
பார்வை
நிலவை மழித்தான்
தேவ நாவிதன்,
சிகையாய் முகில்கள்
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து
கவியானான்.
வெயிலை வழியவிட்டான்
வெளிக் கடவுள்.
இரவு பகலுக்கு
எதிரிடையாச்சு.
மனிதன்
இருமையை விசாரித்தான்.
போகப்போக
வியப்பும் விசாரமும்
தளரத்தளர
மீந்தது கண்வெளி
உலகு ஒன்றே.
இன்று
சூர்ய சந்திரச்
சிற்றணு ஒதுக்கி
புவனப் படர்ப்பை
கால வெளியை
கணித நோக்கால் கடந்து
நட்சத்திர மண்டல
காலக்ஸிக் குவியல்
குவாஸர் சிலதைக் கண்டான்
கொஞ்சம் வியப்பு
ஒருகண விசாரம்
மறுகணம் மனிதன்
கண்டதைப் பிடித்து ஆராய்ந்தான்.
கண்டதைக் கண்டது
கண்ணீர் விட்டது.

பிரமிள் கவிதை மூலம் தன்னை நிரூபிக்கத்தவறவில்லை