இரு கவிதைகள்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் (14.09.2023) இன்றைய நவீன விருட்சம் ‘சொல் புதிது’ நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள்

பாரம் சுமக்கும் வேர்கள்
—————————————————-—-
விதைத்த போதே
விதிக்கப் பட்டது

பாரம் சுமந்து
பழக்கப் பட்டது

பூவாய் மலர்ந்துக்
காயாய் விளைந்து

கனியாய்க் கனிந்ததைக்
காண முடியாமல்

பூமிக்கு உள்ளேயே
புதைந்து கிடப்பது

வேர் முட்டிக் கொஞ்சம்
வெளியே வந்தாலும்

கால் தட்டி விழுவோர்
வெட்டிக் குறைப்பது

ஒரு நாள் புயலில்
மரமும் சாய

வெளியே வந்து
விம்மிக் கிடப்பது

பாரம் விழுந்து
பளுவும் குறைந்தாலும்

சொந்தம் போன
சோகத்தில் அழுவது

சாபங்கள் பெற்ற குயில்
———————————————————
பறவைக் குயிலின்
சாபம் ஒரு விதம்

குஞ்சு பொறிக்கவே
கூடு தேட வேண்டும்

பாவைக் குயிலின்
சாபம் வேறு விதம்

இருக்கும் கூடே
இறுக்கும் வேதனை

பாடிப் பறக்க
முடியாக் கொடுமையில்

இருந்து கிடக்கும்
இறக்கும் வரைக்கும்

—————