பாரதி பிறந்ததாலே ‘பாரதம் ‘/கோ.முத்துசுவாமி

சிவாயநம. நேற்றைய விருட்சம் நிகழ்வில் வாசித்த கவிதை:

‘பாரதம் ‘ எனும்நம் நாட்டின்
பழம்பெயர்க் காரணத்தின்
வேரதைத் தேடித் தேடி
விளக்குவர் பலவாய் மேலோர்!
ஆர்வலர் தொடர்ந்து செய்க
ஆய்வெலாம்; இனிமேல் நாமோ
‘பாரதி பிறந்த தாலே
பாரதம் ‘ என்போம் கேளீர்!

பாரத நாடும், தாய்வாய்ப்
பயில்மொழித் தமிழும், மண்ணின்
பூர்விகம் உணர்ந்து பாடும்
புவிக்கவிக்(கு) இரண்டு கண்கள்!
தாரகம் நாவில் ‘வந்தே
மாதரம் ‘; இதன்மேல் என்ன?
‘பாரதி எழுத்தில் மக்கள்
பாரதம் ‘ எழுந்த(து) என்போம்!

பக்தியில் தோயும் போதும்
பாரத உரிமை வாய்க்க
சக்தியை வேண்டி நின்றான்!
செல்லமாய்க் காதல் பொங்க
பத்தினிப் பெண்ணைப் பாடும்
பாட்டிலும், மண்ணின் மாண்பை
சித்திர மாகத் தீட்டி
சிந்தையை உருக வைத்தான்!

தீராத விளையாட் டின்பப்
பிள்ளை!ஆம்! கண்ணன் பாட்டோர்
ஆராத தமிழ்த்தேன்! அஃதில்
அருங்கனித் துண்டு கள்போல்
வீரமண் பார தத்தின்
உயர்வெலாம் பெய்து தந்தான்!
‘பாரதி உதித்த தாலே
பாரதம்! ‘ இதிலென் ஐயம்?