
கழுத்தில் மைகசியும் தூவல்தான்….
அன்று பெரும்பாலானோர் இடத்தில்.
சொட்டுமை கடன்வாங்கி…
திருப்பித் தந்ததாய் நினைவில்லை.
கணக்கு ஆசான் கதிரேசன் ஐயா
கட்டைவிரலில்…
எப்போதும் தூவல் மைதான்.
தூவல் செருகிய சட்டைகளில்
படியும் மைநீக்க….
அம்மா தினந்தோறும்
திட்டிக்கொண்டுதான்
துணிதுவைப்பாள்.
நல்லதூவலென்பது
ஏழைக்கு
எட்டாக்கனவு…
பழையதூவல் விற்கும்
கடைபற்றி இன்று யாருக்கும்
தெரியாது…
பார்க்கர் நிறுவனத்தூவல்
பெருமை அனைவருக்கும் …
வாய்ப்பதில்லை.
பள்ளிகளில் பெரும்பாலான திருட்டு…
தூவல்தான். ஒழுகாத தூவல்…
கட்டைவிரலில் மைநனையாது
கல்விச்சாலை
முடிந்ததில்லை.
சொட்டுமை வாங்கியே காதலை
வளர்த்துக்கொண்டவன்…
அருணாச்சலம்.
ஒருபுரட்சிக்குப்பிறகு…
நீண்ட நெகிழிக் குழாய்களில்
மைஅடைத்த தூவல்கள் வந்தது
விதவிதமாய்…
தேர்வுக்கு அன்று அவை
அனுமதியில்லை.
சிலருக்கு நினைவுச்சின்னமாய்
தூவல்கள் இன்றுமிருக்கிறது
ஒரு உணர்வைச் சுமந்துகொண்டு.
மசிபடிந்தகைகள் மனங்களில்
படிந்ததுபோல்…
இன்றையத்
தூவல்களால் முடிவதில்லை.
♦

Very nice!
Arumai