டொராண்டோ தீவுகள்!/ஜெ.பாஸ்கரன்

‘கன்னித்தீவு’ போல ஏதோ கதை சொல்லப்போகிறேன் என நினைப்பவர்கள் மன்னிக்கவும்; டொராண்டோவின், தெற்குப் பகுதியில், சுமார் 25 நிமிடம் ஃபெர்ரியில் பயணம் செய்தால், அங்கிருக்கும் 15 சிறிய தீவுகள் – டொராண்டோ தீவுகள் – பற்றிய சில சுவாரஸ்யங்கள் பற்றிய கட்டுரை இது!

டொராண்டோ மெயின் நிலத்துடன் தீபகற்பமாக விளங்கிய நிலப்பகுதி, 1858 ஆம் ஆண்டு புயலில் துண்டிக்கப்பட்டு, சுமார் 820 ஏக்கர் நிலப்பரப்புள்ள தீவுகளாக உருமாறின! 500 அடி அகல நீர்ப்பரப்பு இத்தீவுகளை மெயின் நிலத்திலிருந்து பிரிக்கின்றது.

ஆரம்ப காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த மக்கள் – மிஸிசாகாஸ் – இந்தத் தீபகற்பம் மெனசிங் (Menecing) என்ற பெயரில் புனிதத் தீவாக இருந்தது. பின்னர் பிரிட்டிஷ் 1787, 1805 வருடங்களில் மிகக் குறைந்த பொருட்களைக் கொடுத்து (1700 பவுண்டுகளுக்கு) தீவுகளை வாங்கி விடுகிறார்கள்! பின்னர் 2010ல் சில திருத்தங்கள் மூலம் அம்மக்களுக்கு 145 மில்லியன் டாலர் பணமாகக் கொடுத்து (காம்பென்சேஷன்) கனடா அரசு இத்தீவுகளை மிஸிசாகாஸ்களிடமிருந்து முழுமையாகப் பெறுகிறது! பின்னர் கனடா அரசு பல வகையில் இந்தத் தீவுகளைச் சுற்றுலாத் தலமாக மாற்றி, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், படகு சவாரி, லைட் ஹவுஸ், பள்ளிக்கூடம், கேளிக்கை விளையாட்டுப் பூங்காக்கள், படகு சவாரிகளைப் பார்வையிட ஸ்டேடியம் என உருவாக்கியது. 1937 ஆமாண்டு புதிய விமான நிலையம் கட்டும்போது, பல பூங்காக்களும், ஸ்டேடியமும் அழிக்கப்பட்டன. பழங்குடி மக்கள் மற்ற தீவுகளுக்குக் குடிபெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, நார்வேஜியன் விமானிகளுக்கு (RNAF) இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசுக்கும், இத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கும் நிலத்தகராறு ஏதாவது ஒரு முறையில் நடந்து கொண்டே இருந்தது. இங்கு இருப்பவர்கள் தங்கள் நிலங்களையோ, சொத்துக்களையோ தம் விருப்பத்திற்கு விற்றுவிட முடியாது. 1993 ல் இயற்றப்பட்ட சட்டம் மூலம், இங்கு சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பது என்பது முறைபடுத்தப்பட்டு, ‘டொராண்டோ ஐலண்ட்ஸ் ரெஸிடென்ஷியல் கம்ம்யூனிடி டிரஸ்ட்’ மூலமே குலுக்கல் முறையில் செய்யப்படுகிறது. 500 க்கும் மேற்படவர்கள் தற்போது விற்கவோ அல்லது வாங்கவோ, காத்திருப்பதாகத் தகவல் குறிப்பொன்று சொல்கிறது.

அரசியல் மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள் என டொராண்டோ தீவுகளின் வரலாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உள்ளது! 1787 ல் பிரிட்டிஷ் டொராண்டோ தீவுகளை வாங்குவதில் தொடங்கி, 1993 ல் ரெஸிடென்ஷியல் கம்யூனிடி டிரஸ்ட் வரும் வரை சுவாரஸ்யமான ஒரு வரலாற்றுச் சங்கிலி வாசிக்கக் கிடைக்கிறது!

செண்டர் தீவு தவிர, ஆல்காங்குவின் தீவு, ஒலிம்பிக் தீவு இரண்டும் பெரிய தீவுகள். மற்ற சிறிய தீவுகள்: மக்’ஸ் தீவு. காட்டுத் தீவு, பாம்புத் தீவு, வடக்கு/தெற்கு சிப்பேவா தீவுகள், RCYC தீவு, ஹன்லான்ஸ் தீவு. தீவுகளுக்கிடையே படகில் செல்ல, 10க்கும் அதிகமான நீர்வழிகள் உள்ளன. இதில் ஹன்லான்ஸ் தீவு ‘Clothing optional’ பீச் (மறு பெயர் நிர்வாண பீச்) எனப்படுகிறது. ஆடைகள் ஏதுமின்றி, பிறந்த மேனிக்கு இங்கே பீச்சில் உலவலாம், குளிக்கலாம் ….. லைசென்ஸ் பெற்ற இடம் எனப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செல்லலாம், வேடிக்கை பார்க்க மட்டும் என்றால், உடையுடன் உங்களை அவர்கள் அந்நியமாகப் பார்க்கக்கூடும்!

சுமார் 300 வீடுகள், ஆங்கிலம் பேசும் மக்கள்தொகை( 700 பேர்!) – 2 Day care centres, ஒரு பள்ளிக்கூடம், ஒரு சர்ச் ஆகியவை இன்று இந்தத் தீவுகளில் இயங்குகின்றன.

ஓக்வில் வீட்டிலிருந்து ப்ரோண்ட் ரயில் நிலையம் வந்து, போன் முகம் காட்டி, தானியங்கியில் டிக்கட் வாங்கிக்கொண்டோம். இளம்பச்சை, கரும்பச்சை நிற உயரமான ரயில் நொடி பிசகாமல் வந்துநின்றது. வீல் சேர், குழந்தைகளுக்கான பெராம்புலேடர் ஏறுவதற்கு வசதியாகச் சற்று உயரமான இடம் – அதற்கு நேராக ரயில் பெட்டியின் வாயிற்கதவு இருக்கும்படி நின்றது ரயில். கதவு திறந்தவுடன் சிப்பந்தி ஒரு பல்கையைப் போட, வீல்சேர் எளிதாக ரயிலில் ஏற்றப்பட்டது! (நம்ம ஊரில் இந்தத் துல்லியம் கிடையாது – இரண்டு மூன்று அடி முன்னேயோ, பின்னேயோ நிற்கும் வண்டி). சிறிதும் ஆட்டமின்றி விரைவாகச் சென்றது – அரை மணியில் Dவுன் Tவுன் வந்து, டிம் ஹார்ட்டனில் ஒரு காப்பி குடித்து (ஹூம்… பெயர்தான் காப்பி..), வானுயரக் கட்டடங்களின் கீழே சிறு லில்லிபுட் மனிதர்களாய் ஊர்ந்து சென்றோம்!

விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் நாடு இது. ஹாக்கி வீரர்களின் சிலைகள், ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான கடைகள், ஸ்டேடியம் எனப் பார்த்தபடி சென்றோம். ஃபெர்ரி ஸ்டேஷன் வந்து, செண்டர் தீவுக்கு செல்லும் வரிசையில், இல்லை கும்பலில் நின்றோம். ஹான்லேன் பாய்ண்ட், மற்றுமொரு தீவுக்கான கும்பலும் நின்றுகொண்டிருந்தது. ஃபெர்ரி வந்தவுடன், எல்லோரும் மெதுவாக ஏறிக்கொண்டோம்.

ஆண்டாரியோ ஏரியில் அமைந்துள்ள இந்த தீவுத் தொடர்கள் முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ளன. இவற்றில் மிகப் பெரியது செண்டர் தீவு (Centre Island), பிறைச் சந்திரன் வடிவில் உள்ளது. டொராண்டோ டவுன் டவுன் (Down town) ஃபெர்ரி ஸ்டெஷனிலிருந்து 25 நிமிடம் பயணம் – 300 க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு, அலுங்காமல் செல்லும் இரண்டு மாடிக் கப்பல் – செண்டர் ஐலண்டில் நம்மை இறக்கி விடும். போகின்ற வழியில் மற்ற தீவுகளின் விளிம்புகள், கட்டடங்கள், பாய்மரக் கப்பல்கள், ஒரு லைட்ஹவுஸ் எனக் கண்ணாடி ஜன்னல்கள் வழியே பார்த்துக்கொண்டே பயணிக்கலாம். எல்லா வயதினரும், எல்லா நாட்டினரும் பயணம் செய்வது, பிளாஸ்டிக் ஹெல்மெட்டுடன், கையில் சைக்கிளைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்யும் இளவட்டங்கள், இடுப்பில் மற்றும் கழுத்தில் தொங்கும் ‘ஜூலா’ பையில் கைக் குழந்தைகள், சுற்றுப்புறம் மறந்து காதலில் தோய்ந்திருக்கும் ஜோடிகள், இங்கும் செல் போனில் கவிந்திருக்கும் முகங்கள், நிழலாகப் போட்டோ எடுத்தபடி, நேரில் இருக்கும் நிஜத்தை ரஸிக்க மறுக்கும் பிறவிகள், அரைகுறை உடை சுவாரஸ்யங்கள் என பார்த்து, வியந்து கொண்டிருக்கும்போதே, நாம் இறங்கும் இடம் வந்துவிடுகிறது!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் புல்வெளிகள், உயரமான, படர்ந்த மரங்கள், வளைந்து செல்லும் நடை பாதை, ஏரிகள், சிறிய நீர்ப்பாதைகள், அதன் மேல் மரப்பாலம் என ஒரு புகைப்படம் போன்ற காட்சி! பச்சைக் கொடிகள் தலையில் சுற்றியிருக்க, தூணின் மேல் ஒரு கடிகாரம் நேரம் 2.16 என்றது! 15 தீவுகளின் வரைபடம் வரவேற்றது. இறக்கி விட்ட ஃபெர்ரி, திரும்புவோரை ஏற்றிக்கொண்டு ‘பாம்’ என்ற இரைச்சலோடு மெயின் நிலம் நோக்கிப் புறப்பட்டது.

டொராண்டோ தீவுகளின் மரங்கள் பற்றிய டூர், மற்றும் சுற்றிவர பேட்டரியில் இயங்கும் கார்கள் இருக்கின்றன. அன்று ஏதோ ஆடியோ வேலை செய்ய வில்லையென நிறுத்தி வைத்திருந்தார்கள்!

அழகான ஏரியும் ஏரிக்கரையும் – புல்வெளிகளில் அமர்ந்துகொள்ள இருக்கைகள். கொண்டுவந்துள்ள உணவை உண்ண நீளமான பெஞ்சுகளுடன் இருக்கைகள். சிரிப்பும் கும்மாளமுமாய் நான்கு பேர் – இரண்டு பாய்ஸ், இரண்டு கேர்ள்ஸ் – ஏரிக்கரையில் அமர்ந்து உண்டுகொண்டும், குடித்துக்கொண்டும் இருந்தார்கள். கீழே எதையும் போட வில்லை, பிறருக்கு எந்த தொந்திரவும் கொடுக்கவில்லை! குழந்தைகள், பெற்றோருடன் வந்திருந்த குடும்பங்கள், காதலர்கள், நண்பர்கள்…. வார இறுதியைக் கொண்டாடுகிறார்கள்!

ஏரிக்கரையில் நின்றுகொண்டு தூரத்திலிருக்கும் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு வயதானவர்கள் – என்னையும் விட என்று அறியவும்! – ஒரு அழகிய படகில் துடுப்புப் போட்டு சென்று கொண்டிருந்தனர். முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. வாத்துகள் நீந்திக்கொண்டிருந்தன. கரையருகில் ஒரு வாத்து தலையைக் குனிந்து நீரில் முழுகித் தன்னைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது! கரையில் வெண்ணிற சீகல் பறவைகள் நடை பயின்றுகொண்டிருந்தன. (தப்பிச்சீங்க. கவிதை எனக்கு வராது – அசந்தால், கவிதை எழுதிவிடும் அபாயம் இருந்தது).

குழந்தைகளுக்கான அம்யூஸ்மெண்ட் பார்க், சிறிய உணவகம், பிட்ஸா கடை, நன்கு பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள்! சிப்ஸ் தின்ற பிறகு, கவனமாகப் பிளாஸ்டிக் கவரை கறுப்பு நிற குப்பை டிரம்மைத் தேடிச் சென்று போடும் நம்மூர்வாசி!

படகுகள், சைக்கிள்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. சின்ன கான்கிரீட் பாலம் கடந்தால், அழகிய ஃபவுண்டன். அதையும் தாண்டிச் சென்றால் கடல் மீது அரை கிமீ தூரத்திற்கு ஒரு பாலம். திசைகாட்டி, நயாகரா அருவி 65கிமீ என்றது. (நம்ம ஊர் போலத்தான் – ஒரு கைகாட்டிப் பலகையில் கண்ட ஸ்டிக்கர்களையும் ஒட்டி, பெயர் தெரியாமல் செய்திருந்தார்கள்!).

நடைபாதையின் இரண்டு பக்கமும் வித விதமான வண்ணங்களில் பூச்செடிகள். ஒரு சிறிய போர்டில் முன்பிருந்த முக்கியமான வீதிதான் இப்போது நாம் நடந்து கொண்டிருக்கும் நடைபாதை என்ற குறிப்பு இருந்தது. 1905 களில் நீளமான குளம், சாலையோரக் கடைகள், ஒரு ஜெனரல் ஸ்டோர், ஒரு கசாப்புக் கடை, பால், தயி, வெண்ணை விற்கும் டெய்ரி, ஒரு படகுத் துறை, லாண்டரிகள், பல ஓட்டல்கள், கேசினோ, சினிமா தியேட்டர் என இருந்த ‘மேனிடாவ்’ சாலை – 1956ல் மெட்ரோபாலிடன் டொராண்டோ கவுன்ஸில் மூலம் ‘டொராண்டோ ஐலண்ட் பார்க்’ உருவாக்க, அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது!

இரண்டு மணி நேரம் இயற்கைச் சூழலில் திரிந்துவிட்டு, திரும்பினோம். தீவிலிருந்து டொராண்டோவின் Dவுன் Tவுன் பார்ப்பதற்கு மிகவும் அழகு! ஃபெர்ரி, நடை, ரயில், கார் என பயணித்து வீடு வந்து சேர்ந்தோம். டிம் ஹார்ட்டனில் காப்பி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்!

ஊட்டி, ஏற்காடு போன்ற இடங்களில் படகுத் துறைகளில் கிடக்கும் குப்பைகளும், சரியாகப் பராமரிக்கப் படாத கடைகளும், சுழல்களும் நினைவுக்கு வந்தன. இங்கும் சம்பளத்திற்குத்தான் வேலை செய்கிறார்கள், ஆனாலும் ஏதோ தன் சொந்த இடம் போல அவ்வளவு பொறுப்பாக, ரூல்களைப் பின்பற்றி, அதே சமயம் உதவியாகவும் இருக்கிறார்கள். நம்ம ஊரில் நம் பங்கு குறைவோ? எவ்வளவு சுற்றுலாத் தலங்கள் நம் ஊரில் நாசமாகப் போகின்றன …. வருத்தமாக இருக்கின்றது!

2 Comments on “டொராண்டோ தீவுகள்!/ஜெ.பாஸ்கரன்”

  1. அருமையான “பசுமை”ப் பயணக் கட்டுரை!
    இத்தீவுகள் பற்றி அதிகமாக யாரும் எழுதியதில்லை!
    மிக்க நன்றி!👏👌🙏🌺

Comments are closed.