பகவானை சோதிக்க விரும்பிய அன்பர்/சிவ.தீனநாதன்

ராம்குமார் என்ற அன்பர் ஒருவர் ஒருநாள் பகவானைக் காண வந்தார். இவர் ‘ஆயிரம் முகம் ராம்குமார் ‘ என்று புகழ்பெற்றவர். ஏனென்றால் அவர் தன் முக தசை நார்களின் அசைவாலேயே சர்ச்சிலோ, காந்தியோ ஐன்ஸ்டினோ யாருடைய முகத்தை வேண்டுமானாலும் நினைத்த உடனேயே நம் கண்முன் கொண்டு வந்து விடுவார். இவரது வித்தையைப் பகவான் வியந்ததுண்டு.

இவர் ஸ்ரீரமணாச்ரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். அன்பர்கள் பகவானுக்குப் பழங்கள் கொண்டு வந்து சமர்ப்பிப்தையும் ஒரு பங்கைப் பிரசாதமாகப் பெறுவதையும் ராம்குமார் கவனித்தார்.

ராம்குமார் தானும் அவ்வாறு பகவானுக்கு ஏதாவது காணிக்கையாகக் கொடுக்க வேண்டு
மென்று எண்ணினார். அத்துடன் பகவானுக்கு ஒரு சோதனையும் வைத்தார்.

அவர் ஒரு நாள் ஒரு மிகப்பெரிய மாம்பழம் ஒன்றை வாங்கி வந்து பகவான் முன் காணிக்கையாக வைத்தார்.

பகவான் என்ன செய்தார் ? வேறொரு தட்டில் இருந்த சிறியதொரு மாம்பழத்தை ராம்குமாரிடம் கொடுத்து அவரை அர்த்தபுஷ்டியுடன் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.

பிரசாத்தைப் பெற்றுக் கொண்ட ராம்குமார் பகவானை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்து கூறினார். ‘ பகவானே! நான் தோற்றேன்; வெற்றி உங்களுடையது. ஒரே ஒரு பெரிய பழத்தைத் தங்களுக்கு அளித்தால் தாங்கள் எனக்கு எப்படி பிரசாதம் தருவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் தாங்கள் ஒரு சிறிய பழத்தை எனக்குப் பிரசாதமாகக் கொடுத்து எனக்குப் பாடம் புகட்டி விட்டீர்கள்.

பகவானை திருக்கரத்தால் பெறும் பிரசாதம் எதுவாக இருந்தால் என்ன? அது பகவத் பிரசாதமே ஆகும்.