(முகநூலில் வாசுதேவன் குறிப்பிட்டது )
பேராசிரியர் கல்யாணி என்ற கல்விமணி இருளர்களின் உரிமைகளுக்காக போராடி இயக்கத்தை தொடங்கியதை அவரே விவரிப்பதை வாசிக்கலாம்.
(சில வருடங்களுக்கு முன் காலச்சுவடில் வெளிவந்த அவருடைய நேர்காணலின் ஒரு பகுதி)
1993இல் அத்தியூர் விஜயா வழக்கு கவனத்திற்கு வந்தது. ஒரு கைதியைத் தேடிப் போவதுபோல் போய் அந்த இருளர் இனத்துப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். உண்மையில் இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை.
வழக்கமாகப் பாண்டிச்சேரி போலீசார் இவ்வாறு செய்வதுண்டாம். தமிழகப் போலீசாரும் இதற்கு உடந்தைதான். அதனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர்கள் பகுதியில் வின்செண்ட் என்பவர் ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறார். விஜயாவின் அண்ணன் ஏழுமலை அதில் உறுப்பினர். அதன் மூலம் புகார் தந்தி அனுப்பியுள்ளனர். விசாரணைகள் நடக்கின்றன.அப்போது இணை ஆட்சியர் ஜவஹர் விசாரித்து அதில் முகாந்திரம் இருப்பதாகச் சொல்லி, முதல் தகவல் அறிக்கை போடச் சொல்லிவிட்டார்.
இச்சம்பவம் நடந்து 15 நாள்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது.
இந்தச் செய்தி போலீஸ் செய்தி வழியாகத் தினசரி நாளிதழ்களுக்கு வந்தது. அதை வைத்து மணிவண்ணன் எனும் மனித உரிமைப் பத்திரிகையாளர் மூலமாகத் தகவல் வந்தது.
அதுவரை இருளர் என்று ஒரு பழங்குடியினர் சாதி இருப்பதே எனக்குத் தெரியாது. அதன் பின்பு பவனந்தி தலைமையில் உண்மையறியும் குழு அமைத்து, வழக்கறிஞர் லூசியானா போன்றோர் அங்கே சென்றோம்.
அந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையை இண்டியன் எக்ஸ்பிரஸிலும் தினமணியிலும் மிகப் பெரிய செய்தியாக வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து விஜயாவுடைய அப்பாவைத் திருப்பதி போலீஸ் அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த வழக்கைக் கையில் எடுத்தோம். நானும் சிஸ்டர் லூசியானாவும் திருப்பதி போய் ரத்தினம் முலமாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அவரை பெயிலில் எடுத்தோம்.
இதற்கிடையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் மூலமாக ஆந்திரா போலீஸ் விஜயாவின் அப்பாவைக் கடத்தியது ஹைதராபாத்தில் ஆங்கில நாளிதழில் வெளியானது. இதைப் படித்த இளைஞர் ஒருவர் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
எனவே விஜயாவின் தந்தையை ஹைதராபாத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு எங்களிடம் ஒப்படைத்தனர். அங்கே மனித உரிமைப் போராளி பாலகோபால் இருக்கும் இடத்தில் தங்கியிருந்தோம். ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தவர் இளம் வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்துக்கு வழிகாட்ட மூத்த வழக்கறிஞர் சீனிவாசலு என்பவரை நியமித்திருந்தனர்.
நாங்கள் சென்று கண்ணபிரானைப் பார்த்தோம். அவர் சீனிவாசலுவை அறிமுகப்படுத்தினார். அவர் இவ்வழக்கு குறித்த முன் தயாரிப்புகளோடு இருந்தார். அங்கே அன்று நீதிமன்றப் புறக்கணிப்பு வேறு.
எங்களிடம் போதிய பணமும் இல்லை. நாங்கள் தமிழகத்திலிருந்து சென்றிருந்ததால் வழக்கறிஞர் சங்கத்தினரே எங்களுக்குப் போக்குவரத்துக்கென 1,000 ரூபாய் கொடுத்தனர். இந்த வழக்கில் திருப்பதி போலீஸ் விஜயாவின் அப்பாவுக்கு 5,000 ரூபாய் தர வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் பின்பு விஜயா மூலமாகக் கிட்டத்தட்ட 16 வழக்குகள் எங்களிடம் வந்தன. அதனால் இவர்களுக்கென்று ஓர் அமைப்பு வேண்டும், அதற்கு ஒரு தலித் தலைமை ஏற்கவேண்டுமென நினைத்தேன்.
விடுதலைச் சிறுத்தைகளைச் சார்ந்த லாரன்ஸை வைத்து அமைப்பை உருவாக்குவதாக ஏற்பாடு. கடைசி நேரத்தில் அவரால் வர இயலவில்லை.
கூட்டம் திட்டமிட்டபடி கூடியதால் ரத்தினம், சிஸ்டர் லூசியானா ஆகியோர் ஆலோசனைப்படி நானே அந்த அமைப்புக்குத் தலைமையேற்க வேண்டியதாயிற்று.
எனவே 04.08.1996இல் மயிலத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் உருவானது.
01.10.1996இல் இருளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு பேரணி நடத்தினோம். வழக்கமான முழக்கங்களுக்குப் பதிலாகப் பழமலய் பாடல் எழுதிப் பாடினார்.
பல ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைத்ததுதான் நான் செய்த செயல்.””

இதை இஙுகு நீஙகள் பதிவிடாவிட்டால் எந்ரினககு தெரிந்து இருக்காது