இருபதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் மூன்று மேதைகள் இந்திய திரைக்கலை/வாசுதேவன் 

இருபதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் மூன்று மேதைகள் இந்திய திரைக்கலையை செழுமையாக்கினார்கள். சத்யஜித் ரே, ரித்விக் கடக், மிருணாள் சென். மூவரும் பாணியும் வேறு. தனித்துவமானவர்கள். இவர்களை ஒருவருக்கொருவர் ஒப்பீடு செய்து எதிரும் புதிருமாக நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ரேவின் மேல் வைக்கப்படும் முதன்மையான விமர்சனம் அவர் படங்களில் அரசியல் இல்லை என விவாதிப்பார்கள்.

60- 70 கொந்தளிப்பான காலக்கட்டம். வியட்நாம் போர், எமர்ஜென்சி, நக்சல்பாரிகளின் எழுச்சி, அமெரிக்கா ருஷ்யா பனிப்போர் என சிக்கலான காலக்கட்டம். மிருணாள் சென் அப்பட்டமாக அரசியலை திரை மொழியில் கொண்டுவந்தாலும் அதில் இரைச்சல் இல்லை. ரித்விக் கடக் படங்களில் பிரிவினையின் வலியை பிரதிபலித்துள்ளார். கடந்தகாலத்தின் அவலத்தை திரைமொழியில் கொண்டுவந்தார். கடக் படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் இந்துஸ்தானி இசையை அவர் கையாண்ட விதம் மெய் சிலிர்க்க வைக்கும். ரே நேரிடையாக அரசியல் பேசாதவர். கலை என்பது எதை (What)வெளிப்படுத்தவேண்டும் என்பதை விட எப்படி(How) வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்தவர்.

ரே பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நகர்புறத்தில் வாழ்ந்தவர். ஆனால் திரைப்படத்தில் வங்காள கிராமங்களை ரே காட்சிப்படுத்தியது போல் எவரும் இல்லை. இது ஒரு ஆச்சர்யமான விஷயம். கடக் சராசரியான குடும்பத்தில் பிறந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர். சென் பங்காளதேஷில் பிறந்தவர். வெளிப்படையாக நக்சல்பாரிகளை ஆதரித்து ‘மார்க்சிஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பட்டபெயரோடு வாழ்ந்தவர். ரே இன் ஆரம்ப கால படங்களில் ( அப்பு டிரையாலஜி) அரசியல் பேசவில்லை என்றாலும் பின்னாளில் ‘Kolkatta Trilogy’ படங்களில் அரசியல் நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார்.

1970 ல் Pratidwandi படத்தில் ஒரு இளைஞன் (சித்தார்த்தா) வேலைக்காக நேர்காணலில் ஒரு கேள்வியை எதிர்கொள்கிறான். அதிகாரி அந்த இளைஞனிடம் “கடந்த 10 வருடங்களில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?” என்ற கேள்விக்கு ” வியட்நாம் போர்” என பதிலளிப்பான். அதிகாரி ” போனவருடம் மனிதன் நிலாவில் கால் பதித்தது முக்கியமாக தெரியவில்லையா?” என்றதற்கு ” அது தொழிற்நுட்பம். ஆனால் வியட்நாமில் மானுடம் செத்துவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும்” என்பான். எமர்ஜென்சி காலத்தில் வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்தாடியது. தடை,தணிக்கை. நக்சல்பாரி இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தார்கள். ரே Jana Aranya என்ற படத்தை வெளியிட்டார். அதில் ஒரு காட்சியில் கோபக்கார இளைஞன் China’s Chairman is our Chairman என் வங்காள மொழியில் சுவரில் எழுதுவான். இந்து மத மூட நம்பிக்கைகள், மத அரசியலையும் விமர்சித்து ” தேவி” என்ற படத்தை இயக்கி வெளியிட்டு பலத்த எதிர்ப்புகளை சம்பாதித்தார். Sadgati என்ற படத்தில் ஒரு இறந்த போன தலித் உடலை உயர் சாதி இந்துக்கள் அப்புறப்படுத்த மறுக்கிறார்கள். இறந்த தலித் உடலை தொட மறுக்கிறார்கள். தலித் மக்களும் தன் மக்களுக்கு நீதி வேண்டும் என மறியலில் ஈடுபடுகிறார்கள். இறுதியில் ஒரு குச்சியால் அந்த உடலை மிகக்கேவலமாக ஒரு பிராமணன் தள்ளுவதுபோல் காட்சிப்படுத்தியிருப்பார்.

ரே வெளிப்படையாக அரசியல் பேசாதவர். பலமுறை அவர் படங்களைப் பார்த்தால்தான் அவருடைய மேதமை புரியும். இதற்கு உதாரணமாக மற்றொரு காட்சியை சொல்ல முடியும். Ghare Baire என்ற படத்தில் நீளமான ஷாட் வரும். ஒரு பெண் அடுப்பங்கரையிலிருந்து முன்வாசலுக்கு நடந்துவர 10 நிமிட லாங் ஷாட்டாக எடுத்திருப்பார். பல விமர்சகர்களுக்கு இது புரியவே இல்லை. எதற்காக இந்த லாங் ஷாட்? தேவையில்லாதது என எழுதினார்கள். அதற்கு ரே” ஒரு பெண் முன்வாசலுக்கு வருவதற்கு இரண்டாயிரம் வருடங்கள் ஆனதை நான் பத்துநிமிட லாங்ஷாட்டில் புரிய வைத்தேன்” என்றார்.

ரே அவர் வாழ்ந்த காலத்திலேயே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டவர். சென்னும் கொண்டாடப்பட்டவர். ஆனால் கடக் துரதிருஷ்டசாலி. அவர் இறந்தபிறகுதான் அவருடைய பெயர் உலகம் முழுவதும் பரவியது. ரே பெருந்தன்மையானவர். அவர் இருந்தபோது தன்னைவிட கடக் ஆகச்சிறந்த இயக்குநர் என மனம் திறந்து பாராட்டி பேசியுள்ளார். ஒரு படி மேலேபோய், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் சொல்லி பூனே ஃபிலிம் இன்ஸ்டியூட்க்கு கடக்கை பேராசிரியராக‌ நியமிக்க பரிந்துரைத்தார். . இது ஒரு முக்கிய நிகழ்வு. அவர் ( கடக் ) இருந்தபோதுதான் அவருடைய மாணவர்கள் மணி கவுல், குமார் சஹானி, ஜான் அப்ராஹம் போன்ற மேதை இயக்குநர்கள் உருவானார்கள்.

(மீள்)

May be an image of 2 people and text