இரவல்/எல்.ரகோத்தமன்

அந்த கூக்கூ…ஊ ..குருவி
தினம் தினம்
தன் சிறகுகளை
எனக்கு இரவல் தந்து
செல்கிறது!

அதிகாலையில்
அப்பட்சியின்
வசீகர குரலில்
மிதந்து வரும்
ராகமதின் குளிர்
தீண்டும் சுகமதில்
மன வெளியில் பெய்கிறது
ஒரு வினோத மழை!
 
விடிந்தும் விடியாத போழ்தில்
தோட்டத்து வேலியமர்ந்து
கூக்கூ…ஊ என
தன் ராக மீட்டலில்
யாரையோ அழைக்கையில்
ஏனோ கலைந்து போகிறது
உறக்கம்!
 
விழிப்பின் விடியலில்
துள்ளிக் குதித்து
குதூகலம் கொண்ட
உள்ளத் தடாகத்தில்
பூத்தன ஆயிரம் தாமரை!
 
எண்ணங்களின்
நிர்மால்ய வானில்
தன்னிச்சையாய் விரிந்தன
இரவல் சிறகுகள்!

எட்டா வானில்
நீந்திக் களிக்கையில்
சிறகுகள் என்னிடம்
ஒரு ரகசியம் சொன்னது!
 
நான் இரவலாய் வந்திருப்பது
உனக்கு பறத்தல் கற்றுத்தர
உன்னிடம் சிறைகொள்ள அல்ல!