போர்லாக்கும் சுவாமிநாதனும் இணைந்து நடத்திய ஆய்வுகள்../ஸ்ரீதர் சுப்ரமணியம்

இன்றைக்கு மூட்டை மூட்டையாக அரிசி, கோதுமைகள் குவிந்து கிடக்கும் நிலையில் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்வது கடினம். இன்றைக்கு மூன்று வேளை சாப்பிடும் பலரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் சாப்பிட்டு வருகிறோம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஐம்பதுகளில் கூட அது முக்கால்வாசி இந்தியர்களுக்கு சாத்தியப்படவில்லை. பசுமைப் புரட்சிதான் அதனை சாத்தியமாக்கி இருக்கிறது. அறுபதுகளுக்குப் பின் இந்தியர்களின் தினசரி உணவில் சராசரியாக 800 கலோரிகள் கூடி உள்ளன என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

ஆனால் ஐம்பதுகளில் மற்றும் அறுபதுகளில் கடும் உணவுப் பஞ்சம் தெற்காசியா முழுவதும் தலை விரித்தாடியது. இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கோதுமை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இறக்குமதி என்பதை விட பிச்சை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ‘உணவுப் பஞ்சத்தில் உலக மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கப் போகிறார்கள்,’ என்ற 19ம் நூற்றாண்டு சிந்தனையாளர் ராபர்ட் மால்தூசின் ஆரூடம் பலிக்கப் போகிறது என்று மேற்குலகின் அறிவு ஜீவிகள் காத்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் மேற்கத்திய நாடுகளில் விவசாய ஆராய்ச்சி பற்பல முன்னேற்றங்களை கண்டு கொண்டிருந்தது. அமெரிக்க வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாக் பத்து மடங்கு மகசூல் அளித்த குட்டை ரக கோதுமையைக் கண்டுபிடித்து புரட்சி செய்திருந்தார். அவரை இந்திய அரசு இங்கே அழைத்து இந்தியாவுக்கு ஏற்றபடி கலப்பு விதைகளை பரிசோதிக்கக் கோரியது. அவருடன் இணைந்து பணியாற்றியவர் டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன். போர்லாக்கும் சுவாமிநாதனும் இணைந்து நடத்திய ஆய்வுகள் தேசம் முழுவதும் விவசாயத்தின் முகத்தை மாற்றிக் காட்டியது. ‘பசுமைப் புரட்சி’ என்று பொதுவாக அறியப்படும் அந்த அத்தியாயம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தெற்காசியாவுக்கே கூட முக்கியமான ஒன்று. கலப்பு விதைகள், நைட்ரஜன் பயன்பாடு, பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரம் என்று இவை எதுவும் நடந்திராவிடில் தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டும் சுமார் 100 கோடி பேர் பட்டினியால் இறந்து போயிருப்போம். அதில் பாதி உயிர்கள் இந்தியாவில் விழுந்திருக்கும். (நார்மன் போர்லாக்கின் வாழ்க்கை சரிதை புத்தகத்தின் தலைப்பே ‘The Man Who Saved a Billion Lives’ என்பதுதான்.)

உருளை, கோதுமை மற்றும் அரிசி ஆராய்ச்சிகளில் எம் எஸ் சுவாமிநாதன் நடத்திய ஆய்வுகள் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் மகசூலை அதிகரிக்க இவர் எடுத்த முயற்சிகள் பெரும் பலனைக் கொடுத்தன. அதன் பின் பிலிப்பைன்ஸ்சிலும் தனது ஆய்வு முயற்சிகளைத் தொடர்ந்து அங்கேயும் அரிசி விளைச்சலில் மாற்றங்கள் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் காந்தி, தாகூருக்கு அடுத்து வெளிநாடுகளில் அறிமுகமான இந்தியப் பெயராக இவர்தான் இருந்தார். விவசாயத்துக்கான நோபல் என்று அறியப்படும் World Food Prize அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திலேயே இவருக்குத்தான் வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு வேளாண் அறிவியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர். இந்தப் விருதின் மூலம் கிடைத்த பணத்தை வைத்து Swaminathan Research Foundation என்ற பெயரில் வேளாண் ஆய்வுக் கழகம் ஒன்றை நிறுவி அதன் மூலம் தொடர்ந்து வேளாண் ஆய்வுகளை ஊக்குவித்து வந்தார். மன்மோகன் சிங் காலத்தில் நியமன எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அங்கே பிற நியமன எம்பிக்களைப் போல வெட்டியாக இராமல் ஆக்கபூர்வமாக பங்களித்தும் வந்தார். பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் சட்ட வடிவையும் நாடாளுமன்றத்தில் அப்போது கொண்டு வந்தார்.

அப்படி சுதந்திர இந்தியாவின் மகத்தான ஆளுமைகளுள் ஒருவராக வாழ்ந்து பங்களித்தவர் இன்று மறைந்திருக்கிறார். உலக வேளாண் விஞ்ஞானத்தின் முக்கிய ஒளி விளக்கு அணைந்து போயிருக்கிறது.

உலக விஞ்ஞானக் குழுமத்துக்கும், தினம் மூன்று வேளை சாப்பிடக் கிடைக்கும் இந்தியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.