அன்பு இல்லாதவர் இட்ட உணவின் இயல்பு/அழகியசிங்கர்

ஔவையார் பாடல்

(தனிப்பாடல் திரட்டு என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது)

காணக்கண் கூசுதே; கையெடுக்க நாணுதே;
மாணொக்க வாய் திறக்க மாட்டாதே; – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி யெரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

கருத்து :

ஐயையோ! விருப்பம் இல்லாமல் அவள் இட்ட உணவினைக் காண்பதற்கும் என் கண்கள் கூசுகின்றன. எடுத்து உண்பதற்குக் கை கூசுகின்றது. வாயானது அதை ஏற்றுக் கொள்வதற்குத் திறவாமல் இருக்கின்றது. வீணாக என் எலும்புகள் எல்லாம் கொதிக்கின்றன.

என் பார்வை :

உண்மைதான் விருந்தளிக்க விரும்பாத வீட்டில் சாப்பிட நேர்வதைப் போல் கொடுமையானது வேற எதுவுமில்லை.
நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

சாப்பிட்ட பிறகுதான்

சாப்பிட
உட்கார்ந்த பிறகுதான்
தெரிந்தது
சாப்பிடும் இலையில்
விழுந்தவை
என்னை உற்று நோக்கி
விஷமம் செய்வது
புரிந்தபிறகு
எழுந்து போக முடியவில்லை.

விருந்தளிக்க விரும்பாதவர் இடத்தில் சாப்பிட நேருகிற அவலத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்.