ஆணவத்தை அடித்து நொறுக்கு/சிவ. தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் 3 லிருந்து எடுத்தது)

மாரீஸ் ஃபிரீட் மான் (Maurice Frydman) என்ற ஐரோப்பிய அன்பர் 1935ல் முதன்முதல் பகவானது தரிசனத்திற்கு வந்தார். அப்போது அவர் தரிசன ஹாலில் ஷூ (shoes) அணிந்து கையில் தொப்பியுடன் (Hat) உள்ளே நுழைந்தார். கையில் தொப்பியுடன் உள்ளே நுழைந்தார். இவர் தரையில் உட்கார கஷ்டப்படுவார் என்று பகவான் அவருக்காக ஒரு ஸ்டூல் கொண்டு வைக்கச் சொன்னார். சற்று நேரம் பொறுத்து ஆசிரமத்தின் அடியார்கள் அவரை ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றனர். காலைக்கடன் அங்கு அவர். அவர் காலை கடன்களை முடித்துக் கொண்டு சிற்றுண்டி அருந்தி தரிசன ஹாலுக்கு மீண்டும் வந்தார். இப்போது காலணிகளைக் கழற்றிவிட்டு தொப்பியையும் வைத்துவிட்டு வந்தார். அவர் இந்தியர்களைப் போல தரையில் சப்பணமிட்டு உட்காரக் கால்களை அப்படியும் இப்படியும் மடக்கிப் பார்த்து தவித்ததைக் கண்டு ஹாலில் அனைவரும் சிரித்தனர். வெற்றிலைப் பாக்கு மென்று கொண்டிருந்த பகவானும் முகம் மலரச் சிரித்தார்.

ஃப்ரீட்மானுக்கு ஒரு பெரிய சந்தேகம். ஆன்மை சொரூபமும், பிரம்மமும் ஒரு பொருளே என்றால் இடையில் மாயை ஏன் ஏற்பட வேண்டும்? மாயைக்குக் காரணம் மனிதனின் ஆணவம் (ego) என்றால் பகவான் அந்த ஆணவத்தை ஒரே அடியில் ஏன் அடித்து நொறுக்கிப் போடக்கூடாது? அப்பொழுது உடனே பிரம்மஞானம் வாய்த்து விடுமே!

ஃபிரீட் மேனின் இந்த யோஜனை கேட்ட பகவான் வாய்விட்டுச் சிரித்தவராக,
‘சரி அப்படியென்றால் நீ உன்னிடமுள்ள ஆணவத்தை வெளியே எடுத்து எனக்கு முன்னால் நீட்டு ; நான் அதே ஒரே போடாகப் போட்டு நொறுக்கி விடுகிறேன்.’

பகவானது இந்த ஹாஸ்யமான பதிலைக் கேட்டு , ஃபிரீட்மான் உட்பட ஹாலில் இருந்த அடியார்கள் அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

சிரிப்பொலி அடங்கியது. சற்று நேரம் பொறுத்து ஃபிரீட்மான் மிக அடக்கமாகக் கூறினார். ‘பகவானே எனக்கு இப்போது புரிகிறது.’

இவர் ரமணாச்ரமத்தில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து பகவானது உபதேசங்களைத் தொகுத்து Maharishi’s Gospel’ என்ற புத்தகத்தை வெளியிட்டு உதவினார்.