ஆநிரைக் கண்ணன்/நாகேந்திர பாரதி

ஊட்டி மலையில் வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாதையில் லாகவமாக தனது ஹோண்டோ சிட்டியில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் பிரியா. அப்பொழுது மலைப்பாதை ஓரத்திலே ஆடுகளும் மாடுகளும் ஆக அமர்ந்து அசை போட்டுக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தாள் . தானும் இந்த ஆட்டு மந்தைகளில் ஒருத்தியாகத்தான் இருக்கிறோமோ என்று ஒரு எண்ணம் திடீரென்று அவளுக்குள் எழும்பியது .

காலை முதல் மாலை வரை தொடர்ந்த வேலை. வீட்டில் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியன செய்துவிட்டு அந்த டீ எஸ்டேட் நோக்கிப் பயணம். மேனேஜர் வேலை. இவளிடமே அந்தத் தேயிலைத் தோட்டத்தை ஒப்படைத்து விட்டு துபாய் சென்று விட்ட முஸ்தபா வருடம் ஒரு முறை வந்து அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து இன்கிரிமெண்ட் கொடுத்து விட்டுச் சென்று விடுவார். அப்பாவின் நண்பர். நீண்ட நாள் பழக்கம். அப்பா இருந்த வரை அவரிடம் பொறுப்பு. இப்பொழுது இவள். எக்ஸ்போர்ட் வேலைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு .

இது தவிர வீட்டுக்குத் திரும்பி வந்தபின் மறுபடி கணவன் குழந்தைகள். கல்லூரிப் பருவத்தில் எவ்வளவு ஆசைகள். ஊட்டி குதிரை ரேஸில் முதல் பரிசு . குதிரையாக இருந்த அவள் இப்போது அந்த ஆடுகளில் ஒருத்தியாக மாறிவிட்டாளோ . லேசான சிரிப்பு வந்தது பழைய நினைவு . அவள் தோழி , ‘நீயும் ஒரு குதிரை தாண்டி, உயரமா, வாட்ட சாட்டமா, எந்த வேலையிலும் வேகத்தோடும் சுறுசுறுப்போடும். ‘ காரை ஓட்டிக்கொண்டே யோசித்துப் பார்க்கும் பொழுது ‘இது என்ன வாழ்க்கை’ என்று தோன்றியது. அந்தக் குதிரை இப்போது ஒரு ஆடாக மாறியது போலவும் அவளை மேய்ப்பவர்கள் பலர் இருப்பது போலவும் ஒரு பிரமை, கணவன், குழந்தைகள் , முதலாளி எல்லோருமே தன்னை ஒரு ஆடாகத் தான் மேய்த்துக் கொண்டு இருக்கிறார்களோ.

அலுவலக ஆண்கள் சிலரின் பொறாமைப் பார்வைகள், ஆசைப் பார்வைகள், இந்த ஆட்டின் தொழில் திறமைக்கும் , தோல் வெளுப்புக்கும் அவள் கொடுக்கும் விலையா . வெறுப்பாக இருந்தது.

அவளுக்கு வேண்டிய வசதிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் மனத்திருப்தி என்பது இருக்கிறதா என்பது ஒரு பெரிய கேள்வியாக அவள் முன். எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை தான் . ஆனால் அந்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் சில நேரம் மிகவும் பாதித்து அவள் தூக்கத்தையே கெடுத்து விடுகிறது. பக்கத்தில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனிடம் இதை எல்லாம் பகிர முடியுமா. அவனால் புரிந்து கொள்ள முடியாது என்பது அவளுக்கு ஆரம்பம் முதலே தெரிந்த விஷயம் தான். .

அன்று அலுவலகத்தில் இதே யோசனைதான். தேயிலை வாசமும் , அவர்கள் தோட்டத்தில் மட்டுமே கிடைக்கும் அந்த உயர்தர டீயின் வாசமும் ருசியும் கூட அவள் மனதை மாற்ற வில்லை. நான் உடலா, மனமா, உடலின் அழகும் ஒரு பாரமா, மனதின் குழப்பங்கள் அதை விட பாரமா. மதியத்திற்கு மேல் , மற்றும் ஒரு அலுவலரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் திரும்பினாள். வருகின்ற வழியில் அந்தக் கண்ணன் கோயில் . அங்கு இறங்கி சிறிது நேரம் இருந்து விட்டுச் சென்றால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது .உள்ளே நுழைந்தாள் . அங்கே புல்லாங்குழலுடன் நிற்கும் அந்த மாயக்கண்ணன் சிலையைப் பார்த்ததும் மனதில் ஊற்றெடுத்த அன்பின் வழி ஒரு அமைதி நிரம்பியது.

ஒரு ஆனந்தம் ததும்பியது. அங்கிருக்கும் கிருஷ்ணரை வணங்கி விட்டு ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்தாள். சுவற்றில் வரைந்திருந்த சித்திரத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணன். ஒரு நிமிடம் மனதிற்குள் ஒரு வெளிச்சம். நான் தான் அந்தக் கண்ணனோ. குடும்பம் அலுவலகம் இதில் இருக்கும் அனைவருமே அந்த ஆநிரைகளா . நான்தான் அவர்களை மேய்த்துக் கொண்டு இருக்கிறேனோ. உண்மை தானே. என் கட்டுப்பாட்டில் , என் கண்காணிப்பில் தான் எல்லாமே நடக்கிறது . அவர்களை ஒழுங்கு படுத்திச் செல்லக்கூடிய ஒரு பொறுப்பும் என்னுடையதுதான். ‘நானும் கண்ணன் தான்’ என்ற நினைப்பு அவளுக்குள் தோன்றிய உடன் மனது மலர்ந்து முகத்தில் வழிந்தது.

திரும்பி வரும் பொழுது அங்கே அந்த யூகலிப்டஸ் மரங்களிலிருந்து வந்த வாசம் அவள் மூச்சில் நிறைந்து நெஞ்சில் நிறைந்து ஒரு சுகத்தைக் கொடுத்தது. அந்தக் குளிருக்கு இதமாக இருந்தது அந்த மரங்களும் அந்த ஆகாயமும் அந்த ஊட்டியுமே புதிதாக தெரிந்தன. அந்த ஹோண்டா சிட்டி திரும்பி அலுவலகம் நோக்கி விரைந்தது. வரும் வழியில் அந்த ஆடு மாடுகள் அசை போடும் அதே இடம். ஒரு குறும்புச் சிரிப்புடன் இறங்கிய பிரியா அவற்றின் அருகே சென்று ‘ தே ‘ என்று செல்லமாக ஒரு சத்தம் கொடுத்து விட்டுத் திரும்பி வந்து காரில் ஏறினாள். அப்போது அவள் முகத்தில் பூத்த அந்தப் புது அழகைப் பார்த்து சூரியனும் கொஞ்சம் சொக்கிப் போய் மரங்களுக்கு நடுவே மறைந்து கொண்டு பார்த்தான். ப்ரியாவின் சிந்தனையோ ‘போனவுடன் நம்ம கம்பெனியோட அந்த ஸ்பெஷல் டீ குடிக்கணும் ‘ என்ற எண்ணத்தோடு அவளுக்குள் தேயிலை வாசமாக நிறைந்தது .