நாகேஷ் பார்த்த நாடகம்/மாதவ பூவராக மூர்த்தி

    நாகேஷ் என்ற பெயர் படித்தவுடனே உங்கள் மனம் அந்த மாமனிதரின் நினைவில் மூழ்கிவிடும். அதனால் நான் உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறக்க கொஞ்சம் நேரம் கொடுக்கிறேன். அறுபதுகளில் தமிழ்ப் படம் பார்த்தவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் நாகேஷுக்கென்று ஒரு இடம் உண்டு. எனக்கும் உண்டு.


 பள்ளி இறுதி படித்த நாட்களில் எங்கள் ஊரில் ஒரு காலத்தில் தினசரிப் பத்திரிகைகளில் நாகேஷ் தலைப்புச் செய்தியாகிருந்தார்.  “சிரிப்பு நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடம், “  “நாகேஷ் உயிர் ஊசல்” என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தது. என் மனது கவலையில் தோய்ந்தது. அவர் இறந்து விடப் போகிறார் என்ற கலக்கம் ஒரு பக்கம். அவர் இறக்க மாட்டார் என்ற ஏதோ நம்பிக்கை இன்னொரு பக்கம்.



  படிப்பிலும் விளையாட்டிலும் எனக்கு கவனம் தொலைந்து விட்டது. நாகேஷ் உடல்நலம் விரைவில் குணமாகவேண்டும் என்பது என் தினசரிப் பிரார்த்தனைப் பட்டியலில் சேர்ந்து கொண்டது. சில மாதங்களுக்குப் பிறகு என் போன்ற கோடானுகோடி ரஸிகர்களின் வேண்டுதல் பலித்து விட்டது.
 நாகேஷ் யமனின் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டார். மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்ப்பித்து விட்டார். என் உறவினர் அல்லது குடும்பத்தில் ஒருவர் பிழைத்து வந்த சந்தோஷம் என் மனதில் பரவியது.
  நாகேஷின் பேட்டி, படம் எல்லாம் என் கவனத்திலிருந்து ஒருபோதும் தவறியதில்லை. அவரைப் பற்றிப் பேசுவதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்தது. பள்ளி முடிந்தது கல்லூரியில் கால் வைத்தபோது என் ஆர்வம் நாடகத்தின் பால திரும்பியது.


     கல்லூரி நாடகங்களில் எனக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. நன்றாக நடித்ததாக ஆசிரியர்களும், நண்பர்களும் சொன்னார்கள். எங்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் திரு சீனிவாசன் நாடகம் நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாலை எங்கள் தெரு வழியாகப் போனவர் நானும் அப்பாவும் வாசற்படியில் அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து வண்டியை நிறுத்தி அப்பாவிடம், “ஸார் உங்க பையன் நாடகத்தில ரொம்ப நல்லா பண்ணினாரு இதை நாம ஸப்போர்ட் பண்ணனும். தம்பி நீங்க படிச்சு முடிஞ்சவுடனே நேரே மெட்ராஸ் போயிடுங்க. நாகேஷ் மாதிரி நல்ல டைமிங் இருக்கு விட்டுடாதீங்க.”  அவர் போய் ரொம்ப நேரம் காதுக்குள் அவர் சொல்லி விட்டுப் போன வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

மெட்ராஸ் வந்தேன் பூர்ணம் அவர்களின் நாடகத்தில் நடிக்கத் துவங்கினேன். நாகேஷ் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் உள்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. மியூசிக் அகடமி விழா ஒன்றில் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகில் நாகேஷ் நின்று கொண்டிருக்கிறார் . என் கண்முன் ரத்தமும் சதையுமாக (ஓல்லியாகத்தான்)   இருந்தார். தூரத்தின் இடைவெளி அதிகம் இருந்தும் நாகேஷை நான் நெருக்கமாக உணர்ந்தேன். 
 பலமுறை நாகேஷ் கலந்து கொள்ளும் விழாக்களுக்குச் சென்று வந்தேன். இருந்தும் இன்னும் காலம் கனியவில்லை.   காலம் வந்தது நண்பன் ஆர்க்கே எனக்கு ஒரு அரிய வாய்ப்பு அளித்தான். நாகேஷ் நடிக்கும் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நாங்கள் நடித்தோம். என் ஜென்ம சாபல்யம் அடைந்தது. நூறு முறை மனமார நண்பன் ஆர்க்கேக்கு நன்றி சொன்னேன்.


         நாகேஷ் அவர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டேன். பேச முடியவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் ஏதோ நீண்ட நாள் பழகியது போல் எங்களுடன் பேசினார். நிறையப் பேசினோம். அந்த தொடர் ரொம்ப நாள் தொடரவில்லை. ஆனால் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவரிடம் அடிக்கடி போனில் பேசினேன். நேரில் சந்தித்தேன்.  விழாக்களில் சந்தித்த போது நாகேஷ் என்னை அழைத்துப் பேசுவார். “ராவ், எப்படி இருக்கே? என்பார். தோள்மேல் கை போட்டு அன்போடு பேசுவார். நான் கர்வத்தோடு கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தேன்.

தனியாக பேசிக்கொண்டிருக்கும் போது என் பள்ளி இறுதி நாட்களில் அவர் உடல்நலம் பற்றி நான் அடைந்த வருத்தத்தை சொன்னேன்.இப்பதான் சரியாயிடுத்தே கவலையை விடு என்பார்.

அந்த நாட்களில் எங்கள் குருகுலம் குழுவினரின் தொடரும் பயணங்கள் நாடகம் கோடை நாடகவிழாவில் அரங்கேறி பரிசு பெற்று பத்திரிக்கைகளாலும் ரஸிகர்களாலும் பாரட்டப் பட்டது. டிசம்பர் மாதம் நுங்கம் பாக்கம் கல்சுரல் அகடமியில் ஒரு காலைக் காட்சிநடக்க இருந்தது.
  ஆர்க்கேயுடன் நாகேஷ் வீட்டிற்குப் போனோம். ஒரு இரவு நேரம். நல்ல மூடில் இருந்தார். பேசிக்கொண்டிருந்தார். எங்கள் நாடகத்திற்கு அழைத்தோம். நான் நாடகமெல்லாம் அவ்வளவா பாக்கறதில்லை. யாராவது கம்பெல் பண்ணிக் கூப்பிட்டாப் போறேன். 
 “இல்லை ஸார், நாடகத்தில நீங்க சாதிச்சமாதிரி இன்னொருத்தர்  சாதிக்கப் போறதில்லை. நீங்க வந்து இந்த நாடகத்தைப் பார்த்தா எங்களுக்கு சந்தோஷம். வரணும் ஸார்” இது நான்.  

       நாகேஷ் தொடர்ந்தார், “ராவ் நான் என்னப்பா அப்படி சாதிச்சேன். எதோ வாய்ப்பு கிடைச்சுது பயன்படுத்திகிட்டேன். அவ்வளவுதான். நாடகம்னா என்னால மறக்க முடியாத நாடகம் ஒரு மராட்டி நாடகம்தான். 
 கொஞ்சநேரம் மவுனமாக இருந்தார். கண்ணை மூடினார், திறந்தார் “என்ன நாடகம்பா?. ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங் கோவா பக்கத்தில ஒரு சின்ன கிராமம். நாப்பது நாள் போன இரண்டு மூணு நாளைக்கப்பறம் ராத்திரி பொழுது போகலை .சினிமாவுக்கு போக பிடிக்கலை. அப்பதான் பக்கத்தில ஒரு தியேட்டர்ல ஒரு டிராமா நடக்கிறதா சொன்னாங்க. போனேன். பார்த்தேன். “
 மறுபடியும் அமைதி. “அவன் ஆக்டர், நாமெல்லாம் என்ன ஒண்ணுமில்லைன்னு புரிய வைச்சுட்டான். கதை என்னன்னா “ சொல்ல ஆரம்பித்தார். அவர் வீட்டு வாசலில் இருந்து முப்பது வருடங்களைக் கடந்து நாங்கள் மூவரும் கோவாவிற்குப் போனோம். ஒரு வயதான திருடன் கிராமத்துக்கு வெளியே இருக்கிற கோவிலில் தங்கி தன் திருட்டு சொத்துக் களை பதுக்கி வைப்பான். அந்த மண்டபத்தில் ஒரு மணி இருக்கும் அதை அப்படியே அடிப்பான் என்று கதை எங்கள் முன் அந்த மாமேதையால் நடிக்கப் படுகிறது. மெய்மறந்து கண்டு களித்தோம்.

“மறக்க முடியலை மறுநாளும் போனேன், அடுத்த நாளும் போனேன். இப்படி முப்பது நாளும் போனேன். அது டிராமா அது நடிப்பு அவர் ஆக்டர்.’சொல்வது யார் நாகேஷ். நினைவுகளில் அவர் மீண்டு வந்த பிறகு மீண்டும் ஒரு முறை நாடகத்திற்கு அழைத்து விட்டு வந்தோம். அன்று இரவு முழுவதும் மராத்திய நாடகம் தான். நாகேஷ் நம் நாடகத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை.
நாடக தினத்தன்று காலை ஏதோ ஒரு இனம் புரியாத பரபரப்பு, அவரிடமிருந்து எந்த போனும் இல்லை. 11 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டும். காரியதரிசி நடராஜன் டிராமா நல்லா இருக்குமா இந்த தடவைப் பார்த்துட்டுதான் அடுத்த தடவை சான்ஸ் பத்தி யோசிக்கணும் என்றார் வாய்ப்பு கொடுக்கும் அன்று.
11.10 இருக்கும் நடராஜன் வந்தார், மூர்த்தி யாருப்பா? “நான் தான் “ என்றேன். புது மாதிரி பார்த்தார். அப்பா நாகேஷ் போன் பண்ணினார் அவர் வந்துகிட்டிருக்கார். வந்தவுடனே ஆரம்பிங்க.
மகிழ்ச்சி வெள்ளம். குழுவினரிடையே பரபரப்பு. நாகேஷ் வருகிறார் நாகேஷ் வருகிறார். திரை இடுக்கின் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். வந்தார். நடராஜன் ஸார் அவர் பக்கத்தில் அமர்ந்தார்.
நாடகம் ஆரம்ப்பித்து மிகச் சிறப்பாக நடந்தது. திரை விழுந்தது. நாகேஷ் இருந்த நாற்காலி காலியாக இருந்தது. மேடைக்கும் வரவில்லை. அவர் எதிர்பார்ப்புக்கு நாடகம் இல்லையோ. ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போய்விட்டாரே என்று வருத்தமாக இருந்தது.


நாடகம் நன்றாக முடிந்து வாழ்த்து சொன்ன ரஸிகர்களை வழக்கமான உற்சாகத்தோடு எதிர் கொள்ள முடியவில்லை. திடிரென்று சலசலப்பு நாகேஷ் முன் வாசலில் காத்திருக்கிறாரம். என்னைக் கூப்பிட்டாராம்.
அடுத்த கணம் இருந்தேன். காலில் விழுந்து வணங்கினேன். “ஸாரிப்பா” என்றார். நாடகம் தான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று சொல்லப் போகிறார் என்று நினைத்தேன்.

      அவருக்கே உரிய டைமிங்கில் “உடனே வந்து பார்க்க முடியலை. நீ என்னை கட்டிப் போட்டுட்டே. அதான் இதுக்குப் போயிட்டு வந்தேன்” என்று சிகரெட் காண்பித்தார். 
 என் கண்களில் தண்ணீர் வந்தது. கட்டிப்பிடித்துக் கொண்டார். ராவ் பின்னிட்டே. ரொம்ப நல்லா இருந்தது. குறையே சொல்ல முடியலை. கீப் இட் அப். “
பக்கத்தில் இருந்த நடராஜன் ஸாருக்கு அன்று முதல் எங்கள் குழுவின் மேல் ஒரு மதிப்பு வந்தது. அப்பறம் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். 
அது என் வாழ்வில் ஒரு பொன்னாள். மறக்கவே முடியாது. ஒரு மாபெரும் நடிகனின் வாழ்வில் ஒரு சில கணங்கள் அவருடன் கழித்த வாய்ப்புக்காக ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன். 
அதன் பிறகு ஒரு உறவினர் திருமணத்தில் என் மனைவியுடன் சென்றிருந்தேன். நாகேஷ் வந்திருந்தார். ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். 
 என் மனைவியைப் பார்த்து அம்மா இவன் ரொம்ப நல்ல பையன், அவனை நீ நல்லா பத்திரமா பாத்துக்கணும்.” என்று கன்னடத்தில் சொன்னார்.
 என் மனைவி இன்று வரை நாகேஷ் சொன்னபடி என்னைப் பார்த்துக் கொள்கிறாள். 
   நாகேஷ் பார்த்த நாடகத்தை எனக்குக் காட்டி நான் போட்ட நாடகத்தை அவர் பார்த்தது ஒரு பரவச அனுபவம். 
              நாகேஷ் என்றால் நாகேஷ்தான்.