இப்படியே இருக்கவிடுகணேசா.!/வே.கல்யாணகுமார்


அப்பா.. அப்பா.. கணேசா
ஆனை முகனே கணேசா
இப்படியே உன்னை கும்பிட்டேன்!
எல்லாம் உன்செயல் கணேசா!

ஒட்டுத் துணியும் எனக்கில்லை!
உன்னைப் போல நான் பிள்ளை!
கட்டிக் கொள்ளவும் மனமில்லை!
கடைசி வரையிலும்
மாப்பிள்ளை!

தன்னந்தனியாய் உனைப்போல..
தனியே அரச மரத்தடியில்..
சின்னக் குழந்தை மனசோடு..
சேவித்தே நான் வணங்கிடுவேன்!

மாம்பழச் சண்டை போடாமல்..
கொழுக்கட்டைக்கு ஏங்காமல்..
மறைப்பதற் கெதுவும் இல்லாமல்..
மழலையாகவே இருக்க விடு!

பிள்ளையாகவே இருந்து விட்டால்..
தொல்லை யாருக்கும் இல்லயடா!
சிதறு தேங்காய் போல் மனசு..
சிதறிப் போவதுமில்லையடா!

வளர்வதனாலே தொல்லையடா!
வஞ்சகம் மனதில் வளருதடா..
பிள்ளையாரப்பா கணேசா.!
பிள்ளையாகவே வையப்பா!