பாட்டி படும் பாடு

நாகேந்திர பாரதி

காற்றோடு கலந்து வரும்
நூலான தண்ணீரைப்
பிடித்து வரும்

காய்கறிக்கும் பாலுக்கும்
கடைத்தெருவில் கால்நோக
நடந்து வரும்

வேலைக்குப் போகின்ற
வீட்டார்கள் குளித்தபின்னே
குளித்து வரும்

சேலைக்குப் போடுதற்கு
சோப்புக்கு மருமகளைக்
கெஞ்சி வரும்

காயெல்லாம் நறுக்கி வைத்து
கைகழுவி காப்பியினை
ஏந்தி வரும்

நோயெல்லாம் வந்துவிடா
நோக்கத்தில் சாப்பாட்டைக்
குறைத்து வரும்

தூங்காத ராத்திரியில்
தொலைக்காட்சித் தொல்லைகள்
தொடர்ந்து வரும்

நீங்காத சப்தத்தை
நிறுத்தும்படி சொன்னாலோ
சண்டை வரும்

கண்ணுக்குள் இருப்பவரின்
கனிவான பேச்சுக்கள்
காதில் வரும்

மண்ணுக்குள் போகின்ற
ஆசையினைச் சொல்லுகையில்
அழுகை வரும்