ஒரே கதை இருவர் எழுதியது

அழகியசிங்கர் எழுதியது

காலையில் நீலா வீட்டுக் கதவைத் தட்டியவுடன் அஞ்சலிக்குக் குழப்பம். என்ன குழப்பம் என்றால் இன்னும் நீலா எழுந்திருக்கவில்லையா
என்ற குழப்பம். இத்தனை நேரம் அலுவலகம் கிளம்ப அவசரப்படுவாள் நீலா. கேள்விக்குறியுடன் கதவு முன்னால் நின்று கொண்டிருந்தாள் அஞ்சலி. கொஞ்ச நேரம். மேடம் மேடம் என்று சத்தம் போட்டு கூப்பிட்டாள்.க்ஷ உள்ளேயிருந்து எந்தப் பதிலும் இல்லை. சந்தேகப்பட்டு கதவை உற்றுப் பார்த்தாள்.கதவு வெளியே வெளியில் இருந்து லாக் செய்யப்பட்டிருந்தது. அவளுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எங்கே இந்தக் காலை நேரத்தில் லீலா போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அஞாசலி. எங்கேயும் போவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
உடனே பக்கத்தில் இருப்பவர்களைக் கூப்பிட்டு கதவைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். இறுதியில் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முயற்சியில் கதவு உடைத்து திறக்கப்பட்டது. உள்ளே பார்த்தால் நீலா அலங்கோலமான உடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தாள்.

புவனா சந்திரசேகரன் எழுதியது

நீலாவின் உயிரற்ற உடலைக் கண்டு மயங்கி விழுந்தாள் அஞ்சலி. ஒருவழியாக அவளுடைய மயக்கத்தைத் தெளிய வைத்து விசாரிக்க ஆரம்பித்தார் வந்திருந்த போலீஸ் அதிகாரி.

அடக்க முடியாத துயரத்தில் விம்மியபடி, தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள் அஞ்சலி.

” நீலா மேடம் ஒரு ரைட்டர். நான் அவங்களோட அஸிஸ்டன்ட். அவங்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு அதிகம் இல்லாததால் அவங்க டிக்டேட் பண்ணற கதையை நான் கம்ப்யூட்டரில் அப்படியே டைப் செஞ்சு தருவேன். இப்போ ஒரு திரில்லர் கதை எழுதிக்கிட்டிருக்காங்க. இன்னைக்குக் காலையில் கொஞ்சம் சீக்கிரமா என்னை வரச் சொல்லிருந்தாங்க. இன்னைக்கு கிளைமாக்ஸ் எழுதிக் கதையை முடிக்கணும்னு சொன்னாங்க. நானும் அதுக்காக வழக்கத்தை விடக் கொஞ்சம் சீக்கிரமா வந்தேன். ஆனா, இப்போ இவங்களுக்கே கிளைமாக்ஸ் எவனோ கொடுத்திருக்கான்” என்று சொல்லிச் சொல்லி அழுதாள் அஞ்சலி.

நீலாவின் உடல் கிடந்த இடத்தின் அருகே இருந்த டேபிளில் ஒரு லேப்டாப் இருந்ததை கவனித்து, அதை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார் அந்த ஆஃபீஸர்.

” ஓகே மேடம். நீங்க கொடுத்த ஸ்டேட்மென்டை நாங்க அப்படியே எங்க ரெகார்டில் பதிவு செய்யறோம். நீங்க, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஸ்டேஷனில் வந்து கையெழுத்து போடுங்க. அப்புறம், எப்பத் தேவைன்னாலும் விசாரிக்கக் கூப்பிடுவோம். தவறாமல் வந்திருங்க” என்று அவர் சொன்னபோது பயந்தபடியே தலையாட்டினாள் அஞ்சலி.
நீலாவின் மரணம் அவளை அதிகம் பாதித்திருப்பதை அவளுடைய முகமும் செய்கைகளும் காட்டின.

பத்து நாட்களில் கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது. இரவில் வீட்டில் திருடுவதற்காக வந்தவனுடன் நடந்த கைகலப்பில் கீழே விழுந்து தலை பலமாகத் தரையில் மோதியதால் இறந்து போயிருந்திருக்கிறாள் நீலா. இரவில் அந்த வீட்டில் திருட வந்தவனை, எதிர்க் கடையில் பொருத்தப்பட்டிருந்த ஸிஸி டிவி கேமரா அடையாளம் காட்டக் கைது செய்யப்பட்டான். அதிவிரைவாக கேஸை முடித்த போலீஸ் அதிகாரி மதனுக்கு மேலிடத்தின் சபாஷ் கிடைத்தது.

ஒரு மாதம் கழித்து, எக்ஸ்பிரஸ் மாலில் இருக்கும் காஃபி ஷாப்பில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் மதனும், அஞ்சலியும்.

” தேங்க்ஸ் அஞ்சலி, உன்னோட உதவி இல்லாமல் இதை என்னால் செஞ்சிருக்க முடியாது. நீலா செஞ்ச தவறுகளுக்கு சரியான தண்டனை கிடைச்சது ” என்றான் மதன்.

” நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கே அவ்வளவு ஆத்திரம் வந்தது. உங்களோட மனநிலையை என்னால புரிஞ்சுக்க முடியுது. உங்க அப்பாவோட ஸ்டூடன்டான நீலா, அவர் எழுதி வச்சிருந்த கதைகளின் கையெழுத்துப் பிரதிகளைத் திருடிட்டு வந்து இத்தனை வருஷகாலமாய்த் தன்னோட கதைகளா பப்ளிஷ் பண்ணிருக்கறது தெரிஞ்சதில் இருந்து கோபமா வந்தது எனக்கு. அவங்களை எக்ஸ்போஸ் பண்ணனும்னு தான் அவங்க கிட்ட வேலைக்கு சேந்தேன். ஆனா, அவங்க இப்படி இறந்து போவாங்கன்னு நான் நினைக்கவேயில்லை”

” தற்செயலா நடந்தது தானே அது? நீ ஒண்ணும் பிளான் பண்ணி அவங்களை மர்டர் பண்ணலையே?

” அவங்களுக்கு என்னைப் பத்தின உண்மை எப்படியோ தெரிஞ்சுருச்சு. அவங்க தான் என்னை அட்டாக் பண்ண வந்தாங்க. நான் பிடிச்சுத் தள்ளினதுல கீழே விழுந்து மயங்கிட்டாங்க. நான் பயந்து போய் அங்கிருந்து கிளம்பிட்டேன். ஆனால், அன்னைக்கு ராத்திரியே வீட்டில் திருட வந்தவன், நீலா கீழே கெடக்கறதைப் பார்த்து மயங்கிக் கிடக்கறதா நெனச்சுட்டான். அவங்க எழுந்திருக்காம இருக்க மறுபடியும் அருகில் இருந்த வெண்கலச் சிலையால ஒரு போடு போட்டிருக்கான். எப்படியோ நீலா எதுனால இறந்தாங்கன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிஞ்சிருக்குமே? “

” தலையில் பட்ட காயம் தான் காரணம்னு வந்திருக்கு. டயம் ஆஃப் டெத்தை அவங்க கொடுத்திருக்காங்க. நீ கெளம்பினது ராத்திரி பத்து மணி. திருடன் வந்தது பதினொரு மணி. நான் அதை ஈஸியா கவர் பண்ணிட்டேன். அந்த டயம் முன்னே பின்னே இருக்கலாம்னு எஸ்டாபிளிஷ் பண்ணிட்டேன். அதெல்லாம் அனுமானம் தானே? “

” ஆனாலும் மனசில கில்ட்டியா இருக்கு மதன். வேணும்னு பண்ணலைன்னாலும், கொலை தானே? “

” ஓகே, அதுக்குத்தான் உனக்கு தண்டனை கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் ஆயுள் தண்டனை “

திகைப்புடன் மதனை ஏறிட்டுப் பார்த்தாள் அஞ்சலி.

” என்னோடு சேர்ந்து வாழும் ஆயுள் தண்டனை ” என்று சொல்லி மதன் கண் சிமிட்டினான். மனதிலிருந்த குழப்பத்தைத் தூர எறிந்து விட்டு மலர்ந்து சிரித்தாள் அந்த நங்கை.

One Comment on “ஒரே கதை இருவர் எழுதியது”

  1. முடிவு சரியில்லை! கொலை செய்த அஞ்சலிக்குத் தண்டனை கிடைத்தே தீரவேண்டும்.

Comments are closed.