“வாயிருந்தும் ……..”/குமரன்

சங்கர், அந்த தேனீர் கடையில் சுடச்சுட போடப்பட்டுக் கொண்டிருந்த மசால் வடையை, ஒரு பேப்பரில் வைத்துக் கொடுத்ததை, சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடன் தோழர் சந்துருவும் வடையை ருசித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் பார்த்தான், வடையை சிலருக்கு பேப்பரிலும் சிலருக்கு தட்டிலில் வைத்தும் கொடுத்ததை!

அந்த டீ கடை இருந்தது, ஒரு மிகப் பெரிய மாநகரில் இருந்து 85 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமம். இருநூறு வீடுகளாவது இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.

அங்குள்ள ஒரு வங்கிக்கிளைக்குத்தான் வந்திருந்தான் அவன், சக தோழர்களோடு.

அவர்கள் ஒரு தொழிற்ச்சங்கத்தை சேர்ந்தவர்கள். வங்கியில் பணி புரிபவர்களிடம் வங்கியின் தற்போதைய நிலைமையையும், அதன் வளர்ச்சிக்காக தற்போது மேற் கொள்ள வேண்டிய செயல்களையும் அதற்காக ஊழியர்கள் , வங்கியின் முன்னேற்றத்திற்காக எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விளக்கிச் சொல்லவே அவர்கள் வந்திருந்தார்கள்.

கிளையில் நல்ல கூட்டம். இன்னும் சிறிது நேரம் இருந்தால் எல்லோரிடமும் பேசலாம் என்று கிளைப்பிரதிநிதி கூறினார். அதுவும் சரிதான் என்று அவர்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

வடைகளை வாங்கி சாப்பிடும் போது, கிளையில் பணி புரியும் ஊழியர்,தோழர் ராஜூ, அங்கு வந்தார்.

இவன், ” என்ன ராஜூ, எப்படி இருக்கிங்க, வடை சாப்பிடுங்க” என்றான். சங்கர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுக்கவே, இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், அருகில் வந்து, ” தலைவரே, என் கூட கொஞ்சம் வாங்க” என்று அழுகைக் குரலில் கூப்பிட்டார்.

சிறிது தொலைவு சென்றவுடன் ஒரு மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு, சங்கரிடம் ” தலைவரே, எனக்கு எப்படியாவது அருகில் உள்ள நகரக்கிளைக்கு மாறுதல் வாங்கிக்கொடுங்க” என்று அழ ஆரம்பித்தான். இவன் பதறிப்போய், “அழாதேம்மா, என்ன ஆச்சு” என்று கேட்க, ராஜூ சொல்ல ஆரம்பித்தான்.
” தலைவரே, போன மாசம் என்னை கிராமத்து ஆளுங்க அடி அடின்னு அடிச்சிட்டாங்க, ஏன்னா, நான் இது வரைக்கும் டீ கடையிலே கிளாஸ்ல, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்னு சொல்லாம டீ குடிச்சிட்டேன்னு அடிச்சிட்டாங்க” னு சொல்லி அழுதார். மேலும் எங்களை சிறிது தூரம் தள்ளிக்கொண்டு போன ராஜூ, அங்கிருந்த ஒரு பொட்டல் வெளியில் இருந்த நான்கைந்து குடிசைகளை காண்பித்து மீண்டும் அழ ஆரம்பித்தார். அழுகையினூடே
” இங்கு பெண்கள் வீட்டு விலக்கானால், ஊருக்கு வெளியே இங்கு வந்து விட வேண்டும்” என்றும் “அங்கும் ஜாதிவாரியாக குடிசைகள் உள்ளன, மூன்று நாட்களுக்குப்பிறகுதான் ஊருக்குள் வர முடியும்” என்றார். சங்கர் ” என்னப்பா இது, படிச்சவங்க யாரும் இதை தட்டிக்கேட்கலையா” என்றதற்கு, “அதெல்லாம் கேட்க முடியாது, இது ஊர் கட்டுப்பாடு” என்றும் ” அப்படி முடியவில்லை என்றால் ஊரை விட்டு போய் விட வேண்டும்” என்றார் ராஜூ.

“தலைவரே,
இதில் வீட்டு விலக்கான பெண்களில் அந்த ஊரில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள், ஆசிரியைகள், இளம் பெண்கள், இளம் தாய்மார்கள் என எல்லோரும் அடக்கம்” என்றார் ராஜூ.

மேலும் ” இருட்டின பிறகுதான் எல்லோரும் இயற்கை உபாதைகளுக்கு அருகில் உள்ள மறைவுகளுக்கு செல்ல வேண்டும்” என்றும் ” இதில் என் கைக்குழந்தையுடன் உள்ளே உள்ள என் மனைவி, உதவி மேலாளரின் மனைவியும் அடக்கம்” என்றார் தோழர். நாங்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து திரும்பிப்பார்த்தோம்.

அங்கு நாலைந்துபெண்கள் தலையில் முக்காடிட்டு நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களை சுட்டிக்காட்டிய ராஜு, “தலைவரே, அவர்களுக்கு இது வரை குடிசைகள் கிடைக்கவில்லை” என்றார்