ஆர்க்கே

எந்த எதிர்பார்ப்புமில்லா
அன்பினை என்மீது
பொழிந்தபடி இருக்கிறீர்கள்.
தனுமை கமழும் வார்த்தைகள்
உங்களால் என்னிடம்
பரிமாறப்படுகிறது.
துளித்துளியாக
வாழ்வை மனதால் ரசிக்க
சொல்லித் தருகிறீர்கள்.
புன்னகையையும் மகிழ்ச்சியையும்
மட்டும் தேக்கிவைத்து
வேண்டொணா துயர்களை
புறந்தள்ளி அலம்பி விடுகிறீர்கள்.
என்னிதயம் சொல்ல நினைக்கும்
நன்றிகளுக்கெல்லாம்
நீங்கள் காத்திருக்காமல்
அடுத்த பிரதேச அன்புபொழிவிற்காய்
நகர்ந்தபடி இருக்கிறீர்கள்.
குளிரக்குளிர எனக்கான
ஒரு இத இடத்தை
உங்கள் இதயத்தில்
ஒளி வட்டமிட்டு வைத்திருக்கிறீர்கள்.
இந்த மழைப்பொழிவும்
உங்கள் அன்பும்
என் வரையில் வேறு வேறு அல்ல.
மழை பொழிகிற வானை
கூரையாகவும்
அன்பு வழிகிற பூமியை
தரையாகவும்
கூடவே இந்த மழையையும்
உங்களையும்
இன்னாளிலும் வாழ்விலும்
அடையப்பெற்ற நான்–
அற்புத தருணமொன்றில்
ஆசீர்வதிக்கப்பட்டவன்.!
