உடனே மன்னிப்புக்கேட்டு வந்த நோக்கத்தையும் அதன் அவசரத்தையும் எடுத்துரைத்தான். ஆனால் அவர், “சரி, சரி,பைல் வரட்டும், பார்க்கலாம், ரெண்டு நாள் கழித்து வாங்க” என்றார். “சார், நாளைக்கு பணம் தேவை,பணம் கட்டினால்தான் ஆபரேசன் தியேட்டருக்கு கொண்டு செல்வார்கள் சார்” என்று கூறியதற்கு, “பார்க்கலாம், பார்க்கலாம்” என்றும் “இப்ப கிளம்புங்க” என்று வெளியே அனுப்பி விட்டார்.

சங்கருக்கு, இவரிடம் வேலை ஆகாது என்று நினைத்து, இதற்கு பொது மேலாளரை பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்று தீர்மானித்து மேல் தளத்தில் உள்ள அவரது அறைக்கு சென்றான். அவரது உதவியாளர் (PA), “சார் இல்லையே சங்கர், அவரது அதிகாரிகள் குடியிருப்பிற்கு ஒரு ஐந்து மணிக்கு சென்றால் பார்க்கலாம்” என்றார். மீண்டும் பிஎஃப் துறைக்கு சென்று, வில்லவன் மனுக்கள் நகர்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அதிகாரிகள் குடியிருப்பிற்கு சென்று காத்திருக்க ஆரம்பித்தான்.

சுற்றுச்சுவருக்குள் சிறுவர்கள் விளயாடிக்கொண்டு இருந்தார்கள். எல்லோரும் அங்கு வசிக்கும் அதிகாரிகளின் குழந்தைகள். சங்கர் அவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

நன்றாகப் போய் கொண்டிருந்த விளையாட்டு, திடீரென்று அவர்களுக்குள் சண்டையில் முடிய, ஒருவன் தள்ளி விட, ஒரு சிறுவன் கீழே விழ, அவன் நெற்றியிலிருந்து ஒரே ரத்தம்.

சங்கர் பதறிப்போய், மயக்கமாகி விட்ட அந்த சிறுவனை அள்ளியெடுத்து , அங்கிருந்த காவலாளியிடம் அந்தக்குழந்தையின் அம்மாவிடம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொல்லி விடு என்று பக்கத்திலேயே உள்ள ஒரு டிஸ்பென்சரிக்கு அந்தச்சிறுவனை தூக்கிக்கொண்டு சென்றான். மருத்துவர் வருவதற்கு முன் விழித்துக்கொண்ட சிறுவன் அழ ஆரம்பித்தான். அதற்குள் அவன் தாயார் அங்கு வர, மருத்துவர் பெரிய அடியில்லை என்றும் இரண்டு தையல் போட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு மீண்டும் குடியிருப்புக்கு வந்தான்.

இதற்குள் பொது மேலாளரும் வந்திருக்க, இன்முகத்தோடு வரவேற்று வந்த விஷயத்தைக்கேட்டு, ” நாளை வைப்பு நிதி கண்டிப்பாக கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று உறுதியளித்தார்.

சங்க அலுவலகத்துக்குச் சென்றவன் அங்கு காத்திருந்த வில்லவனிடம் நாளை சாங்ஷன் கிடைத்து விடும் என்று பொது மேலாளர் உறுதியளித்ததை கூறி, பணத்தை எப்படியாவது நாளை மாலைக்குள் ஆஸ்பத்திரியில் பணம் செலுத்தி விடலாம் என்று தைரியப்படுத்தி விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

அதனால்தான் இன்று அந்தப்பதற்றம் சங்கருக்கு. வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராக வைப்பு நிதி துறைக்குச் சென்றான். அங்கிருந்த நண்பர்களும் அதிகாரியும் மனு பைல் உதவி பொது மேலாளரிடம் சென்று விட்டது என்று கூற, நேராக அவரது அறைக்குள் நுழைந்தான். இவனைப்பார்த்தவுடன், “என்ன” என்றவர், “பைல் இன்னும் வரவில்லை” என்றார். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “சார், இங்கதான் சார் இருக்கு” என்று கூறி விட்டு அங்கு இருந்த பைல்களில் தேட ஆரம்பித்தான். அவர் உடனே கோபப்பட்டு , ” எப்படி எல்லா பைலையும் நீ பார்க்கலாம்” என்றவுடன் , ” ஒரு குழந்தையின் வாழ்க்கையோடு விளையாடதிங்க சார்”, என்று குரலை உயர்த்தி அங்கிருந்த மற்ற ஆபிசர்கள் முன் சொன்னவுடன் வேறு வழியின்றி, சரி சரி என்று பக்கத்தில் வைத்திருந்த பைலை எடுத்து கையெழுத்திட்டு கொடுத்தார்.

பைலை வாங்கிக்கொண்டு மற்ற நடைமுறைகளை முடித்துக்கொண்டு கீழே ஆட்டோவுடன் காத்திருந்த வில்லவனது தம்பியிடம் சாங்ஷன் டிக்கட்டை கொடுத்து மேற்கு மாம்பலம் கிளைக்கு விரைந்து செல்ல சொல்லி விட்டு மீண்டும் உதவிப் பொது மேலாளர் அறைக்குச் சென்றான்.

இவனை மீண்டும் பார்த்தவுடன், ” இப்போது என்ன” என்று கேட்டார்.
சங்கர் பொறுமையாக ” நன்றி சொல்லவே வந்தேன்” என்று கூறி விட்டு, “உங்கள் மகன் இப்ப எப்படி இருக்கார், நேற்று நன்றாக தூங்கினாரா” என்றான்.
அவர் ஆச்சரயத்தோடு “உனக்கு எப்படி தெரியும்” எனக் கேட்டார்.
“நான்தான் சார், நேற்று உங்கள் மகனை டாக்டர் கிட்டே கூட்டின்டு போனேன்” என்றவன், “சார்,வில்லவன் பெண் குழந்தையை நான் பார்க்கும் போதெல்லாம், அந்த இதய ஆபரேஷனும், உங்க ஞாபகமும் வரும் சார்” என்றவன், “அதே மாதிரி, நீங்க உங்க மகன் நெற்றித்தழும்பை பார்க்கும் போது, என் ஞாபகம் வரும் இல்ல சார், என்று சொல்லிக்கிளம்பினான் மன நிம்மதியோடு.