சிங்கிள் வரி சிறுகதைகள்

 நாகேந்திர  பாரதி

காதல்
————-
அவளை விடாது பின் தொடர்ந்து சென்று , அவள் காலடியிலேயே கிடக்க விரும்பிய, தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவளது நிழல்.

தலைகீழ்
—————
கண்ணாடியில் தன் உருவம் தலை கீழாய்த் தெரிவதைப் பார்த்து பயந்து போய் அதிர்ச்சி அடைந்த அவள், மறு  நிமிடம் சுதாரித்துக்கொண்டு, நிதானமாக கண்ணாடியைத் திருப்பி வைத்தாள் தலைகீழாக. 

ரசீது
———
கிராமத்தில் விவசாயிகளிடம் கறாராக பேசி கந்து வட்டியாக வசூலித்த  பணத்தோடு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தவனை வழி மறித்து சோதனை போட்டு ரசீது கேட்டார்கள் எலெக்சன் அதிகாரிகள்.

கொலை
————-
‘சீர்திருத்தப் பள்ளியிலே சேர்ந்து படித்தாவது வாழ்க்கை கிடைக்கட்டும் மகனுக்கு’ என்று நினைத்தபடி அவன் கையில் கொடுத்த பிஸ்டலைத் திருப்பி விசையை அழுத்தி சாய்ந்தாள் அந்த அபலைப்  பெண்.

தண்டனை
—————-
பஸ் நெரிசலில் களவு போன கைக்குழந்தை மோதிரத்தின் விலை ஐநூறு ரூபாய் ஆச்சே என்று புலம்பிய மனைவியிடம் அவர் கொடுத்த அந்த எலெக்ட்ரானிக்  பொம்மை  அந்த கைவண்டி வியாபாரியிடம் பேரம் பேசி ஐநூறு ரூபாய் குறைத்து வாங்கியது.


ReplyForward

One Comment on “சிங்கிள் வரி சிறுகதைகள்”

Comments are closed.