அவளது அந்தரங்கம் – வாஸந்தி சிறுகதை/கோ.வைதேகி


..

இக்கதையில்  பாஞ்சாலி என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வியல் நம் கண் முன்னே விரிகிறது.மகாபாரத பாஞ்சாலிப் பரம்பரையை  சேர்ந்தவர்கள் அந்த ஊர் மக்கள்.ஆகவே குல வழக்கப்படி கணவன் இல்லாத நேரங்களில் அவனின் உடன் பிறந்தவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றாள் இந்தக் கதையில் வரும் பாஞ்சாலி என்ற பெண். இந்த விஷயம் தெரிந்து தான் தன்னை தன் அம்மா இங்கு திருமணம் செய்து கொடுத்திருப்பாளா என்ற எண்ணம் இவளுக்கு வரும்பொழுது எல்லாம் தன் அம்மா தான் தனக்கான முதல் எதிரி என்றும் எண்ணுகிறாள். வீரம் என்பது வாழ்வியல் சார்ந்த  ஒழுக்கம் என்று எண்ணும் இவளுக்கு மகாபாரதத்தில் பாஞ்சாலியை துகிலுரிய விட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்த பஞ்சபாண்டவர்கள் அனைவரும் பேடிகளாகத் தெரிகின்றனர்.பாஞ்சாலியும் அவ்வாறே எண்ணியதாகவும்  கர்ணனைத்தான் அவள் வீரம் செறிந்த ஆணாகவும் தன் விருப்பத்திற்குரியவனாகவும் எண்ணியிருந்தாள் எனும் உள்மன இரகசியத்தை தன் கணவர்களிடம் பகிர்ந்து கொள்வதாகவும்
கதைக்குள் கதையாக தொன்மம் தொட்டுக் காட்டுகின்றார் கதாசிரியர்.
     கட்டுப்பெட்டித்தனங்கள் நிறைந்த வாழ்க்கை  .ஊர் விஷயங்கள் எதுவுமே வெளியே போகாத சிங்கம் புலியை அடைத்து வைக்கும் கூண்டு போல ஏழடிக்கு குறையாத வேலி வைத்து காடு சூழ்ந்திருக்கும்  ஊர். .இந்த இடத்தில் சுதந்திரமாக நடமாட வேண்டுமெனில் ஆவியாக மாறினால்தான் உண்டு என்று  அவள் நினைக்கும் அளவுக்கு கெடுபிடிகள் நிறைந்த ஊர்….இவளுக்கு சற்று அனுசரணையாய் அங்கேயே பிறந்து வளர்ந்து எதுவுமே நமக்குச் சொந்தமில்லை எனும் மனோபாவத்துடன் குலவழக்கத்தை ஏற்று வாழப் பழகிய பக்கத்து வீட்டு சீதா அக்கா…எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும் ராக்கம்மா அத்தை…பயந்தாங்கொள்ளிகளாய் பேசாமடந்தையாய் இருக்கும் ஊர்ப் பெண்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக  ஒழுக்கங்கெட்ட செயலென்று இவள் நினைப்பதை அதுதான் ஒழுக்கமென்று கூறி செய்ய நிர்பந்திக்கும் கணவன். ஊரில் யாரோ சொன்னதாகச் சொல்லி  மனைவியை சந்தேகப்பட…கதை நாயகியான பாஞ்சாலி  மனம் வெறுத்து தன்னை தீக்கிரையாக்கிக் கொள்கிறாள்.அதை அவளுடைய கணவனும் சகோதரர்களும் வேடிக்கைப் பார்க்கின்றனர்.என்பதாக கதைமுடிகிறது.

         
இக்கதை ஒரு சிறுகதை என்ற
அளவில் இன்றி  நெடுங் கதையொன்றின்
சிறுபகுதி என்றே எண்ண
வைக்கிறது.மனித நாகரிகம்  எந்த
உயர்நிலையை எட்டினாலும் சடங்கு
சம்பிரதாயம் ,குலவழக்கம் என்று
ஏதேனும் ஒருவகையில் பெண்களை
சிறுமைபடுத்தும் கொடுமைகள்
அரங்கேறத்தான் செய்கின்றன.
பாஞ்சாலி,சீதா என்று கதையில் வரும் பெயர்கள் தொன்மத்தை நினைவூட்டுகையில் ஆண்களால் எழுதப்பட்ட அக்காப்பியங்களில் பெண்ணை சிறுமைபடுத்திய ஆண்கள் மீதான கோபம் தீவிரமாக வெளிப்படவில்லை.ஆணாதிக்கத்தில் அடங்கிப்போன  ..சிறுமைபட்ட பெண்களின் மீதான அக்கறை மட்டுமே வெளிப்படுகிறதுஆனால் பெண்ணின்  வேதனைகளை பெண் எழுதும் போது அவ்வெழுத்துகளில் வெளிப்படும் உணர்வுகளின் தீவிரம் உள்ளம் தொடுகிறது.அப்படிப்பட்ட பெண் எழுத்தாளர் பெரும்பாலோனோரால் பெரிதும் விரும்பப்பட்டவர்பெண்ணியம் என்பதுபெண்களின் எல்லாச் சிக்கலையும் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வது என்ற வேட்கையை  எழுத்தின் வழி தெளிவாகக் கூறியவரான வாஸந்தி அவர்கள் சமூக உளவியல் கூறுகளை இயல்பாக எழுத்தில் கையாண்டவர் என்பதற்கு இக்கதை ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வகையில் மனத்தை நெகிழ்த்துகிறது.


3 Comments on “அவளது அந்தரங்கம் – வாஸந்தி சிறுகதை/கோ.வைதேகி”

  1. வாஸந்தி வித்தியாசமான சிந்தனைகளைப்பொட்டில் அறைந்தாற்போன்று எழுத வல்லவர். அருமையான பெண் எழுத்தாளர். இக்கதையும் கருத்தும் அருமை.

Comments are closed.