வானவில் கே.ரவி கவிதை

மனத்தில் உள்ள குறுக்குச் சுவர்களை
இடித்துத் தள்ளுங்கள்
உயிர்களெல்லாம் ஒன்றே என்ற
உண்மை உணருங்கள்

அறிவில் படர்ந்த நூலாம் படையை
அகற்றி எறியுங்கள்
அழிவில்லாத தர்ம நெறியில்
துணிந்து செல்லுங்கள்

ஜாதிகள் இல்லை ஜாதிகள் இல்லை
உரக்கச் சொல்லுங்கள்
மேல், கீழ் என்ற மாயத் திரையை
கிழித்துப் போடுங்கள்

ஒன்றே ப்ரும்மம் ஒன்றே கடவுள்
நாம ரூபங்கள் பலவாம்
இன்றே இந்தச் செய்தியை உலகுக்(கு)
எடுத்துக் கூறுங்கள்

அரசியல் வாதிகள் கோஷம் இடட்டும்
அலட்சியம் செய்யுங்கள்
ஓட்டுக்காக ஓலம் எழுப்பும்
வியாபாரிகள் அவர்கள்

ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று
கட்டளை போடுங்கள்
நாமே மன்னர்கள் அவர்களெல்லாம்
நம் பணியாளர்கள்

ஜாதிகள் ஒழிக பேதங்கள் ஒழிக
மக்கள் விழித்தெழுக
பாரதி போட்ட பாதையில் ஒன்றாய்
பயணம் தொடர்ந்திடுக.


(லக்‌ஷ்மணபுரியில் இருந்து)
09-09-2023

3 Comments on “வானவில் கே.ரவி கவிதை”

Comments are closed.