அருண் கொலாட்கர் கவிதை

தமிழாக்கம் : இரா.முருகன்

கிழவி

ஐயா உங்களை.
லாடக் கோவிலுக்குக்
கூட்டிப் போறேன்.

உங்கள் கையைப்
பிடித்து இழுத்தபடி
கூடவே வருகிறாள
கிழவி.

அவளுக்கு ஐம்பது காசு வேணும்.

நீங்கள் லாடக் கோவிலை ஏற்கனவே பார்த்தாச்சு. தள்ளாடித் தள்ளாடி
உங்கள் கையை
இறுகப் பற்றிகொண்டு கூடவே அவள்.
கிழவிகளைத்தான் தெரியுமே,
அட்டை மாதிரி ஒட்டிக்கொள்வார்கள்.

நீங்கள் திரும்பி நின்று அவளைத்
தீர்மானத்தோடு பார்க்கிறீர்கள்.
இந்தக் கூத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதுதான்.

அப்போ. அவள் சொல்றாள்
இந்த உருப்படாத மலையிலே
என்னை மாதிரி
வயசான ஒரு பொம்பளை வேற என்னதான்
செய்ய முடியும்?

குண்டு துளைத்தது போல குனிந்த அவள் கண் வழியே வானத்தைப் பார்க்கிறீர்கள்.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் கண்களைச் சுற்றி எழுந்த விரிசல்கள்
அவளைக் கடந்து பரவுகின்றன.

குன்றுகளில் விரிசல் கோவில்களில் விரிசல் கண்ணாடித் தட்டு நொறுங்கியது போல் வானம் சுற்றிலும் உதிர்ந்து விழ,
சலனமே இல்லாமல்
கிழவி நிற்கிறாள்.

அவள் கையில்
சில்லறைபோல்
நீங்கள்
சுருங்கித்தான் போகிறீர்கள்.