வாய் பேச முடியாதவர்கள்/ரேவதி பாலு

நகரில் நடந்து கொண்டிருந்த ஓவிய கண்காட்சிக்கு வசந்தாவும் சித்ராவும் போனார்கள் .ஒரு வித்தியாசமான ஓவியம் அவர்கள் கண்களை கவர்ந்து இழுத்தது.

“என்ன இது? இந்த ஓவியத்தில வாயே இல்லாம வரைஞ்சு இருக்காங்க ?யார் இதை வரைஞ்சி இருப்பாங்க?” என்றாள் சித்ரா .

“இரு !அந்த ஓவியத்தின் கீழே பேர் போட்டு இருப்பாங்க பாரு “

“ஆமாம் மேனகா என்று போட்டிருக்கிறது. வா இந்த ஓவிய கண்காட்சி பொறுப்பாளரிடமே கேட்டு விடலாம் .ஏன் இந்த ஓவியம் மட்டும் இப்படி இருக்குன்னு”

கண்காட்சியின் அலுவலக அறையில் பொறுப்பாளர் உட்கார்ந்திருந்தார். அவர் அருகே ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். கண்காட்சியை பற்றி பாராட்டி பேசி விட்டு சித்ரா அவரிடம் கேட்டாள்.

” ஏன் இந்த குறிப்பிட்ட ஓவியம் மட்டும் இப்படி வாயே இல்லாமல் வரையப்பட்டு இருக்கு? இதை வரைஞ்சவங் களை பத்தி தெரிஞ்சுக்க முடியுமா”

அவர் புன்முறுவலுடன் அருகில் கை காட்டினார்.
அவர் அருகில் உட்கார்ந்து இருந்த பெண்மணி தான் மேனகா போலும். சித்ராவும் வசந்தாவும் கைக்குவித்து அந்த பெண்மணிக்கு வணக்கம் தெரிவித்தனர்.

” மிக அற்புதமான ஓவியம் மேடம் இது . ஆனா ஏன் இப்படி வரையப்பட்டிருக்குங்கிறதுக்கு காரணம் தெரிஞ்சுக்க முடியுமா?”

பொறுப்பாளர் சொன்னார் .

“அவங்க வாய் பேச முடியாதவங்க மேடம். ஆனா நீங்க சொன்னத புரிஞ்சிப்பாங்க. பதில் எழுதி காட்டுவாங்க!”

மேனகா புன்னகையுடன் ஒரு செய்தித்தாளை எடுத்து அவர்களிடம் நீட்டினார் .
அதில் அசாமில் உள்ள ஒரு பழங்குடி இனத்தைப் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்தது. பெண்களுக்கு எப்பேர்ப்பட்ட கட்டுப்பாடுகள் அந்த இனத்தில் என்று விரிவாக போடப்பட்டிருந்தது. இன்று படித்து வேலைக்கு போகும் ஒரு தலைமுறை வந்தும் இன்னும் யாராலேயும் அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாய் திறக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அவர்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது மேனகா முகத்தில் மிகுந்த சோகத்துடன் அவர்களைப் பார்த்து கை கூப்பினார்.
பிறப்பிலேயே வாய் பேச முடியாத மேனகா மட்டுமல்ல அந்தப் பழங்குடி பெண்ணினம் முழுவதுமே வாய் பேச முடியாதவர்கள் தான் என்னும் எப்பேர்ப்பட்ட உண்மையை முகத்தில் அறைந்தார் போல் மேனகா வரைந்து இருக்கிறார் அந்த படத்தில் என்று புரிந்து கொண்ட சித்ராவும் வசந்தாவும் கனத்த மனதுடன் வெளியே வந்தனர்.