இருபத்தோராம் நாளின் வாசிப்பனுபவம் (22.09.2019)/அழகியசிங்கர்

இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் ‘நான்’. இன்னொரு புத்கதம் ‘காண்டாமிருகம்’. ஆனால் லா ச ராவின் ‘நான்’ மட்டும் எடுத்துக்கொண்டு போனேன். இதைப் படி முதலில் போதும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

உறவினர் வீட்டுக்குப் போனபோது ‘கண்டாமிருகத்தையும்’ எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமென்று தோன்றியது.

ஏற்கனவே சிந்தா நதி என்ற பெயரில் லா ச ரா அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார் என்று தோன்றியது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் அதை உறுதி செய்ய முடியும். üநான்ý என்கிற இந்தப் புத்தகம் அவருடைய சுயசரிதம். அவர் அம்மாவைப் பற்றி ரொம்ப எழுதியிருக்கிறார். குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி வந்திருந்தது. அதை இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்கள். இந்தப் புத்தகம் முழுவதும் அவருடைய சுயசரிதம்மட்டும் இல்லை. 3 சிறுகதைகள் சேர்த்திருக்கிறார்கள். ஒரு கட்டுரை.

குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி. அதில் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார். üஒருமுறை மௌனி என் வீட்டிற்கு வந்திருந்தார். இங்கே இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார். கூட இன்னொருவரும் வந்திருந்தார். அவர், “நீங்க ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?” என்று மௌனியைக் கேட்டார். “நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை.” என்று மூஞ்சியில் அடிப்பது போல் பதில் சொன்னார் மௌனி.

அவர் படிக்காவிட்டால் போகிறார். அது பற்றி எனக்கு வருத்தமும் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால் இந்த மனிதன் இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. எனக்குத் தெரியவில்லை, என்று கோபப்படுகிறார் லா ச ரா.

ஏன் மௌனி அவர் எதிரிலியே அப்படிப் பேசினார்? எழுத்தாளர்களுக்குள் பொறாமை உணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளர் முன் இன்னொரு எழுத்தாளர் இப்படி வெளிப்படுத்துவது அநாகரிகம். என்னிடம் கூட ஒரு விமர்சகர் மௌனியை தூக்கி வைத்து ராமாமிருதத்தை மட்டமாகப் பேசுவார். அதைக் கேட்டு ரொம்ப நாட்களாக ராமாமிருதம் புத்தகங்களைப் படிக்காமல் இருந்திருக்கிறேன். அபிதா என்ற நாவலை படித்தவுடன் என் எண்ணம் மாறிவிட்டது. ஆனால் உண்மையில் மௌனி எழுத்து வேற, ராமாமிருதம் எழுத்து வேற. இதை நான் ராமாமிருதத்தைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் உணர்ந்தேன்.

பல இடங்களில் அம்மாவைப் பற்றி சொல்லியிருக்கிறார். üஎன் அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார், 36, 37 ரூபாய் சம்பளம். என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது என்று அம்மா கையில் பணத்தைக் கொடுத்து விடுவார். அவள் கை நல்ல கை. பசுமாடு வளர்த்தாள். தோட்டம் போட்டாள். எல்லாம் நன்றாக வந்தது. சீக்காளி ஆம்படையான். அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக்கொண்டாள். கடமைதான் இது. காதலினால் பார்த்தாள் என்று அதனை நான் சொல்ல வரவில்லை. அவளே சொன்னாள். வேண்டியது பண்ணியாகிவிட்டது உங்க அப்பாவுக்கு. அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லையப்பா. எனக்கு இது பண்ணவில்லையே என்று எந்த குற்றமும் இல்லை. அவர் இறந்தபோது கொஞ்ச நேரம்தான் அழுதாள்.’

இன்னொரு இடத்தில் லா ச ரா, “என் எழுத்து புரியவில்லை என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள். புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? புரியாமல் இருந்துவிட்டுதான் போகட்டுமே. இப்போது என்ன கெட்டுப் போய் விட்டது?” இப்படி சொல்வது விரக்தியில் சொல்லாமல் இருக்க வேண்டும்.

லா ச ரா சில இடங்களில் அபாரமாக சிலவற்றை சொல்லிக்கொண்டு செல்கிறார். :. ‘கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன். பிம்பம் என்னைத் திரும்பிப் பார்க்கிறது. எத்தனை அழகு. நான் இவ்வளவு அழகா என்ன? இல்லை. பிம்பம் என்னைக் காட்டிலும் அழகாக எனக்குத் தோன்றுகிறது.’

லா ச ரா புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகள்.

சின்ன வயதில், வீட்டில் நடமாடும் சில மொழிகள்.

வேலையிலிருந்து மகன், மாலை திரும்பி வந்ததும், தாய் அவன் வயிற்றைத் தடவிப் பார்ப்பாளாம். (என் குழந்தை சாப்பிட்டானா
இல்லியா) பெண்டாட்டி இடுப்பைத் தடவிப் பார்ப்பளாம். (இன்னிக்கு எனக்கு என்ன கொணார்ந்திருக்கே?)

அப்புறம் ஒரு குட்டி உபநிஷக்கதை.

ஒரு மருமகள், மாமியாரை வீட்டை விட்டுத் துரத்தியதுடன் திருப்தி அடையாமல் அவள் தலையைக் கொண்டு வரச் சொன்னாளாம். அவள் சொன்னபடியே கணவன் செய்து, தாயின் தலையைப் பிடித்துக் கொண்டு வரும் வழியில் கல் தடுக்கி விழுந்தானாம். உடனே தலை பேசிற்றாம்.
‘கொழந்தே, அடிபட்டுட்டுதா?’

‘ஒரு சமயம் வயல் பரப்பின் மேல் நான் பையனாய் ஓடிக்கொண்டிருக்கையில், திடுக்கென என் வழி குறுக்கே ஒரு பாம்பு தென்பட்டது. சுமார் நாலடிக்கு எட்ட, அது படமெடுத்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. நின்றேன். ஒருவரையொருவர் அந் நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தோமோ?

எனக்குக் கல்லெடுத்து அடிக்கத் தோன்றவில்லை. ஓடிவிடத் தோன்றவில்லை. பயமாயில்லை. கைகால்கள் வெலவெலத்துச் செயலிழந்து விடவில்லை. எங்களுக்குள் ஏதோ சொந்தம் இருந்ததாகப் பட்டது. இதோபார் நாம் சோதரர்கள். அவரவர் வழியில் போய் விடுவோம். ஒருவரையொருவர் ஏன் துன்புறுத்திக் கொள்ள வேண்டும்? என்கிற மாதிரி.

அது படத்தைக் கீழே போட்டு, சாவதானமாக வயலில் இறங்கி தேங்கிய தண்ணீரில் கதிர்களிடையே மறைந்தது.’

தி.ஜ.ர தான் மானசீக குரு என்கிறார் லா ச ராமாமிருதம். இதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவர் வார்த்தைகளிலேயே தி ஜ ர வைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

‘தி ஜ ர என் எழுத்தை அதன் போக்கில் வளர்த்தவர். அதிநுட்பமான விமர்சகர். அவர் காலத்திலேயே அவருடைய முழுத் தகுதியை யாரும் உணரவில்லை. என் மானஸீக குரு. புரியாத மட்டுமல்ல, வக்ரமான எழுத்தாளன் என்று நான் எழுத்தாளனாக உருவாகிக் கொண்டிருக்கும் நாளில் சக எழுத்தாளர்களாலேயே கண்டனமான போது எனக்குப் பக்கபலமாய் என் எழுத்தில் நம்பிக்கை மாறாதவராக இருந்தவர். அவர்தான், “நீ எதை வேணுமானாலும் எழுதுடா, நான் போடுகிறேன்,” என்று தான் சக்தி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது சொன்னதை செயலில் காட்டி எனக்குத் தைரியமூட்டினர் அவர். அப்படி முதுகைத் தட்டி என்னை வளர்த்திராவிடில், இப்போது எழுத்தாளனாக எங்கிருந்திருப்பேனோ?’

இலக்கியப் பார்வை என்பதற்கு இப்படி பதில் அளிக்கிறார்.

‘இலக்கியப் பார்வை என்பது எழுத்தின் பண்பாடு மட்டும் அன்று. மனத்தின் பண்பாடும் என்றே தோன்றுகிறது. உலகத்தை இப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு மனப்பக்குவம் கிட்டிவிடுமா?’

லா ச ரா அவருடைய படைப்பில் அடிக்கடி மரணத்தைப் பற்றி எழுதியருப்பார். இதோ:

‘யாருடைய மரணமும் அதன் வேளையில்தான் நேர்கிறது என்பது தவறாத உண்மை. ஆனால் அது எங்கள் குடும்பத்தில் சற்று அடிக்கடி வாசற்படியைக் கடந்திருக்கிறது என்பதும் உண்மை. அதன் மூட்டம் என் எழுத்தில் அதிகமாகக் கவிந்திருப்பின், அது ஆச்சரியமில்லை.

‘ஒருவனின் மறைவுடன், மறைந்தன அவன் அதுகாறும் அவனில் திரட்டிய அனுபவம், ஞானம், சமுதாயத்துக்கு அவன் பயன் அந்த மட்டில் உயிரின் முடிவு, உயிருக்குத் துரோகம், ஆனால் இது ஒரு கோணம், கோணங்கள் எத்தனையோ, அவைகளின் நியாயங்களும் அப்படியே…

‘எனக்கு சின்ன வயதில் வாசலில் பிணம் போனால் பயம். பிராம்மணப் பிணம் முகத்தையும் மூடி பின்னால் யாரோ துரத்துவதுபோல் அவசரமாய் ஓடும்.

‘சாவே, உன்னை ஏற்கிறேன். ஏனெனில் எனக்கு வேறு வழியில்லை. நீ நியதி, அதனால் நீ கர்வமடைய வேண்டாம். உன்னுடன் என்றும் சமாதானமாக முடியாது. நீ பலவான். ஆனால் நியாயவான் இல்லை…

‘இன்றைய பையன்கள் ரொம்பவும் தேறிவிட்டார்கள். என் இரண்டாவது பிள்ளை கண்ணனுக்கு மாதம் ஒரு விபத்தேனும் பார்ப்பதில் தனி ராசி போலும். ‘தலை தனியா தண்டவாளம் தாண்டி உருண்டு விழுந்தது பாருங்கோ! என்னப்பா, உடம்பை சிலிர்த்துக்கறேளே! உங்கள் காலத்தை விட இப்போ இடைஞ்சல் அதிகம். காலையில் கிளம்பிப் போனோம்னா, மாலை திரும்பி வறோம்னு நிச்சயமில்லை. உங்கள் காலத்தில் இது சொல்லலங்காரம். இப்போ அப்பட்டமான உண்மை. நாமெல்லாம் இட்லி சாம்பார்தானே! பிணத்தைப் பார்க்கவே பயம். விபத்தை எங்கே ஜரிச்சுக்கப் போகிறோம்! ‘

தி ஜ ரா, ராமாமிருதம் கதைகளைப் பற்றி இப்படி விமர்சிக்கிறார்:

“இன்னொன்று உன்னிடம் பார்க்கிறேன். கதைக்குத் கதை பாம்பு வருகிறது. காரணம் இல்லாவிட்டாலும் பாம்பு வரும்பவடி ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய். உபமானமாகவோ உருவகமாகவோ பாம்பைக் காட்டுகிறாய். அப்புறம் இன்னொன்று உன் கதைகளில், ஸ்னானம் செய்துவிட்டு ஈரப் புடவையைச் சுற்றிக்கொண்டு ஒரு ஸ்திரி படித்துறை ஏறி வருவாள். இது மாதிரி காட்டல்கள், நீ ஒரு சமயம் பார்த்து, சித்திரம் உன் மனத்தில் அழுத்தமாய் விழுந்திருக்கும். ஆனால் அதுவே அப்ùஸஸன் ஆகிவிடக் கூடாது. ஆனால் எழுதுவதே அப்ùஸஸன்தான்.”

எந்த எழுத்தாளர் இப்படி இன்னொரு எழுத்தாளர் மீது அக்கறை கொண்டு சொல்வார்கள். இன்றைய காலத்தில் அப்படி யாரையும் பார்ப்பது அரிது.

இந்தப் புத்தகத்தில் அவருடைய சுய சரிதம் தவிர நான்கு கதைகள் உள்ளன. ‘நன்னு விடசி… பிம்பம். சோழம் பாக்க வாங்கோ..பாய் ஃப்ரண்ட்..’ இதில் நன்னு விடசி சிறப்பான கதை. அக் கதையை ஒருவர் கட்டாயம் படிக்க வேண்டும். சினிமாவில் தருணங்கள் என்றும் ஒரு கட்டுரை இருக்கிறது.

மணிகொடி எழுத்தாளர்கள் எல்லோரும் பீச்சில் சந்தித்த நிகழ்ச்சியை ஒரு இடத்தில் விவரிக்கிறார். அவர்கள் எல்லோரும் என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார் தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சி ப்ரசாரம் கிடையாது. ஆனால கடற்கரையில் மாலை அந்த இரண்டு இரண்டரை மணி நேரம், இந்த ஏழெட்டு பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, இதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை என்கிறார் லா சு ராமாமிருதம் பரவசத்தோடு.
.