அக்கறை மனிதர் ஜ.ரா.சு/மாதவ பூவராக மூர்த்தி

என் அனுபவங்கள் என்றுமே இனிமையானவை. நண்பன் ஆர்க்கே ராமநாதன் சில வருடங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை மூர்த்தி இன்னிக்கு ஃபரியா ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு போகலாம் என்று என்னை MYLAPORE C.I.T COLONY யில் ஒரு ஹாலுக்கு அழைத்து சென்றான். அங்கே ஒரு இருபது பேர் இருந்தார்கள். சந்திப்பு துவங்கி யிருந்த்து. என்னை மூர்த்தி வங்கி ஊழியர் நாடக நடிகர் பூர்ணம் ஸார் குழுவில் இருக்கிறார் என்று அறிமுகப்படுத்தினான்.
அங்குதான் அவரை முதலில் சந்தித்தேன். அவரது படைப்புகளை முன்னமே படித்திருந்தாலும் அன்றுதான் அவரை நேரில் சந்தித்தேன். அவர்தான் குமுத்தின் தூண்களில் ஒருவரான ஜ.ரா.சு என்ற பாக்கியம் இராமசாமி. அந்த சந்திப்பில் எழுத்தாளர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை மாலை 4 முதல் 5.30 வரை கலந்து கொண்டு ஆறு நிமிடம் பேசலாம். அங்கே ராணிமைந்தன், அறந்தை மணியன், லேனா தமிழ்வாணன். வாதுலன் கடுகு போன்றவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து அந்த சந்திப்பில் கலந்து கொண்டு என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். ஜ.ரா.சு அவர்கள் என் மீது அதிக அக்கறை கொண்டிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னை இந்த சந்திப்பின் குறிப்பு எடுத்து எழுதிக் கொண்டு வரச்சொன்னார். நானும் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன். அவருக்கு மகிழ்ச்சி எப்படி எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொண்டு எழுதுறீங்க என்று வியந்து பாராட்டினார் அதனை அவர் உதவியாளர் அனில் ராஜ் அவரது இணைய தளத்தில் (www.appusami.com) பதிவு செய்தார். அதில் அவரது கதைகளையும் மற்றவர்கள் படைப்புகளையும் பதிவு செய்வார்.
இந்த அக்கறை குறிப்பு எனக்கு எழுதமுடியும் என்ற நம்பிக்கை கொடுத்தது. நான் முகநூலில் என் அனுபவங்களை பதிவு செய்து கொண்டிருந்தேன். அவர் இல்லத்திற்கு 42 ஹாரிங்டன் சாலைக்கு அழைத்து சென்றார். நான் அடிக்கடி அங்கு போய் அவருடன் பேசிக்கொண்டிருப்பேன். திருமதி.ஜ.ரா.சுவும் என்னை அன்போடு அழைத்து பேசிக்கொண்டிருப்பார். நான் நடிக்கும் தொடர்களின் அனுபவங்களையும் நாடக அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து கேட்பார்கள். காபி சிற்றுண்டி சாப்பிடுவேன். அவர் எழுதிய அப்புசாமி சீதாப்பாட்டி கதை புத்தகங்களை எனக்கு பரிசாக அளித்தார். அவரோடு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. வீடு திரும்பும் போது அனில் ராஜ் என்னை அவர் வண்டியில் கொண்டுவிடுவார். என் நாடகங்களுக்கு வந்திருக்கிறார். அவருடன் மீட்டிங் நிறைய போயிருக்கிறேன்.
நான் அவருடைய வழிகாட்டுதலில் நகைச்சுவை கதைகள் எழுத்த் துவங்கினேன். படித்து மிகவும் பாராட்டுவார். அவர் சீதாப்பாட்டி அப்பாசாமி கற்பனைப் பாத்திரங்களை படைத்த்து போல் நான் கடுகு பாணியில் பிருந்தா மூர்த்தி பிருந்தாவின் தம்பி பாச்சு பிருந்தாவின் அப்பா அம்மா என் அப்பா அம்மா அக்கா கமலா போன்ற பாத்திரங்களை உருவாக்கி சிறுகதைகள் எழுத்த்துவங்கினேன். ஓரள்வுக்கு எழுதும் வித்தை கை வந்து விட்ட்து. லேடிஸ் ஸ்பெஷல் அமுத சுரபியில் என் கதைகள் வெளிவரத்துவங்கின. முக நூலிலும் எனக்கு நிறைய நண்பர்கள் கமெண்ட் போட்டார்கள்.
வானதி பதிப்பகம் சரவணன் அவரைப் பார்க்க வருவார். அவரிடம் சொல்லி என் முதல் சிறுகதைத் தொகுப்பான சிரிக்கலாம் வாங்க வெளியிட காரணமாக இருந்து அதற்கு நல்ல முன்னுரை எழுதி என்னை ஊக்குவித்தார். அதன் பிறகு நான் இடம் பொருள் மனிதர்கள் என்ற புத்தகத்தையும் நவீன விருட்சம் மூலமாக வெளியிட்டேன்..
அக்கறையின் ஆண்டுவிழா ஒன்றில் அவரது சிறுகதை ஒன்றை நாடகமாக்கி அரங்கேற்றினேன். என் எழுத்து திறமைக்கு அவர்தான் குரு.
எல்லா நல்ல வைகளும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பது நியதி போல. என் அருமை ஆசான் என்னை விட்டும் இந்த உலகை விட்டும் பிரிந்தார். அந்த இழப்பை என்னால் ஈடுசெய்ய முடியவில்லை. ரொம்ப நாள் அவர் நினைவு ஆக்ரமித்தது. இன்றும் அவர் என் நினைவில் வாழ்கிறார். அவர் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி மீது மிகுந்த பாசம் வைத்திருப்பார். எப்போதும் எடிட்டர் என்று நினைவு கொளவார்.நானும் இவரை நினைவு வைத்திருக்கிறேன். என் எழுத்துக்கு அவர்தான் ஆசான்.