ரெட்டியின் தோழன்

எஸ் வி வேணுகோபாலன்  

ஓர் அடியாள் எத்தனை உயரம், எத்தனை அகலம், எத்தனை மூர்க்கமாக இருப்பான் என்பதை அந்நாட்களில் கேள்விப்பட்டுக் கூட இருக்கவில்லை. அவன் பெயர் மட்டும் எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. அதுவே என்னை நடுங்க வைக்கப் போதுமானதாக இருந்தது. கிருஷ்ணா ரெட்டி.

என்னை ஆள் வைத்துக் கடத்தி அவனிடத்திற்கு வரவழைக்கும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அதிலும் அற்பமானவனாக நான் தோன்றியிருக்கவேண்டும். அவனே என்னை வந்து சந்திப்பான் என்று வந்த இரண்டாம் செய்தி என்னை முற்றிலும் கலைத்துப் போட்டது. அப்படி ஒரு நிகழ்வு நடக்காது கடந்து போய்விட முடியாதா என்று முந்தைய இரண்டு நாள் செயல்பாடுகளை உள்ளே திரும்ப ஒளிப்படமாக ஓடவிட்டேன். 

சுரேந்திரன், செயலாளர் பதவிக்கு நிற்கிறேன் என்று சொல்லி இருந்தான். என்னிடம் அல்ல, போஸ்டர் அடித்து, கல்லூரி முழுக்க சொல்லி இருந்தான். கடைசி இருபது போஸ்டர்களை, கல்லூரி வகுப்புகளுக்கு வெளியே பரத்தி வைத்து, பெரிய கற்களை மேலே பரப்பி வைத்த வேலையில் எனக்கும் பங்கிருந்தது. ஜெயின் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் என்றதும் எனக்குள் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல் களேபரங்கள், அண்ணன்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட நாட்களின் சாகச உணர்வு தலை தூக்கி இருந்தது. எத்தனை நாற்காலிகள், மேசைகள் பந்தாடப்படும், வெளியே இருந்து மாணவரே இல்லாதவர்கள் எத்தனை படைவரிசையோடு உள்ளே வந்து மோதுவர்கள் என்பதெல்லாம் ஒரு திரைப்படக் காட்சி போல எனக்கு விளக்கிச் சொல்லப்பட்டிருந்தது. 

ஜெயின் கல்லூரியில் எந்த அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பு இல்லை என்ற உறுதியோடு கோதாவில் இறங்கி இருந்தோம். 

ஒரே  ஒரு பிரச்சனை, ஜெயின் கல்லூரி யாருக்காக எழுப்பப் பட்டிருந்ததோ அந்த சமூகத்தின் செல்வாக்கு மிகுந்த மாணவர்களும் தேர்தல் களத்தில் நின்றனர். அவர்கள் கார்கள் மீது நின்றனர். சுரேந்திரனுக்கு ஒரு சைக்கிள் ரிக் ஷா ஏற்பாடு ஆகியிருந்தது. கறுத்த உருவத்தினன், நெடிதுயர்ந்த மனிதன் சுரேந்திரன் பிரச்சாரத்தில் கைகூப்பியபடி சென்று வாக்கு கேட்டான். உடன் சென்ற குறுங்கூட்டத்தில் நான் இருந்தேன். 

வலுவான முழக்கங்கள் திடீர் என்று எதிர்ப்பக்கம் கேட்டது. என்னுள் இருந்த கவிஞன் விழித்துக் கொண்டான். சந்தங்கள் கடலலை போல் உயர்ந்து எழுந்து நின்று ஓங்காரமிட்டன. எல்லோரும் தங்களுக்காக வாக்கு கேட்டு ஒலியெழுப்பி வந்தனர். நாங்கள் சுரேந்திரனுக்காகக் குரல் கொடுத்துச் சென்றோம். அதுவரை பிரச்சனை இல்லை. 

சுரேந்திரன் அவன் பெயர். அவனுக்கு வேறு ஒரு பெயரும் இருந்தது. படேல் என்ற பெயரால்தான் அதிகம் அறியப்பட்டிருந்தான். 

ஜெயிப்பது யார் பட்டேலு என்ற முதல் வரிக்கு மிகப் பெரிய கைதட்டல் பிறந்தது. கவிதையின் அடுத்த வரி சும்மா இருக்குமா, மத்தவன்லாம் அம்பேலு என்று பிறந்தது. ஜெயிப்பது யார், பட்டேலு! மத்தவன்லாம் அம்பேலு!! என்று போட்டதும், குஷி பிறக்கலானது. பன்மடங்கு ஆவேசமாக இந்தப் பல்லவியே ஓடிக்கொண்டிருந்தது. 

எதிர்ப்பக்கம் நின்ற ஜெயின் மாணவருக்கு ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் களத்தில் வேலை செய்தனர். என்னையெல்லாம் ஒரு புழு போலப் பார்த்து நகர்ந்து போய்க்கொண்டிருந்தவர்கள். கோஷத்தின் வேகம் அவர்களைத் தவறான பக்கம் சீண்டிவிட்டது. எனக்குப் பாடம் கற்றுக் கொடுப்பது என்பது அவர்களது மந்திராலோசனை முடிவு. முக்கிய காரணம், எதிர்பாராமல், சுரேந்திரன் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டான். இத்தனைக்கும் வாக்கு எண்ணிக்கையின் போது அங்கே இருக்கவில்லை நான். 

தேர்தல் வேலைகளில், குறுக்கே வம்பு செய்பவர்களைத் தனியே கவனிப்பது என்ற பொறுப்புக்கு அவர்கள் தேர்வு செய்து வைத்திருந்தவன் தான் கிருஷ்ணா ரெட்டி. அவன்தான் என்னை மறுநாள் என்னை என் வீட்டிலேயே சந்திப்பது என்ற முடிவைச் சொல்லி அனுப்பியது. சிங்கத்தைத் தானே அதன் குகையில் சந்திப்பது கம்பீரம். ஓர் எலியை அதன் வளைதேடி வந்து அடித்து நொறுக்குவது அவனது தகுதிக்கு இழுக்கு ஆகாதா என்ற கேள்வியை என் உயிர் காக்கவல்ல கடைசி அஸ்திரமாக வைத்திருந்தேன். 

ஐந்தடி கூட இல்லை கிருஷ்ணா ரெட்டி! லுங்கியை மடித்துக் கட்டியிருந்தான். சட்டை காலரில் பாரம்பரியமாக இருக்கும் கைக்குட்டை கூட இருந்ததுபோல் தெரியவில்லை. 

நான் இருந்தது மாமா வீட்டில். அதிர்ஷ்டம் என் பக்கத்து வீட்டில் இருந்தது. அங்கே ஒரு பெரியவரின் வீடும், வாசலில் அவரது காபிப்பொடி கடையும் இருந்தது. அவருக்கு முதுமை முற்றி இருக்கவே, கடையை மகன் தான் பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளை வெளேர் என்ற நிறம். என் மீது கொஞ்சம் பரிவுப் பார்வை உண்டு. என் முதல் சிறுகதை வந்தபோது, ஆனந்த விகடன் இதழை ஆசையோடு புரட்டிப் பார்த்தது அந்த காபிப்பொடிக் கடையில் தான். 

கடைக்கார இளைஞர், ரெட்டியின் தோஸ்த் என்பதை அந்த முகூர்த்த நாளில் தான் பார்த்தேன். ‘உனக்கு ஏண்டா இந்த வேலையெல்லாம்?’ என்று ஒரு சவுண்டு கொடுத்துவிட்டு,  “ரெட்டி விட்டிரு, நம்ம பையன் தான், உறவுக்கார பையன் வேற….விடு பாத்துக்கலாம்” என்றார். 

ஆனால், அதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டி வந்தது. காப்பிப் பொடிக்கடைக்கார இளைஞர், எத்தனையோ முறை முயற்சி செய்தும் எஸ் எஸ் எல் சி முடிக்க முடியவில்லை. கணக்கு பரீட்சை காலை வாரி விட்டுக் கொண்டே இருந்தது. நான் நல்ல படிப்புக்காரன் என்கிற வேண்டாத சங்கதியை அந்த இளைஞர் காதில் யாரோ போட்டிருந்திருக்க வேண்டும். இரண்டு நாளில் மீண்டும் தேர்வு நடக்க இருந்தது. பரீட்சை நடக்கும் சென்டர் அருகே நான் போய் எதிரே ஒரு மரத்தடியில் காத்திருக்க வேண்டும், ரெட்டியின் ஆட்கள், கேள்வித்தாளை வேகமாகக் கொண்டு வந்து என் கையில் திணிப்பார்கள், சட்டென்று அமர்ந்து, பாஸ் ஆகும் அளவுக்கு கிடுகிடு என்று அங்கேயே அமர்ந்து பிட் எழுதிக் கொடுக்க வேண்டும். கையாட்கள் அதை உள்ளே சேர்த்துவிடுவார்கள்.

இந்தக் கேடுகெட்ட வேலைக்கு, பேசாமல்,  கல்லூரி தேர்தலில் நடந்த அதிகப்பிரசங்கத்திற்கு ரெட்டியின் கையால் நாலு அடி வாங்கி இருக்கலாம் என்று பட்டது. கிருஷ்ணா ரெட்டி அன்று மாலை என்னோடு மொட்டை மாடிக்கு வந்து பேசிக்கொண்டிருந்தான். எனக்கு கணக்கு பரீட்சை வினாக்கள் எல்லாம் அத்துப்படி என்பது அவனுக்கு வியப்பும், மரியாதையும் ஏற்படுத்தி இருந்தது. நான் சொன்னேன், இந்த முறை விட்ருங்க, மூன்று மாதம் நான் அவருக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கறேன், ராஜா மாதிரி பாஸ் பண்ணலாம், இந்த காப்பி அடிக்கிற வேலையெல்லாம் எனக்கு சம்மதம் இல்லை என்றேன். 

ரெட்டி என்னைக் கூர்ந்து பார்த்தான். உன் கிட்ட யோசனையெல்லாம் கேட்டோமா என்றான். அவனுக்கு மேற்கொண்டு வேலை வைக்க நான் துணியவில்லை. 

மறுநாள், கையில் இருந்த சில்லறை காசுக்கு சைக்கிள் ஒன்று ஹையர் செய்து எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட பள்ளி வாசலில் நின்றேன். காத்திருந்தேன். உள்ளிருந்து யாரும் வரும் நிழலே தெரியவில்லை. அந்தப் பக்கம் போனவர்கள் நான் அங்கே சந்தேகப்படும்படி நிற்பதை சந்தேகத்தோடு பார்த்துக் கடந்து போனது மாதிரி எனக்கு சந்தேகம் தோன்றியது. மூன்று மணி நேரம் முழுதாகக் காத்திருந்தேன். அதாவது தேர்வும் முடிந்து எல்லோரும் போனபின்னும். 

ரெட்டி வரவில்லை. பக்கத்து காப்பிப்பொடி கடைக்காரர் வரவில்லை. எதுவும் நடக்கவில்லை. சைக்கிளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டுக்குப் போய்விட்டேன். 

இரண்டு வாரங்கள், கடைப்பக்கம் விகடன் வாசிக்க நான் போக முற்படவில்லை. பிறகு ஒருபோதும் அந்தக் கடைக்குள் நுழையவில்லை. 

காலங்கள் உருண்டோடி விட்டன. நான் குடிபெயர்ந்து ஊர் பெயர்ந்து எங்கெங்கோ போய் மீண்டும் அருகில் இருக்கும் பகுதிக்கு மீண்டிருந்தேன். ஒரு நாள் அந்தப் பக்கம் நடை போட்டபோது, அந்தத் தெருவில் அந்தக் கடை இப்போது இல்லை. அதை இடித்து இருபது ஆண்டுகள் ஆகி இருக்கக்கூடும். பின்பக்கம் கடைக்காரர்களது பெரிய வீடு. வேப்ப மரம், பெரிய கிணறு, தோட்டம் எதுவுமே இல்லை. ஓர் அபார்ட்மெண்ட் உருவாகி விட்டிருந்தது. உரத்த குரலில் பேசும் முதியவள், அந்தத் தோட்டத்திற்கு அதிகம் வாழ்க்கைப் பட்டிருந்தவள், இதெல்லாம் இடிபடுமுன் மரித்துவிட்டிருந்தாள். காப்பிப்பொடிக் கடை இளைஞனின் தாய் அவள். பக்கத்து வீட்டு மாடி போர்ஷனில் இருந்து நாங்கள் பார்க்கையில் கீழிருந்து அன்போடு சிரிப்பாள். 

எப்போதும் வெற்றிலை, பாக்கு, புகையிலை சிகரெட், பின்னர் மதுப் பழக்கத்திற்கும் அடிமைப்பட்டு விட்ட அந்த இளைஞரைப் பற்றி ஒரு நாள் அந்தத் தெருவில் யாரிடமோ அடையாளம் சொல்லிக் கேட்டேன், அவன் போய் எத்தனை வருஷம் ஆச்சு என்று பதில் வந்தது. 

வசீகரமான அவர் முகத்தை நினைக்கும் போதெல்லாம் அவர் எப்படி ஒரு ரவுடியின் தோழனாக இருந்தார் என்பது பிடிபடாமலே போய்விட்டது. தவிரவும், அவர் எஸ் எஸ் எல் சி தேர்வை முடித்திருந்தாரா என்று எனக்கு இனி ஒரு போதும் தெரியவே வராது. 


8 Comments on “ரெட்டியின் தோழன்”

  1. எண்ண அலைகளின் கனம், காலத்தால் இலேசாகிவிடுகிறது. செல்வாக்கு மிக்கவர்கள் போட்டியிடும் தேர்தல்களில் சப்பாணிகளின் கால்கள் தான் உடைபடவேண்டியிருப்பது வரலாற்று உண்மை. வழக்கம்போல வேணுகோபாலரின் எழுத்தோவியம் மனதை மயக்குகிறது.

  2. பழைய நினைவுக்கு கொண்டு போன நினைவலைகள்.காப்பிபொடி கடை ஒரு அருமையான பதிவு

  3. இளம் பிராய நினைவுகள் காலம் கடந்து முதிரும் போது கதையாய் ஆகி நகைக்க வைக்கிறது. நன்று

  4. சில சிக்கல்களை காலம் தீர்த்து வைக்கும். எங்கள் வங்கி கிளையில் ஒவ்வொருவராக ஸ்கூட்டர் வாங்கினோம். Park பண்ண இடமே இல்லை. போட்டி, சச்சரவுகள். இரண்டு முறை பெட்ரோலா விலை உயர்ந்தது. Parking area காலியாகிவிட்டது.

  5. வேணுவின் ( சிறு) கதை ,இளமைக்கால நினைவுகளை சுவைபட சொல்லி நம்மையும் பால்ய காலத்துக்கு அழைத்து சென்று நினைவுகளில் மூழ்கடித்துவிடுகிறது.

    முரடன் ரெட்டியை எதிர்கொள்ள / வெற்றிகொள்ள அறிவாளியாக இருந்தாலே போதும் போலிருக்கிறது.

    கதை சொல்லி நடிகர் விவேக்கை நினைவுபடுத்திவிடுகிறார் .

    “ உரத்த குரலில் பேசும் முதியவள் அந்தத் தோட்டத்திற்கு அதிகம்வாழ்க்கைப் பட்டிருந்தாள்” என்ற வரிகள் வேணுவுக்கு மட்டுமே வசப்படும் .

    எழுதுங்கள் நிறைய .. வாசிக்க ஆவலுடனிருக்கிறோம் 💕😍

    வாழ்த்துகள் வேணு👏👏👏

    — ஆர் எஸ் மணி ,திண்டுக்கல்

  6. வசூல் ராஜா எம்பிபி எஸ் நினைவூட்டுகிறது. அதேபோல் ஒரு திரைப்படத்தில் குத்து சண்டையில் தோற்ற வடிவேலு கோப்பை தனக்குத்தான் என்றும் இதற்கு மேல் அடித்தால் கொலைக் குற்றம் வந்துவிடும் என்று கூறுவதையும் கதை நினைவுபடுத்துகிறது. எஸ்விவியின் முகத்திலேயே ஒரு நகைச்சுவை பாவம் தெரியும்போது எழுத்தில் பிரமாதமாகத்தானே வரும்?

Comments are closed.