சுவாமி யோகி ராம்சுரத்குமார்

(முகநூலிலிருந்து எடுத்தது)

1977ம் ஆண்டின் மத்தியில் சுவாமி யோகி ராம்சுரத்குமார், சுவாமிக்காக வாங்கப்பட்ட சந்நிதி அக்ரஹாரத் தெருவின் 90ம் எண் வீட்டில் குடியேறினார்.

சுவாமியின் உடமைகளான பெரிய பெரிய சாக்கு மூடைகள் வழக்கம்போல் தேரடி மண்டபத்திலும், பாத்திரக்கடை வாசலிலும் வைக்கப்பட்டு சுவாமியின் உதவியாளர்களால் பாதுகாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சுவாமியைக் காண வரும் பக்தர்கள் சுவாமியோடு சந்நிதித் தெரு வீட்டிலேயே தங்கினார்கள்.

சந்நிதித் தெரு வீட்டின் பின்புறம் ஒரு நீண்ட குறுகலான பாதை கொல்லைப் புறத்திற்குச் செல்லும். அந்த பாதையின் இடதுபுறத்தில் மூன்று அறைகள் இருக்கும். ஒன்று சமையலறை, அடுத்து ஸ்டோர் ரூம் பின்பு மிகச் சிறிய படுக்கை அறை.

இரவில் ஆண்கள் சுவாமியுடன் கூடத்தில் படுத்துக் கொள்வார்கள். பெண்கள் பின்புறம் உள்ள அந்த சிறிய படுக்கை அறையில் தூங்குவார்கள்.

படுக்கை அறைக்கு எதிரில் கிணறும், ஒரு பெரிய துணி துவைக்கும் கல்லும் இருக்கும். கிணற்றை அடுத்து ஒரு குளியலறை இருக்கும்.

குளியலறையை அடுத்து பின்பக்கம் செல்ல ஒரு கதவு இருக்கும். அந்த கதவைத் திறந்தவுடன் வலதுபுறம் கழிவறை இருக்கும்.

சுவாமியும், சுவாமியுடன் இருப்பவர் அனைவரும் அந்த மிகச்சிறிய கழிவறையைத்தான் பயன்படுத்துவார்கள். அந்தக் கழிவறையை பக்தர்கள் பயன்படுத்திவிட்டு, மிகச் சுத்தமாக கழுவி வைத்திருப்பார்கள்.

ஒரு நாள் ஒரு குடும்பம் சந்நிதித் தெரு வீட்டில் தங்கியிருந்தது. அந்தக் குடும்பத்தில் குழந்தைகளும் இருந்தார்கள்.

அன்று அதிகாலை தங்கியிருந்த குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை தனக்கு கழிவறை செல்ல வேண்டும் எனக் கூற தாய் குழந்தையை கழிவறைக்கு அழைத்துச் சென்றார். குழந்தை கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, வெளியில் இருந்த குழாய் பக்கத்தில் நின்றது. தாய் குழந்தையை சுத்தம் செய்துவிட்டு, குழந்தையோடு படுக்கை அறைக்கு தூக்கக் கலக்கத்தில் சென்று படுத்துக் கொண்டார். கழிவறையை சுத்தம் செய்ய அந்த பெண்மணி மறந்து விட்டார்.

காலையில் அப்பெண்மணி தண்ணீர் குழாயில் யாரோ தண்ணீர் பிடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தார்.

வெளியில் வந்து பார்த்தால், சுவாமி ஒரு வாளியில் தண்ணீரும், மற்றொரு கையில் தென்னங்கீற்று துடைப்பத்தையும் எடுத்துக்கொண்டு கழிவறை உள்ளே செல்வதைக் கண்ட அந்த பெண்மணி தன் தவறை உணர்ந்து, பாய்ந்து சுவாமியிடம் சென்றார்.

“சுவாமி தூக்கக் கலக்கத்தில் கழிவறையைச் சுத்தம் செய்ய மறந்துவிட்டேன் சுவாமி. என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி. துடைப்பத்தை என்னிடம் கொடுங்கள் சுவாமி. நான் சுத்தம் செய்து விடுகிறேன்.”
அப்பெண்மணி சுவாமியிடம் கெஞ்சினார்.

“கவலை வேண்டாம் அம்மா. இந்த பிச்சைக்காரர் சுத்தம் செய்வார்.”
சுவாமி ஆறுதலாகக் கூறினார்.

அப்பெண்மணி கண்ணீர் வடித்தபடி சுவாமியிடம் கெஞ்சினார்.

“சபர்மதி ஆஸ்ரமத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மஹாத்மா காந்தியே ஆஸ்ரமத்தின் கழிவறைகளைச் சுத்தம் செய்வார் அம்மா. மஹாத்மாவே இப்படிப்பட்ட சேவையைச் செய்யும்போது, இந்த சாதாரண பிச்சைக்காரன் இந்த வேலையைப் பார்ப்பதில் தவறில்லை அம்மா. இதோ வேலை முடிந்துவிடும். நீங்கள் செல்லுங்கள் அம்மா.”

சுவாமியின் கனிவான வார்த்தைகள் அப்பெண்மணியைக் கதறி அழ வைத்தது.

சந்நிதித் தெரு வீட்டின் கழிவறை என்றென்றும் சுத்தமாகவே இருந்தது. அது சுகாதாரப் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை.

சுவாமி என்றென்றும் சுத்தப்படுத்துபவர். அது கழிவறையோ, அன்றி மன மலத்தையோ, எந்தவித அசூயையும் பாராது சுத்தம் செய்பவர்.

எத்தனையோ பக்தர்களின் உழைப்பில் கிடைத்த, சுவாமிக்கு சமர்பிக்கப்பட்ட பணத்தில் கட்டப்பட்ட ஆசிரமம், அதுவும் சுவாமியின் மேற்பார்வையில் கட்டப்பட்ட ஆசிரமத்தின் ஒரு செங்கல்லை இடிப்பதே கொடுமை, மொத்தக் கழிவறைகளையும் சுகாதாரமாக வைத்திருக்க முடியவில்லை, அதனால் இடிக்கிறோம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

சமையலறையை விரிவுபடுத்த இடிக்கிறோம் என்பதை என்ன சொல்ல?

பெரிய சமையலறை கட்ட ஆசிரமத்தில் இடமா இல்லை. மூன்று இடங்களில், மூன்று வகை ஆகாரம் செய்து பக்தரை மூன்றாகப் பிரித்து ஆகாரம் அளிப்பது என முடிவு எடுத்தபின், இன்னும் இரண்டு புதிதாகக் கட்டலாமே?

சுவாமி நமக்கு கட்டிக் கொடுத்த சமையலறையை ஏன் இடிக்க வேண்டும்?
ஆசிரமத்தின் அறங்காவலர்கள் எனச் சொல்வோர் இச்செயலைச் செய்ய ஏகோபித்து முடிவு எடுத்ததாகச் சொல்வது……………? பக்தர்கள் சிலர் மனம் கலங்கிப் போயினர். என்று விடியல் ஏற்படுமோ?

யோகி ராமசுரத்குமரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.