அரச மரம்/மீ.விசுவநாதன்

வாய்க்கால் கரையில்
மிகப் பெரிய அரசமரம்
நூறு கோடைகளும்,
வசந்தங்களும்,
மழைக் காலங்களும்
கண்டு விட்ட
கம்பீரத் தோற்றம்…

பிள்ளையாரே
அதன் நிழலில்தான் …
கட்டெறும்பும், அணிலும்,
மைனாவும், குருவிகளும்,
குரங்குக் கூட்டமும்
கொண்டாடுகிற கோகுலம்…
பிள்ளையாரைச் சுற்றியும்
பிள்ளை வரம் கேட்டும்
சுற்றும் மனிதர்களின் தேவதை. …

நிறைய பச்சை இலைகளோடு
இருக்கும் இதை
தினமும் தேடிவந்து
சலசலக்கும் மெல்லிய
காற்றும் நண்பன்..
புயலுக்கும், மழைக்கும், வெயிலுக்கும்
கூடத்தான் அது உறவு….
அந்த நிழலே
வயலில் வேலை செய்த
கூலிக்கு உறங்கும் வீடு..

பூமிக்குள்
அதன் வேர்க் கைகள்
நீண்டு கிடக்கிறது
முதுமை பலமாய்….

இருந்தாலும்
ஆயிரம் பொன்
விழுந்தாலும்
ஆயிரம் பொன்
முதியோரின் மனம்போல….
(09.09.2015)