கபித்த ஃபலம்/லதா ஸ்ரீநிவாஸன்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாசுதம் ஸோக விநாஸ காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!!

இப்படித்தான் எனக்கு அறிமுகமானது கபித்த ஃபல். அதான் விளாம் பழம். Wood apple.

பக்கத்து வீட்டில்,எங்கள் வீட்டு பக்கம் கிளை விரித்த இளம் மரம். என்னுடைய இளம் வயது ஆர்வம். இலையை கசக்கி முகர்ந்தால் சற்று நார்த்தை வாசனையுடன்,சுவைத்தால் சற்று காரத்துடன் முள் மரமாக அறிமுகமானது.

நாரத்தை இலையுடன் இதையும் உப்பு புளி,மிளகாய் வற்றல் வைத்து அம்மியில் அரைத்தால், சாதத்துடன் சாப்பிட பித்தம் உமிழ்நீர் சுரப்பு நிற்கும் என்று தோட்ட வேலை தாத்தா மருத்துவ குணம் சொல்ல அந்த மரம் எனக்குள் ஒரு ஹீரோ போல் ஆனது.

எப்பொழுதாவது விழும் பழம்.
பெரியவர்களுக்கே போதாது. அதில் ஒரு நாள் எனக்கு மட்டும் வெல்லம் போட்டு அம்மா பிசைந்து கொடுக்க
அந்த ருச்சி அடி நாக்கில் பட்டு மூளையில் உறைந்தது. அந்த ருசி கண்ட மூளைக்கு எங்கு போனாலும்
என்ன மரம் என்று தேடும் வழக்கம் ஏற்படுத்தியது. இந்த பழத்தில் உள்ள ஒரு விதையில் அனைத்து மருத்துவ குணங்களும் உள்ளதால் ஒருத்தருக்கு ஒரு முழு பழம் சாப்பிட பலன் கிடைக்குமாம் கிராம வழக்கு.

தென்னை,பனை,கமுகு,ஈச்சை,ஆல்,
அரசு,பூவரசு,அத்தி,நாவல்,மா,பலா,கொய்யா,வாழை,சப்போட்டா,சீதா,மா,வேம்பு,புளி,புரசை,புங்கம்,நுணா,
முருங்கை,கல்யாண முருங்கை இன்னும் பல மரங்கள் கண்டவுடன்
அறிந்ததால் மனம் தோழமை கொண்டது.

சென்னையில் அடையார் வேளச்சேரி,கிண்டி,ராமாவரம் போன்ற பகுதிகளில் உயர்ந்த மர உச்சியில் வெள்ளை கிரிக்கெட் பந்து போல் அபரிமிதமாக காய்த்திருக்கும். கைக்கு எட்டாது,. அதனால் ஈர்ப்பு அதிகம்.

ஆனால் வரலஷ்மி விரதம்,விநாயக சதுர்த்தி போது வாங்கினால் வெறும் காயாக இருக்கும்.வைத்தால் பழுக்காமல் கெட்டுப் போகும். அல்லது காயாக இருக்கும். அதை அப்படியே சுட்டு துவையல் செய்ய வேண்டியது தான்.

இதற்கிடையில் வேலை மாற்றம்,மெட்ராஸ் விட்டு போகும் படி ஆனாலும், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள்
மனசு,கபித்த ஃபல் தேடி ஏங்கும்.

இப்படியே என் கபித்த ஃபல் ஆசை
நிறைவேறா ஆசையாகவே இருந்தது.

என் ஏக்கம் தீர்க்க இறைவன் என்னை
திரும்ப சென்னை அழைத்து வந்தான்.

ஒரு நாள் வாக்கிங் போன என் மாமிக்கு, தபால் அலுவலக தோட்டம் சுத்தம் செய்யும் பெண் அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தது போல் ஒரு நல்ல பெரிய கபித்த ஃபல் கொடுத்தார்.

ஆஹா…ஆஹா..இதுவல்லவோ சொர்க்கம் செல்லும் பாதை என்றது நாக்கு.

பிறகும் சில நாள் நல்ல பழம் காணோம்.

மாமியாருக்கு ஆஸ்த்மா அதிகமாக
பக்கத்தில் இருந்த சித்த மருத்துவர்
வில்வ ஜூஸூம், விளா மர கொழுந்து இலை கஷாயத்தில் பனம் கல்கண்டு
சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து
கொடுத்ததில் நல்ல முன்னேற்றம்.

பெரிய பெண் பிரசவம். இஸபெல்லாவிற்குள் நுழைந்து வண்டி பார்க் பண்ண இடம் தேடினால்..

ஆஹா கிடைத்தது நிழலாக நமக்கே நமக்கு என ஒரு ஸ்பாட்.

அழகாக பார்க் செய்து நிமிர்ந்தால்..
ஒரு எச்சரிக்கை பதாகை.

Caution:

Please do not park your vehicle under Wood apple tree. Falling of Fruits may damage your Head and your Vehicle.

அடப்பாவமே.அப்போ நீ வில்லனாடா என்று அந்த மரத்தை இரு தடவை பார்த்து நகர்ந்து வேறு இடத்தில் நிறுத்தினேன்.

ஆனால் மரத்தில் காயே இல்லை.

பிறகு எப்போ போனாலும், அந்த மரத்தை ஒரு உள் நாட்டில் சதி திட்டம் தீட்டி நம்மை தாக்கும் எதிரி போல் நினைத்து நகர்ந்தது நிஜம்.

ஆச்சா..இப்படியே நாள் போனது.
பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து
வளர்ந்தாள்.

கோடைக் காலத்தில் பாட்டி வீடு அனுபவிக்கும் பாக்யம் என் பேத்திக்கு கிடைக்க,ஒவ்வொரு நாளும் செலவில்லாமல் எங்கு அழைத்து செல்வது என்று யோசித்த மூளைக்கு, சற்றென்று தோன்றியது கிண்டி சிறுவர் பூங்காவும்,பாம்பு பண்ணையும்,கோவில்களும்,
கடற்கரையும்.

குழந்தைக்கு மான்,ஆமை,முதலை,கிளிகள், காண்பித்து வந்து அமர்ந்தால் தரை நெடுக விளாம்பழம். எனக்கே எனக்கா…. சந்தேகம். இவ்வளவு பழம் கீழே கிடக்கே.யாராவது குத்தகை எடுத்து பறிக்கிறார்களா என்று பார்த்தால்..யாருமில்லை.

நல்லதாக இரண்டு பழம் கையில் எடுத்தால். விரோதமாக
என்னை பார்த்து ஒரு கூறை மேல் அமர்ந்திருந்தது ஒரு பெரிய குரங்கு,

அதோட மைன்ட் வாயஸ்..:

அது என்னோடது..அல்பமாட்டம் பங்குக்கு வராதே!!

என் மைன்ட் வாயஸ்: ஏய் ப்ளீஸ் பா,இந்த இரண்டு மட்டும்..

அதற்குள் அங்கு வந்த வன காவல் பணியாளர் இன்னும் இரண்டு பழம் கொடுத்து குரங்கிடம் பேசி விரட்டினார்.

கைநிறைய பழத்துடன் மனம் குதி போட வீட்டுக்கு வந்து உடைத்து வெல்லம் போட்டு கிளறி, கஜானனுக்கு நைவேத்யம் செய்து
ஞ த்துளித்துளியாய் உள்ளங்கையில் வைத்து ருசித்தால்……ஆஹா…

சொர்கமே என்றாலும்…நம்மூரைப் போலாகுமா?

எல்லாம் சரிதான் இப்படி தேடித்தேடி அனுபவித்தால்,ஆன்மீகத் தேடல் னு
அலையும் மனது எப்பொழுது ஓடு விடுபட்ட விளாங்காய் ஆகும் என்பது ஈசனுக்கே வெளிச்சம்.

2 Comments on “கபித்த ஃபலம்/லதா ஸ்ரீநிவாஸன்”

  1. விரிவாக அழகாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்.மகிழ்ச்சி.
    இன்னும் ஒரு செய்தி.
    வங்காளத்தில்,இந்த பழத்தின் விழுதை நீரில் கலந்து நன்றாக கசக்கி அதை பெண்கள் தலையில் தேய்த்துக் குளிப்பது வழக்கம்.
    குளுமை.

Comments are closed.