கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதை ‘ தூரத்து உறவு /நாகேந்திர பாரதி


பெற்றோரை இழந்த பலருக்குத் தங்கள் தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘ தூரத்து உறவு ‘ கதை .சிலருக்குக் குற்ற உணர்வுகளையும் கொண்டு வரலாம் . ரத்த உறவு ‘ தூரத்து உறவாக மாறும் பரிதாபத்தை அப்படியே உருக்கமாகக் காட்டும் கதை. அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலருக்கு அனுபவமாய் இருக்கும் கதை.

பெற்றோரைப் பிரிந்து அமெரிக்காவில் வாழும் மகன் ஈமக்கிரியை செய்ய இங்கு வரும்போது காட்டும் காட்சி

அந்த வருணனைகள் சில .
மரணம் இறந்தவர்களுக்கே சாதகம் செய்கிறது . அதுதான் அவர்களின் இனிமையான நினைவுகளை மட்டுமே அழைத்து வருகிறது .
இந்த நாயகனும் அது போல அசை போடுகிறான் . அப்பாவின் நினைவுகளை இவ்வாறு .

‘என்ன வேணும்னாலும் பண்ணுங்க . எம் பையனை அடிக்க மட்டும் கூடாது . ‘ என்று பள்ளிக்கூட வாத்தியாரிடம் பணிவான எச்சரிக்கை விடுத்தது . இன்சூரன்ஸ் லோன் போட்டு இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தது . பர்சில் வெங்கடாஜலபதி படத்திற்கு கீழே , மீசை முளைக்காத மகனின் பழைய போட்டோ வைத்திருந்தது . முதல் முறை மகன் அமெரிக்கா போனபோது விக்கி விக்கி அழுதது . ஒவ்வொன்றாய் நினைவு வந்து ‘ அப்பா நல்லவர்தான் போலிருக்கிறதே ‘ என்று சிபாரிசு செய்தன.

இங்கே ஆசிரியர் சில விஷயங்களை நம் யூகத்திற்கு விட்டு விடுகிறார். இடையில் அப்பா கெட்டவர் என்று அவன் நினைவில் ஊறி ப் போன விஷயங்களை சொல்லாமல் மறைத்து . இப்போது , தனது இளம் வயது நினைவுகள் வந்து , அவரின் உடலைப் பார்த்து அவன் வருத்தப்படுவது போல் காட்டுகிறார். .

அடுத்து அவன் மனதில் வரும் வரும் தத்துவம் ‘ இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப் போகிறது எனக்கு உயிர் தந்த உடல் . நேற்று வரை அப்பா ஓர் உயிர். இன்று உடல் . நாளை வெறும் சொல். ‘ அப்போது
அந்த உணர்வை மாற்றும் மனைவியின் சொல். அமெரிக்காவில் இருக்கும் மனைவியின் சொல். அவள் சொல்லி விட்டது ‘ சடங்குகளில் தள்ளி நில்லுங்கள். ஏதாவது இன்பெக்சன் வந்து தொலையப் போகிறது . இப்போது அமெரிக்க வாழ்க்கை முறை பற்றி ஒரு கிண்டல் ‘ மனைவி ‘ கௌ ‘ . கவுசல்யாவின் சுருக்கம். இவன் ஷிவ் சிவராமனின் சுருக்கம்.

மனைவியின் கட்டளைக்குச் செவி சாய்க்கும் விதமாக ‘ எதற்கும், நாளைக்குச் சாம்பலைப் பாலிதீன் பையில் இட்டு ரப்பர் பேண்ட் சுற்றிக் கொடுங்கள் ‘ என்று சொல்லி விட்டு வந்தான். வெந்து தணிந்தது கூடு . மொட்டை அடிப்பதை மறுத்து நீண்ட யோசனைக்குப் பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்து விட்டு , வங்காள விரிகுடாவில் கால் நனையாமல் அஸ்தி கரைத்து வீடு திரும்புகிறான்.

அங்கே அடுத்த ஆட்டம் ஆரம்பம். மனைவி சொல்லி அனுப்பி இருக்கிறாள். ‘அம்மாவுக்கு மட்டும் அந்த வீடு எதற்கு . அதை விற்றுவிட்டு , அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வாருங்கள்’ என்று . அதை நடை முறைப்படுத்தும் விதத்தில் அந்த நாயகனின் செயல்கள் அடுத்து .

வீடு திரும்பியபோது ‘ சிவராமா ‘ என்று கதறி அழுதாள் அம்மா. ரத்த சோகை. நீரிழிவு . நார் போல் இளைத்திருந்தாள் .
‘ நாந்தான் முந்துவேன்னு நினைச்சேன் . அவரு முந்திட்டாரு’
‘கடைசியா என்ன சொன்னாரும்மா ‘
‘நான் போயிட்டா நீ எப்படித்தான் இருக்கப் போறியோ ‘
‘ஏன் நான் இல்லையா’ – அவன் அவசரமாய் மகனானான்.
‘இல்லையே சிவராமா இல்லையே , அவரை பிழைக்க வைக்க வேணாம் , சாகும்போது பக்கத்துலே கூட இல்லையே ‘
‘என்னம்மா பண்றது , தூரம். ‘
‘ஆமப்பா, எல்லாமே தூரமாய்ப் போச்சு .’

கதையின் தலைப்பு இப்போது கத்தி போல் பாய்கிறது . ரத்த சொந்தம் தான். ஆனால் அமெரிக்கா போய்த் தூரமாய்ப் போய்விட்ட ‘ தூரத்துச் சொந்தம் ‘

ஒரு வாரம் ஆகிறது . மகன் வேலையை ஆரம்பிக்கிறான்.
‘அம்மா, எப்படித்தான் தனியா இருக்கப் போறியோ ‘
‘என்கூட அமெரிக்கா கூட்டிட்டுப் போறேன். வரியா, நீ வரமாட்டே’
‘என்கூட அமெரிக்கா கூட்டிட்டுப் போறேன். வரியா, நீ வரமாட்டே’

கேள்விக்கும் பதிலுக்கும் ஆன இடைவெளியை தன் விருப்பதையிட்டு நிரப்பிக் கொண்ட மகனைப் புரிந்தும் புரியாதது போல் பார்த்தாள் அம்மா.

‘பரவாயில்லை, இந்த வீட்டிலேயே இருந்துட்டுப் போயிடுறேன் .’

‘அது எப்படிம்மா தனியா இருப்பே

‘துணைக்கு யாருப்பா வருவா ‘

‘துணை இருக்கிற இடத்திற்கு நீதான் போகணும் அம்மா ‘

கொஞ்சம் கொஞ்சமாக அவன் பேசும் பேச்சு ஏதோ கடமை. பாசம் இல்லை.

‘ஈ சி ஆர் ரோட்டிலே , பழத் தோட்டம் ‘

‘முதியோர் இல்லத்திற்கு வியாபாரப் பெயரா ‘

‘வீட்டை விடப் பாதுகாப்பா இருக்கும் ‘

‘அப்ப வீடு’

‘வீட்டை வித்திடலாம்னு நினைக்கிறன் .’

‘அப்பா வாழ்ந்த வீடப்ப ‘

‘அசோகரும் அக்பரும் வாழ்ந்த வீட்டையே காணோம் . இதுதான் எதார்த்தம். புரிஞ்சுக்கம்மா ‘

அம்மா வாயடைத்துப் போனாள் .

அங்கே முதுமையிலும், நோயிலும் தவிக்கும் அந்தத் தாயின் நிலைமை , நம் கண்களையும் கலங்கடிக்கிறது . ஆனால். அந்தப் பாசமில்லா மகன் அடுத்தடுத்து , மனைவி சொல்லி விட்ட காரியங்களை படிப்படியாகச் செய்கிறான்.

அடுத்து வீடு விற்கும் காட்சிகள். கருப்பும் வெளுப்புமாக பணம் இந்தியாவிலும் அமெரிக்காவிலுமாக கை மாறும்போது நம் நாட்டு அரசியல் , சமூக நிலைமைகள் பற்றிய கண்ணோட்டம். மூன்று மாதங்கள் ஓடின. அவள் முதியோர் இல்லத்திற்குச் செல்லும் நாள் .
அன்று அந்தத் தாய் கேட்கும் கேள்வி

‘எனக்கு ஒரு ஆசை ‘
என்றாள் அம்மா.
அப்பா கடைசியாகக் கிடத்தப்பட்டிருந்த கூடத்தில் வெறுந் தரையில் விழுந்தாள் . இப்படியும் அப்படியும் உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள் . நனைத்தாள். ‘ போயிட்டு வரேன் ‘ என்ற பொருளற்ற மரபுத் தொடரைச் சொல்லிக் கொண்டாள் .செம்பருத்திச் செடிகளையும் , தென்னை மரங்களையும் கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டாள் .

அடுத்து முதியோர் இல்லக் காட்சிகள். ‘இனிமே உங்களுக்கு மட்டும் இல்லே, எங்களுக்கும் இவங்க அம்மாதான் ‘ என்றார் பழத்தோட்டத்தின் காப்பாளர்.
மாசம் பன்னிரெண்டாயிரம் என்று ஐந்து மாதம் அறுபதாயிரம் கொடுத்தான் . ‘மருத்துவச் செலவு தனி ‘என்றார்.

அம்மாவிடம் விடை பெறும் தருணம். உருக்கத்தை வார்த்தைகளில் கொட்டுகிறார் வைரமுத்து அவர்கள்.

மகன் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘ அடிக்கடி பேசப்பா சிவராமா ‘ என்று தாடை பிடித்துக் கெஞ்சினாள் அம்மா. ‘ஆகட்டும்’ என்று சொல்லி வைத்தான் மகன். வாசலில் நின்று தூணைப் பிடித்த படி மகன் போன வாடகைக் காரையே பார்த்தபடி நின்றாள் . திருப்பத்தில் கண்ணாடி இறக்கிக் கை காட்டுவான் என்பது அவளது ‘ பெத்த ‘ நம்பிக்கை. கவிஞரின் பொருள் பொதிந்த வார்த்தைகள். பெத்த நம்பிக்கை. பெருத்த நம்பிக்கை. இரு பொருள் இங்கே மறை பொருளாக . அதனாலேயே ஒரு கையை உயர்த்தியபடியே நின்றாள். கார் தான் மறைந்தது , கண்ணாடி இறங்கவில்லை . உயர்த்திய கரம் கீழே விழுந்தது. படிப்பவர்கள் கண்களில் கண்ணீர் நிறைய வைக்கும் காட்சி .

அடுத்தது அமெரிக்க காட்சி .
மனைவியின் வரவேற்பு அங்கே . பணம் பற்றிய பேச்சு . இவளுக்காக இவன் வாங்கி வந்த அல்வா பற்றிய பேச்சு . அவன் இயல்பான வாழ்க்கை முறை. அப்பா, அம்மாவோடு அவன் சென்னையில் இருந்த தருணங்கள் போலித் தருணங்கள். பாசம் இல்லாத பாசாங்கு தருணங்கள் என்று வெளிப்படும் கணவன் மனைவி உரையாடல்கள்.

இந்த வாழ்க்கை முறையின் காரணங்கள் என்ன. தெரியாது . பெற்றோருடன் கூட இருந்து வளரவில்லையா அவன் . இல்லை பெற்றோர் பின்னால் மாறிப் போய் இவனைத் துன்புறுத்தினார்களா. இப்போது முதுமையில் மாறி ஏங்கிக் கிடந்தார்களா. இவன் மனைவியின் மோகத்தில் மூழ்கி விட்டானா . விடை தெரியாக் கேள்விகள் கதையில் .

அவனுக்கு சாண்ட் விச் , ரொட்டி , பழங்கள் , காபி கொடுத்து அவன் ஸ்வீட் கேட்கும் போது மறுக்கிறாள் மனைவி . ‘அப்பா இறந்து தான் மூணு மாசம் ஆச்சே ,’ என்ற அவன் கேள்விக்குப் பதில் .’ உங்க அம்மா இறந்து இன்னும் மூணு மணி நேரம் கூட ஆகலை. உங்க மூட் மாறிடக் கூடாதுன்னு தான் உடனே சொல்லலை.முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்துச்சு .

அவன் அப்படியே தலையில் கை வைத்து தரையில் சரிந்து சுவரில் சாய்ந்தான்.
அவன் மனைவி, ”இமோஷனைப் பார்க்காதீங்க. ப்ரோமோஷனைப் பாருங்க. இன்னுமொரு அலைச்சல் வேண்டாம். இறுதிச் சடங்கை இங்கே இருந்தே செஞ்சுடலாம். ‘என்று அந்த முதியோர் இல்லக் காப்பாளரிடம் செய்ய வேண்டியவற்றைச் சொல்லி விட்டு , இவர்கள் ஸ்கைப் மூலம் கம்ப்யூட்டரில் அம்மா எரிவதை பார்த்தபடி இருக்கிறார்கள் . ‘ டீ ஆறிடும் ‘ குடிங்க ‘ என்கிறாள் மனைவி என்று முடிகிறது கதை

உருக்கமான கதை. இன்றைய தலைமுறையில் குடும்ப நிலவரத்தின் கலவரத்தைக் காட்டும் கதை. ரத்த உறவுகள் தூரத்து உறவுகளாய் மாறி விட்டதைக் காட்டும் கதை. பாசத்திற்கும் பணத்திற்கும் நடக்கும் போட்டியில் பணம் ஜெயித்து பாசம் தோற்று , ரத்த சொந்தங்கள் எல்லாம் தூரத்து சொந்தங்கள் ஆகும் நிலைமையைத் தோல் உரித்துக் காட்டும் கதை. நன்றி வணக்கம்.

—————————