
ப்ரான்சிஸ் க்ருபா உடன் நான் நெருங்கி பழகியதில்லை. நண்பர் உமா வரதராஜன் ஆசியத்துவத்தில் இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் விரிவாக அவருடைய ‘கன்னி’ நாவலைப் பற்றி எழுதினேன். சென்னையில் ஒரு இலக்கிய சந்திப்பில் என் கட்டுரையை வாசித்து பயத்துடன் என்னை அணைத்து தடாலென என் காலில் விழுந்தார். பதறிவிட்டேன். அவர் கரத்தை பற்றிகொண்டு ” நான்தான் உங்கள் காலடியில் விழவேண்டும்” என்றதற்கு கிருபா தேம்பி அழுதுவிட்டார். இலக்கிய கோஷ்டிகள், முஸ்தீபுகள், அங்கீகாரங்கள், பரிவட்டங்களை உதறித்தள்ளிய மகா கலைஞன். தமிழ்நாட்டின் ஆர்தர் ரைம்போ! என்னை நெகிழ வைத்தவன். அழ வைத்தவன். காதலை கற்பித்தவன். மண்டியிட வைத்தவன். பிராத்தனையை கற்றுக்கொடுத்தவன். சகமனிதனை அரவணைத்தவன்.
சில வருடங்களுக்கு முன் என் நண்பர் உயர் காவல் துறை அதிகாரியை சந்தித்து உரையாடினேன். கொடூரமான குற்றவாளிகளை தினமும் சந்திப்பவர். நண்பரோ நேர்மையானவர். வன்முறையில் நாட்டம் இல்லாதவர். பேச்சுவாக்கில் காந்தி, டால்ஸ்டாய் பற்றி உரையாடியபோது ஃபிரான்சிஸ் கிருபாவின் ” கன்னி” நாவலை குறிப்பிட்டு அதை வாசிக்க சொன்னேன். அடுத்த வாரம் என் வீட்டிற்கே வந்து கண் கலங்கி வந்து நின்றார். தமிழ் நாவல்களில் அபாரமான படைப்பு ‘கன்னி”. அவர் பயின்ற வசீகரமான விவிலிய கிறிஸ்துவ சொல்லாடல்கள் ஆங்கிலத்தில் சாத்தியமா எனத் தெரியவில்லை. அவசியம் மேற்கில் செல்லவேண்டிய நாவல் இது.
இதே நாளில் இந்த நேரத்தில் போன வருடம் நண்பர் கவின்மலர் அவர் காலமானதை அழுதுகொண்டே சொன்னவுடன், இருவரும் புறப்பட்டோம். என் கையில் கன்னி நாவல். இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞன் ஒரு சந்தில் ரோட்டோரத்தில் கட்டிலில் அநாதையாக மேல் நோக்கி பார்த்து கிடக்கிறான். சகிக்க முடியவில்லை. அழுவதா அல்லது இந்த அபத்த அவலத்தை எப்படி உள்வாங்குவது எனப்புரியாமல் திணறிவிட்டோம். பக்கத்தில் ஒரிருவர் இருந்தனர். கவின்மலர் பலருக்கு செல்பேசியில் செய்தியை சொன்னார். ஒரு மணிநேரம் கழித்துதான் வெடித்து அழுதுவிட்டோம். அந்த ஒருமணி நேரத்தில் கன்னி நாவலை புரட்டிகொண்டிருந்தேன். சாராவும்,அமலாவும் அவனை நிராகரித்து கன்னியாக ஸ்தீரியாக மாறுகிறார்கள். அவனுக்கு இருவரும் அக்கா முறை. இன்செஸ்ட்(Incest) காதல். பிரான்சிஸ் பாண்டி மனப்பிறழ்வில் சிக்குகிறான். பெண்ணின் பிரியமும், காதலும் அவனுக்கு இறுதி வரையில் கிட்டவில்லை.
கிருபாவின் பிறந்த ஊரில் அவருடைய அடக்கம் நடந்தது. கன்னி நாவலை முத்தமிட்டு “ With Love Francis, Will meet You there. I don’t know when!” நான் கையெழுத்திட்ட கன்னி நாவலோடு அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
கன்னி நாவலை இப்படி முடித்திருப்பார்.கனவுலகத்தில் பிரான்சிஸ் பாண்டியும் சாராவும் ” நீந்தி நீந்தியே உயிரை மாய்த்துக்கொள்ளும் வரத்தை விழுங்கிய மீன்களென இரண்டு உயிர்கள் கடலின் அடியாழத்தை துளைந்து சிலும்பிய வண்ணம் தொலைந்து போயின”.
அவருடைய இரண்டு கவிதைகளை பகிர்கிறேன்.
(1) தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்ணெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்.
உன் ஈரக் கூந்தலை
கடலாய் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்.
உயரித்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி
நீருற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறிட்டடிக்கிறது ரத்தம்.
கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத்
தானமிடு.
(2) பாத்திரம் கூட அற்ற
பிச்சைக்காரனாய்
சூரியனை எழுப்பும்
குளிர்காலங்களில்
பனித்துளிகளை
நிதானமாகத் தானமிடும்
ஒற்றை விரலே
யாரின் கையுள் நீயிருக்கிறாய்?
தூரிகையின்றி நீ வரைந்த
மகத்தான ஓவியத்தில்
நானிருக்கக்கூடுமா
வண்ணமாகவேனும்.
எழுதுகோலின்றி எழுதிச் செல்லும்
இம் மகாகாவியத்தில்
நான் பெறுவேனா
துளி பாத்திரமேனும்…
அவரைப்பற்றி ஒரு குறும்படம் வெளிவருகிறது. அதில் நான் உரையாடியுள்ளேன். அதன் முன்னோட்டத்தை முதல் சுட்டியில் பார்க்கலாம்.
