விருட்சம் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி – 62/மீனாட்சி சுந்தரமூர்த்தி

நாள்-25.08.23.                                                  

1.முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல்,

2.பீகார் மாநில நாட்டுக் கதைகள்

மனித இனம் தோன்றியது என்றோ அன்றே கதைகள் தோன்றி விட்டன எனலாம்.நிகழ்வுகளும் அதைச் சார்ந்த எண்ணங்களும்,

அது போலச் செய்தல் என்ற தூண்டலினால் உண்டான புனைவுகளும் கதைகளாக மலர்கின்றன. வெள்ளைக் குதிரையில் அதுவும் பறக்கும் சிறகுகள் கொண்ட அழகான வெள்ளைக் குதிரையில் கடல் ஏழு  தாண்டி  காடு மேடு சுற்றி ,மேகங்களின் ஊடே பறந்து செல்வது பற்றிக் கேட்கும் பிள்ளை மனது மட்டுமல்ல வளர்ந்தவர்களின் மனதும் அதில் இலயித்து விடுகிறது. 

அந்த வகையில் ..

1.முபீன் சாதிகாவின் நூறு புராணங்களின் வாசல் ;- ‘வாள்  .

. கதைச் சுருக்கம்;

முபீன் அவர்களின் ,’வாள்’ கதையானது 2 பக்கஅளவிலான குறுங்கதை, வாள் வீரன் ஒருவனைப் பற்றியது. அவன் வாள்பயிற்சி கற்றவன். அவன் வீட்டில் ஒரு வாள் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது.  

அவனது பரம்பரையினரின் வீரம் சொல்வதின் அடையாளமாக உள்ளது. அது எப்படி வந்தது, அதன் வரலாறு என்ன என்பதையெல்லாம் அவனது தாயோ தந்தையோ இல்லை மற்ற உறவுகளோ சொன்னதில்லை, ஆனால் அவன் அதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலில் இருக்கிறான் ,

ஒரு நாள் அதை நினைத்துக்கொண்டு படுக்கிறான்  ஒரு கனவு இவன் இந்த வாளை இடுப்பில் செருகிக் கொண்டு குதிரையில் காட்டில் செல்கிறான், எதிரில் ஈட்டி ஏந்திய வீரன் ஒருவன் வருகிறான் , இவன் மரத்தடியில் நிற்கிறான் , அவன் எறிந்த ஈட்டியை வாளால் தடுக்கிறான்.

பின் வாட்போர் ஆரம்பம். இவன் அவனைத் தோற்கடித்து மண்டியிடச் செய்கிறான் , இனி வாட்போர் செய்யக்கூடாது என உறுதிமொழி  வாங்கிக் கொள்கிறான். அதன் பின் ஒரு நாட்டிற்குள் பிரவேசிக்கிறான் அங்கும் வாட்போர் நடந்துகொண்டிருக்கிறது. இவனும் கலந்து கொள்கிறான். அனைவரையும் வெல்கிறான்.ஆனால் எவரையும் கொல்லாமல் உறுதிமொழி வாங்கிக் கொள்கிறான். அரசன் இது எப்படிச் சரியாகும் என்று கேட்டுக் கொண்டே இவன் எதிர்பாராத வகையில் வாளெடுத்து வீச அதை இலாவகமாகத் தடுக்கிறான். பின்னர் அரசனோடு வாட்போர் நடக்கிறது. அரசன் தோற்று இவனை அரசனாக்கி விட்டுச் செல்கிறான்.இவனும் எல்லோரையும் வென்று உறுதிமொழி வாங்கிக் கொண்டிருக்கிறான். அந்தச் சமயத்தில் ஒரு வீரன் இவனிடம் எத்தனை நாள் இப்படி முடியுமெனக் கேட்டுக்கொண்டே வாளெடுத்து வீச அதைத் தடுக்க முனைந்தபோது அவனது தலை எதிர்பாராமல் துண்டிக்கப்படுகிறது.விழித்துக் கொள்கிறான். கனவு கலைகிறது. திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் பார்க்கிறான். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த வாளிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.

கதை பற்றிய பார்வை:

இந்தக்கதை பற்றிச் சொல்வதெனில் இது உளவியல் சார்ந்த நிலை. ‘ தூக்கத்தில் நடக்கும் வியாதி ‘  இதை சோம்நம்புலிசம் என அழைக்கிறது மருத்துவ உலகம். இது இவனுக்கு இருந்திருக்கலாம்.

இந்த நோய் கொண்டவர்கள் தூக்கத்தில் நடப்பது, அப்போது காண்பது, சூழல்,இருக்கும் இடம் எதுவும் இவர்களுக்குத் தெரிவதில்லை, ஒரு வகையில் உணர்வு வயப்பட்ட நிலை, கோவில்களில் சாமி வந்து ஆடுவதைப் பார்த்திருப்போம். அப்போது என்ன நடக்கிறது? அருள் கேட்பவர்களுக்கு சொல்லும் பதில் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை, அதைப் போன்ற ஒரு உணர்வு வயப்பட்ட மயக்க நிலைதான் தூக்கத்தில் நடப்பதும். 

இவர்கள் திடீரென எழுந்து நடப்பார்கள் அல்லது சில வேலைகளில் ஈடுபடுவார்கள். இதை மையப்படுத்தி இந்தியில் ,’முங்கேரிலால் ‘கி ஹசீன் சப்னே’ என்றொரு நெடுந்தொடர் தொலைக்காட்சில் ஒளிபரப்பானது.  இதே போல் திரைப்படம் ஒன்றில் காவலரான கவுண்டமணி திடீரெனத் தூங்கிவிட்டு செய்யும் செயல்களும் (கைதியை திறந்து வெளியில் அனுப்புவது) நகைச்சுவையாக அமைந்திருக்கும். பல்வேறு சமயங்களில் விபரீதமான  செயல்களும் உயிரிழப்புகளும் நடப்பதுண்டு. 

சரியான தூக்கமின்மை,மருந்துகளின் ஒவ்வாமை,மன அழுத்தம், அதிகமாக மது அருந்துதல்  போன்றவை இதற்கான காரணங்கள் எனப்படுகின்றன.

. வாள் கதையின் நாயகனும் வாளைப்பற்றியே அதிகமாகச் சிந்தனை  செய்து இப்படி நோய்க்கு ஆட்பட்டிருக்கலாம், அவன் தூக்கத்தில் வாளெடுத்துச் சென்றிருக்கலாம், விபரீதம் நடந்திருக்கலாம் என எண்ணுவதற்கான வாய்ப்பு  அதிகம் உள்ளது என்பதை ,’ வாளிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது’  எனும் இறுதி வரி உறுதி செய்கிறது.

ஆக எளிய நடையில், அழகான சொல்லாக்கத்தில் வாள் வாசகர்களை ஈர்க்கிறது என்பது மிகையன்று.. 

 இனிய எளிய நடையில் குறுங்கதை படைத்து ,பல்வேறு பரிமாணங்களில் வாசிப்பவரைப் பயணிக்க வைப்பதைத் திறம்படச் செய்து வெற்றி பெற்றுள்ளார்  முபீன்.                

2. பீகார்  மாநில நாட்டுக் கதைகள் – தாமோதர்:

கதைச் சுருக்கம்;

முசபர்பூர் மாவட்டத்தில் பட்னா கிராமத்தில் உள்ள தாமோதர் கோயிலைப்பற்றிய கதை, இதே மாவட்டத்தில்  ஜயிந்த்பூர்  என்ற ஊரில்  திருபுவன் ஸெயின்வால் என்ற பெரியார் பல கிராமத்து ஜெயின் குடும்பங்களுக்கு இவரே குரு, இவரின் சீடர்கள் குருவிற்கு ஏராளமான நிலபுலன்களும், செல்வங்களும் மானியமாக வழங்கி இருந்தனர்.ஆனால் இவரோ எதிலும் பற்று வைக்காது அறம் வளர்க்கும் செயல்களையே செய்து வருகிறார். இவரின் புகழ் ஓங்குகிறது. பொறாமை கொண்ட சில சீடர்கள் இவரைக் கொன்று சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி செய்கின்றனர். இதை அறிந்த இவரின் பக்தையான ஒரு முதியவள் இவரை ஊரை விட்டுச் செல்ல வேண்டுமென வேண்டுகிறாள். ஸெயின்லால் தாஸ் ஊரை விட்டுப் புறப்படுகிறார், ஹஜிபூரை நெருங்குகையில் புதர்களின் பக்கமிருந்து ஒரு குரல் இவரை மீண்டும் மீண்டும் அழைக்கிறது.அங்கு சென்று பார்க்கிறார். பூமியிலிருந்து மீண்டும் குரல் புதர்களை விலக்கிப் பார்க்க இவர் இதுநாள் வரை வழிபட்ட  குலதெய்வமான தாமோதரன் சிலை தென்பட்டது. அதைக் கொண்டு வந்து பட்னாவில் கோவில் எழுப்புகிறார் சுற்றிலுமிருந்த சொத்துகள் கோவிலின் உடைமை ஆகின்றன. ஜயிந்த்பூரில் இவருக்கிருந்த சொத்துகளும் இதில் அடங்கும்.

இந்த கதை பரவலாக அங்கு பேசப்பட்டு வருகிறது.

கதை பற்றிய பார்வை:

இது ஆன்மீகம் சார்ந்தது அதிசயம் நிறைந்தது, இன்னொரு வகையில்  பார்த்தால் இதுவும் உளவியல் சார்ந்தது எனலாம்.அவர் குரு ஸெயின்லால் தாஸ்  சொந்த ஊரை விட்டு, வழிபடு கடவுளை விட்டு உயிருக்கு அஞ்சி ஓடவேண்டிய நிலை வந்ததே என்று நினைத்து மருகியிருப்பார்.

அதுமட்டுமல்லாது தனது தெய்வத்திற்கு தான் பெற்ற செல்வத்தை வைத்து ஆலயம் ஒன்று எழுப்ப நினைத்திருப்பார்..அது நிறைவேறாமல் போனதே என எண்ணி வருந்தியிருப்பார்.

எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் அதனால்தான் யாரோ பேசுவது போலவும்,அழைப்பது போலவும், தோன்றுவதாக உளவியல் சொல்கிறது. .அதுபோல்தான் குருவிற்கு புல்லின் நடுவிலிருந்து குரலொன்று கேட்கிறது.

எண்ணங்களே செயலாகின்றன.உளவியல்படி வலிமை வாய்ந்த எண்ணங்கள் அவை நிறைவேறுவதற்கான சூழலைத் தாமே உருவாக்கிக் கொள்கின்றன.

இனி ஆன்மீகத்தின் வழியில்,

உலக நன்மை கருதிய மகான்களின் எண்ணங்கள் நிறைவேறுவதை இறையருள் என்கிறோம்.

ஒப்பீடு:

முபீனின் வாள் கதையும், பீகார் மாநிலத்தின் தாமோதர் கதையும் உளவியல் எனும் பொருண்மையில் பொருந்துகின்றன.

முன்னது எதிர்மறையான விளைவையும், பின்னது நேர்மறையான விளைவையும் தருவதில் வேறுபடுகின்றன.