120 கிலோ மீட்டர் தூரத்தில் நான்/கலைச் செல்வி


குனிந்து என் முன்
நெற்றியில் முத்தமிடும்
அம்மாவின் பழைய புகைப்படம் ஒன்று இன்று கைக்கு கிடைத்தது.
மிக அழகான புகைப்படம் ஓரத்தில் மட்டும் செல்லரித்துப் போய் விட்டது வாழ்வைப் போல

எனக்கு சமீபமாக புகைப்படங்களையும்
முத்தங்களையும் பிடிக்காது போய்விட்டது
அவை அசலாக இல்லை என்று நினைப்பதால்..

பிடிக்காது என்பது
பிடிக்காததாகவே இருக்கட்டும் நல்லதுதான்.

எனக்கு ஏனோ இன்றைக்கு
வாதையில் வாடும்
அம்மாவிற்கு
அச்சு அசலாக
அதே போலொரு
ஒரு முத்தம் கொடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது

கவிதைக்காகச் சொல்லவில்லை
கலைச்செல்வியாகி வாழ்கிற
என் வாழ்விற்காகவும் சொல்கிறேன்.

கலைச் செல்வி
26.9.2023