டாடா இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர்/பிருந்தா சாரதி

இந்திய அளவில் ஆண்டுதோறும் இக்கியத்திற்கு வழங்கப்படும் டாடா இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் அவரை எதிர்பாராத விதமாக சந்திக்க முடிந்தது. என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். முதன் முதலாக அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு எனக்கு வழங்கிய நினைவை அவரோடு பகிர்ந்து கொண்டேன். அம்பையும் கரிச்சான் குஞ்சு அவர்களை நினைவுகூர்ந்து அவரது நகைச்சுவை உணர்வு குறித்துக் கூறினார்.

பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களும், எங்கள் உரையாடலில் கலந்து கொண்டனர் .

டிஸ்கவரி முகப்பில் உள்ள வளாகத்தில் இருக்கும் காபி ஷாப்பில் அதை ஒரு தேநீர் சந்திப்பாக மாற்றினார் வேடியப்பன்.

கடைக்குள் சென்று அம்பையின் ‘வற்றும் ஏரியில் மீன்கள் ‘ சிறுகதைத் தொகுப்பை வாங்கிக் கொண்டேன்.

அம்பையின் முழுமையான சிறுகதைத் தொகுப்பையும் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.

:யப்பா…. எவ்வளவு எழுதி இருக்கிறார்?’ என்று மலைப்பாக இருந்தது. அளவு கூட இரண்டாம் பட்சம்தான்…. ஒவ்வொரு கதையும் பேசும் பொருளும், அவற்றின் கூர்மையும், அவரது கவித்துவமான நடையும் , முக்கியமாக அவற்றில் வெளிப்படும் அம்பையின் பார்வையும் இந்த பிரமிப்புக்குக் காரணம்.

நீண்ட நாளாயிற்று அம்பையின் கதைகளைப் படித்து. இந்த வாரத்தில் படிக்கவேண்டும்.

வற்றும் ஏரியில் மீன்களைப் பற்றிய குறிப்பை இன்னொரு நாள் எழுத விருப்பம்.
*

*