
மெய்யினமே..மெய்யினமே..
எம் சமத்துவக்கவி கண்ட
பாரத நாட்டினை சூழ்ந்திருக்கும்
சாதிச்சண்டைகளை மதவெறிகளை
மூடப்பழக்கங்களை
அடிமைத்தனமங்களை
சவுக்கடிகளை சவால்களை
பொய்களை பித்தலாட்டங்களை
அகற்றிட இன்னொரு
விடுதலைக்காக
நீ இன்னொரு பிறவி
எடுத்தாலே போதும்!
பகுத்தறிவினமே..
பகுத்தறிவினமே…
எம் வீரக்கவி கண்ட
அக்னிக்குஞ்சொன்றை
நிமர்ந்த நன்னடையில்
நேர்கொண்டப்பார்வையோடு
அகன்ற மனநிலையில்
இனியதமிழ்மொழியில்
இந்தகிலத்தின் சமூகக்
கொடுமைகளில்
பற்ற வைத்தாலே போதும்!
மனிதனே..மனிதனே…
எம் ஞானக்கவி சொன்ன
மாயை நிலையினை
உன்னுள் இருக்கும்
மெய்ப்பொருளோடு
நன்நெற்றிக்கண்ணுடனே
தெளிவு மனதுடனே
தூய அறிவுடனே
என்றும் உணர்ந்து
நடந்தாலே போதும்!
மானுடமே..மானுடமே
எம் முண்டாசு கவி சொன்ன
சித்தாந்தச்சாமிகள் அமர்ந்து
அருள்தரும் இந்த
உலகமெனும் கோவிலில்
பாரெனும் தேவாலயத்தில்
அண்டமெனும் மசூதியில்
நித்தமும் பக்தி மனம் மட்டுமே
வீசினால் போதும்!
என்னினமே..என்னினமே…
எம் தீர்க்கத்தரிசி உரைத்த
தேசத்தின் ஒற்றுமைகள்
இன்றோ பணிக்காக
உணவுக்காக உறவுக்காக
உரிமைக்காக உடமைக்காக
உயிர்நீக்கும் அவலமிங்கும்
உயிர்போகும் அவலமற்றும்
அகிலமெங்கும்
இல்லாமல் இருந்தாலே போதும்!
நல்லினமே..நல்லினமே…
எம் தொலைநோக்குக்கவி உரைத்த
சகஉயிர்கள் நேசிப்பு
இன்றோ சுயநலத்தின் பிடியில்
பொருட்தேடலில் பொதிந்து
பொய்க்கும் பொல்லாப்பிற்கும்
இடையே சிக்கித்தவித்து
நல்மனதை சூது கவ்வாமல்
இருந்தாலே போதும்!
கவியினமே..கவியினமே..
எம் பிள்ளைக்கவிக்கு பிடித்த
பிள்ளைகளோ இன்று
ஓடியாடி விளையாடாமல்
சிட்டுக்குருவியாய் பறக்காமல்
தொடுதிரைபேசியை
தொட்டு தொட்டு
வீட்டின் ஓரத்தில்
முடிங்கிக்கிடக்காமல்
எம் பாட்டுக்கவியின்
பட்டாம்பூச்சியாய்
பறந்தாலே போதும்!
புரட்சியினமே..புரட்சியினமே…
எம் முரசுக்கவி பார்த்த
புதுமைப்பெண்ணினமோ இன்று
முன்னோக்கி நடந்தாலும் கூட
முற்போக்கை மொழிந்தாலும் கூட
முதன்மையாய் நின்றாலும் கூட
தடைகளை உடைத்தாலும் கூட
அவர்களின் சிறகுகளை சிலர்
வெட்டாமல் இருந்தாலே போதும்…
சுடரினமே..சுடரினமே..
எம் பாரதி கண்ட
புதுமைகளை புதையல்களை
ஒற்றுமையை ஒழுக்கத்தை
பெண்மையை ஆண்மையை
நேர்மையை நீதியை
கனவுகளை கதைகளை
கண்டபடி காணமல்
அவர் கண்டபடி
கண்டாலே போதும்!
மகாகவி பாரதியின் நினைவுதினம் இன்று..
