சட்னிக்கு உப்பு குறைவா?/சீவ.தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் 3 லிருந்து)

ஒரு நாள் பகவான் காலைச் சிற்றுண்டி இட்லிக்காக சட்னி அரைத்திருந்தார்.

சட்னியை கல்லுரலிருந்து எடுத்ததும் முதலில் அனைவரும் அதனை ருசி பார்க்கட்டுமே என்று அங்கிருந்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு சிறு உருண்டையாகக் கொடுத்தார். அடியார்கள் அதை பகவத் பிரசாதமாக வாங்கி உண்டனர். அது தேவாம்மிருதமாக இருந்தது பகவான் அரைத்த சட்னி பின் எவ்வாறு இருக்கும்.

ஆனால் ஜி வி சுப்பராமய்யா அவர்களுக்கு நாக்கில் என்ன கோளாறு தெரியவில்லை. அவர் ‘சட்னிக்கு உப்பு கொஞ்சம் குறைவாக இருக்கிறது’ என்றார்.

சட்னிக்கு உப்பு சரியாக இருக்க, இவர் ஏன், உப்பு கொஞ்சம் குறைவு’ என்று கூறுகிறார் என்று மற்ற அடியார்கள் நினைத்தனர்.

பகவான் என்ன செய்தார்? உடனே உப்பு ஜாடியைத் திறந்தார். ஒரு ஸ்பூன் அல்ல, இரண்டு ஸ்பூன் அல்ல தமது பெரிய கையினால் இரண்டு பிடி உப்பு அள்ளி சட்னியுடன் சேர்த்துக் கலக்கிறார்.

அடியார்களுக்கு வயிற்றைக் கலக்கிற்று இது ஜி.வி.எஸ் அவர்களால் வந்த வினை. ஒரே கரிப்பாகக் கரிக்கும் சட்னியுடன் இட்லியை உள்ளே தள்ள வேண்டுமே! அருமையான பகவத் பிரசாதத்தை சாப்பிடாமல் இருக்க முடியுமா.?

ஆனால் அடியார்களுக்குப் பேராச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால் இட்லியுடன் இந்தச் சட்னியைச் சேர்த்து உட்கொண்ட போது சற்றும் கரிக்கவே இல்லை.

அனைவரும் விரும்பிச் சாப்பிட்டனர். சட்னிக்கு உப்பு சரியாகவே இருந்தது. இது எப்படி ?

பிரேமக ஸ்வரூவியான பகவானது திருக்கையால் தயாரித்த சட்டினி எப்படி கரிக்கும் ?