சிவ தரிசனம் தான் வேண்டும்/சீவ.தீனநாதன்

1938 ஆம் ஆண்டு போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி இந்து மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டாள். தன்னை உமா என்று அழைத்துக் கொண்டாள். அவளுக்கு தியானத்தில் சிவ தரிசனம் கிடைத்தது. அதன்பிறகு அவள் குற்றாலத்திற்கு விஜயம் செய்த போது அங்கும் அவளுக்கு தியானத்தில் சிவ தரிசனம் ஆயிற்று. ஆனால் இந்த தரிசனம் நீடிக்கவில்லை. அவள் சிவ தரிசனத்திற்காக ஏங்கினாள்.

அவள் பகவானிடம் வந்து, ‘தனக்குக் கிடைத்த சிவ தரிசனம் ஏன் நின்றுவிட்டது? அதற்குக் காரணமென்ன? சிவதரிசனம் எனக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தது. சிவதரிசனம் எனக்கு நிரந்தரமாகக் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? சிவனை விட்டு என்னால் பிரிந்தி ருக்க முடியாது’ என்று கூறினாள்.

பகவான , ‘அம்மா தரிசனம் எல்லாம் மனோ மயமானவை. உண்மையான நிலையான உன் ஸ்வரூபத்தை நாடு. தரிசனம் நிலையற்றது. அது மறைந்து போவதும் சகஜம். ஆனால் சிவன் என்றும் நிலைத்துள்ளவன். அவன் உன் ஆன்ம ஸ்வரூபமாக விளங்குகிறான்.

உமா, ‘அதெல்லாம் இருக்கட்டும் சுவாமி, எனக்கு சிவ தரிசனம் தான் வேண்டும் ! ‘

பகவான் பார்த்தார். ‘ அம்மா, நீ சிவனை உள்ளன்போடு நேசிக்கிறாயா?’

‘ஆம் சுவாமி. அவரைப் பூரணமாக சரணடைந்த அடிமை நான்’.

‘ஓஹோ ! அப்படியானால் சிவன் இஷ்டப்படி நீ நடக்க வேண்டும் அல்லவா? உன்னிஷ்டம் என்று ஒன்று இல்லை அல்லவா ?

உமா சற்று திகைத்தவளாகக் கூறினாள் ‘ ஆம் சுவாமி. அது உண்மைதான்.’

‘அப்படியானால் சிவன் இஷ்டப்பட்டபோது உனக்குத் தரிசனம் கொடுப்பான். நீ அவனுக்கு உத்தரவு போட முடியாது. சிவ தரிசனம் வேண்டும் என்று நீ அடம்பிடிப்பது உன் அகந்தை. அதைச் சிவனுக்கு பலி கொடு. அவன் உன் இதயத்தில் என்றும் ஒளிவிட்டு பிரகாசிக்கின்றான். அதை நீ உணர்வாய்’.

உமாவிற்கு உண்மை பளிச்சென்று விளங்கியது. சிவனை தியானிப்பதில் ஆழ்ந்தாள்.