தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்ற படைப்புகளில் சங்க இலக்கியமும், திருக்குறளும் தாக்கத்தை உண்டாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தன. ஏ.கே.ராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட், கமில் சுவலபில், நொபுரா கரஷிமா போன்ற ஆளுமைகள்தான் இதற்கு முக்கியக்காரணம்.
தமிழின் தனித்துவமான அடையாளம் கவிதை மரபு. தமிழுக்கு உரைநடை என்ற வடிவமே ஐரோப்பிய கிறிஸ்துவ பாதிரிமார்களால் 16 நூற்றாண்டுக்குப் பிறகுதான் அறிமுகமானது.(வீரமாமுனிவர், சீகன் பால்கு).
ஐரோப்பிய இலக்கியங்கள் உரைநடையில் வெகுதூரம் சென்றுவிட்டன. உலகின் முதல் நாவல் ஆயிரம் வருடங்களுக்கு முன் ஜப்பானில் முரசாகி எழுதிய Tale of Genji வெளிவந்தது.
ஐரோப்பாவின் முதல் நாவல் செர்வாண்டிசின் Don Quixtoe 16ம் நூற்றாண்டில் வெளிவந்தது. மேற்கத்திய உலகில் உரைநடையில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு உரைநடை வடிவத்தை செழுமைப்படுத்தினார்கள். தமிழில் சங்க காலம், காப்பிய காலம், பக்தி காலக்கட்டம்,
இருபதாம் நூற்றாண்டு பாரதி, நவீன கவிதை வரை தமிழ்க் கவிதை மரபு மிக செழிப்பானது. இந்த வளமை தமிழ் உரைநடையில் இல்லை. தமிழின் முதல் நாவல் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ல் தான் வெளிவந்தது.
உரைநடையில் தமிழ் பின் தங்கியுள்ளது. ஐரோப்பா பார்க்காத போர் வன்முறைகள் வேற எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. தாஸ்தாவெஸ்கி போல் மனிதனின் அகப்போராட்டத்தை வேற எவரும் சித்தரிக்கவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ் போல் மொழியில் பரிசோதனை செய்தவர்கள் எவரும் இல்லை.
நவீனத்துவத்தை கேள்விக்குறியாக்கிய காஃப்கா போல் எவரும் எழுதவில்லை.மனிதனின் இருத்தலியல் பிரச்சினையை அலசிய காம்யுவும், சார்த்தரும் போல் எவரும் எழுதவில்லை. ஆக தமிழிலிருந்து (ஈழ இலக்கியம் உட்பட) ஆங்கிலத்திற்கு செல்லும் நவீன புனைவுகள் (அப்படி தங்களுக்கு பட்டம் சூட்டிக்கொள்கிறார்கள்) எந்த தாக்கத்தையும் உண்டாக்கப் போவதில்லை.
சடங்கு ரீதியாக தங்களை முன்னிறுத்தி கொள்ளவே ஆங்கில மொழியாக்கம் வாயிலாக அந்நிய வாசகர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறார்கள். இதெல்லாம் தமிழுக்கு எந்த வளத்தையும் சேர்க்காது. எழுதிய எழுத்தாளரும், பதிப்பகமும் கல்லா கட்டதான் உதவும்.
