தனிப்பாடல் திரட்டு/அழகியசிங்கர்

ஔவையார்

விருந்திட வேண்டுமென்ற கணவன் பட்டபாடு

கவிதை:

இருந்து முகம் திருந்தி ஈரொடுபேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப. வருந்திமிக

ஆடினாள் பாடினாள் ஆடி பழமுறத்தால்

சாடினால் ஓடோட தான்.

கருத்து :

ஒருவன் தன் மனைவி அருகில் அமர்ந்தான் அவளது முகத்தைத் திருத்தினான். அவளுடைய தலையினின்று சிறிய பேனையும் பெரிய பேனையும் நீக்கினான். அதன் பின்னர் மெல்ல விருந்தினர் வந்துள்ளனர் என்று உரைத்தான். அவள் மிக வருந்தி கூத்தாடினாள். கோபப்பட்டுப் பாடினாள். பின்னர்க் கணவனைப் பலமுறை அவன் ஓட்டம் எடுக்குமாறு பழைய முறத்தால் அடித்தாள்.

என் பார்வை :

யாருடைய விருந்தினர் ? கணவனுக்கு வேண்டியவர்களா மனைவிக்கு வேண்டியவர்களா ?
கணவனுக்கு வேண்டியவர்களாகத்தான் இருக்க வேண்டும். மனைவியை தாஜா பண்ண அவள் தலையிலிருந்து பேன்களை எடுக்கிறான். ஔவை கூறுகிற இந்தத் தகவலும் வேடிக்கையாக உள்ளது.