அகதிகள்/நாகேந்திர பாரதி

காத்துக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த வேனுக்காக. அவர்களின் கண்களில் அந்தக் கொடுமைக் காட்சிகள் விரிந்து விரிந்து கிடக்கின்றன . வாய் அடைத்துப் போய் விட்டது. இனி இந்த மண், இவர்கள் பிறந்து வளர்ந்த மண். இவர்களுக்குச் சொந்தம் இல்லை. அடுத்த மாநிலம் செல்லக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசே அனுப்பி வைக்கிறது.

இவர்களின் உணர்வுகளை யார் புரிந்து கொள்வார்கள். அதோ அங்கே அஜர்பைஜானில் இருந்து ஆர்மேனியாவுக்கு ஓடிக் கொண்டிருக்கும் அந்த அகதிகளுக்கு ஒரு வேளை புரியலாம் . வாழ்ந்த மண் இனி தங்களுக்குச் சொந்தமில்லை என்ற உள்ளத்தை உறைய வைக்கும் உண்மை.

குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு தோழிகளுடன் பாதி நேரம் தொலை பேசியில் பேசி விட்டு மீதி நேரம் வேலை பார்க்கும் அந்த பெண்களுக்குப் புரியுமா, இல்லை, வசதியான அடுப்படியில் பாதி நேரம் தொலைக்காட்சி பாதி நேரம் என்று பார்க்கும் வசதி பத்தாமல் ஓயாமல் அலுத்துக் கொண்டு இருக்கும் அந்தப் பெண்களுக்குப் புரியுமா.

சமுதாய பொறுப்புணர்வு உள்ள சில பெண்களுக்கும் வீடே அகதிக் கூடமாகவும் இருக்கும் சில பெண்களுக்குப் புரியலாம் இந்தப் பெண்களின் நிலைமை

நேற்று வரை இருந்த இடம் இப்போது சொந்தமில்லை . நேற்று வரை உழுத மண் இப்போது சொந்தம் இல்லை. அகதிகள் .கணவர், பையன்கள் பிடித்துச் செல்லப்பட்டு சிறையில் . வீடுகள் இடிக்கப்பட்டு . பெண்களை மட்டும் பரிதாபப்பட்டு அடுத்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள் . அந்த மாநிலத்தில் என்ன நடக்கும். என்ன சாப்பாடு, எந்த இடம், என்ன சம்பாத்தியம். எப்படி சம்பாத்தியம். அங்கும் இவர்கள் அந்நியர் என்று அடையாளப் படுத்தப்பட்டால், அடுத்து எந்த மாநிலம்.

நேற்று கணவனோடு நிலவைப் பார்த்துச் சாப்பிட்டது .நிலவில் இறங்கி விட்டது இயந்திரம். அடுத்து அங்கே அனுப்பி வைக்கப்படலாம். நேற்று தந்தையோடு கடைக்குச் சென்று வாங்கி வந்த பொம்மைகள். இடிபாடுகளுக்கு இடையில் . ‘உங்களுக்கு உயிர் மட்டுமே உத்தரவாதம். ஓடுங்கள்.’ இங்கே நிற்கும் இவர்கள் தோழிகளாக மாறலாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யலாம்.

வேறு மாநிலத்தில், அடுத்த அடுத்த மாநிலத்தில், இவர்களின் வாழ்க்கை எவ்வளவோ மாறிப்போகலாம். ஆனால் பிறந்து வளர்ந்த அந்த மண்ணின் வாசம், அந்த மூச்சுகளில் இருந்து கொண்டு. அந்தக் குடும்ப வாழ்க்கை அவர்கள் பேச்சுக்களில் இருந்து கொண்டு. காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வேனுக்காக.

——————————

2 Comments on “அகதிகள்/நாகேந்திர பாரதி”

  1. தலைவலியும் திருகு வலியும் அவரவர்க்கு வரும்போதே முழுதும் புரியும்.

    அவர்கள் காத்திருக்கவேண்டும்!
    வேனுக்கு மட்டுமல்ல!
    வாழ்வின் ஒவ்வொன்றிற்கும்!

Comments are closed.