இராய செல்லப்பா
“இவன் பீகாரில் இருந்து வந்தவன். பெங்களூரில் இரண்டு வருடம் இருந்தவன். இவள் ஒரிசாவில் இருந்து வந்தவள். கணவன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்தப் பையன், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் ஓடி வந்திருக்கிறான். பேசும் பாஷை யாருக்கும் புரியவில்லை. அஸ்ஸாம்காரனாக இருக்கலாம்.”
ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார் நாயுடு. மொத்தம் இருபத்தைந்து பேர்!
அசந்துபோனார் சாமி. மூன்றுவேளை சாப்பாடு இருபத்தைந்து பேருக்கு! தன்னால் முடியுமா?
“நெடுஞ்சாலை முனியப்பா, நீதான் இவர்களைக் காப்பாற்றவேண்டும். இவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும்வரை சோறு போடுவதற்கு எனக்கு நீ தான் வசதியைச் செய்துதரவேண்டும்” என்று வேண்டினார் சாமி.
சாமியின் முழுப்பெயர் முனுசாமி. ஓசூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்ற முற்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தும் விதமாகத் தோன்றிய சுயம்பு முனியப்பசாமி கோவிலின் பூசாரி.
நெடுஞ்சாலை வழியாகப் போகும் பாரவண்டிகள் அங்கே சற்று நேரம் நின்று கற்பூரம் கொளுத்தி, உண்டியலில் காசு போட்டுவிட்டு, ஒரு கிலோமீட்டர் தொலைவில் முளைத்திருந்த ‘தாபா’க்களில் வடநாட்டு உணவுகளைச் சுவைத்துப் போகும் பழக்கம் விரைவிலேயே ஏற்பட்டதால் நெடுஞ்சாலை முனியப்ப சாமி பிரபலமானார்.
கோவிலில் நின்று மரியாதை செய்த வண்டிகள் எந்த விபத்தும் இல்லாமல் செல்வதை உள்ளூர்ப் பத்திரிகைகளும் சேனல்களும் பிரபலப்படுத்தியதால் நம் சாமியும் கூடவே பிரபலமானார்.
அதுவே இப்போது அவரைப் பெரிய சிக்கலில் கொண்டுவந்துவிட்டது.
கோவிலுக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு கட்டுமானத்திற்காக அழைத்துவரப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள், கொரோனா காரணமாக வேலை இழந்துவிட்டனர். சம்பந்தப்பட்ட முதலாளிகள் சில மாதங்கள் வரைதான் உதவ முடிந்தது. சொந்த ஊருக்குத் திரும்புவதற்குப் பணமோ, ரயிலோ இல்லை. அவர்களை எப்படியாவது ஆதரிக்க வேண்டுமென்று உள்ளூர் ஆர்வலர் நாயுடு கேட்டுக்கொண்டார். பெயரே நாயுடுதான். அறுபது வயதிலும் இளமையாக இருப்பவர். உடல் உழைப்பு என்றால் முன்னால் நிற்பவர். யார் உதவி கேட்டாலும் ஓடிவந்து நிற்பார்.
“நம்பளை விட்டால் இவங்களுக்கு வேற வழியில்லை” என்றார் நாயுடு. “இன்று மட்டும் சாப்பாடு வக்கீல் வீட்லேருந்து வந்துடும். நாளைக்கு என்ன செய்வதுன்னு யோசிக்கணும்” என்றவர், அவர்களைப் பார்த்து, “எல்லாரும் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்தில் தங்கிக்கொள்ளுங்கள்” என்றார், பெரிய அதிகாரியின் தோரணையில்.
பள்ளிக்கூடத்தின் கதவு எப்போதும் பூட்டியே இருக்கும். மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதால் கைவிடப்பட்ட பள்ளி அது. ஆனால் நீண்ட பெரிய வராந்தாவும், நிழல்தரும் பெரிய மரங்களும், குடிநீர்க் குழாயும் பெண்களுக்கு ஏற்ற கழிவறையும் இருந்தன. இருபத்தைந்து பேரும் தங்களுடைய அற்பமான உடைமைகளுடன் அங்கு குடியேறினார்கள்.
கோவில் என்று பெயரே தவிர, வெறும் ஓலைக் கொட்டகைதான். அதில் செதுக்கப்படாத ஒரு கருங்கல்தான் முனியப்ப சாமி. அருகில் சில மர பெஞ்சுகள். சில ஒடிந்த நாற்காலிகள். எந்த நேரமும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிவிடலாம் என்ற அச்சத்துடன் அருகில் ஓர் ஓலைக்குடிசையில் சிறு டீக்கடை.
உரிமையாளர் நந்தனாருக்குச் சொந்த ஊர் சிதம்பரம். முன்னாள் இராணுவத்தார். நாயுடுவின் பொதுநலக் காரியங்களில் துணையாக இருந்து வருபவர்.
லாரிக்காரர்கள் போடும் உண்டியல் பணம் எப்படியும் ஒரு நாளைக்கு முன்னூறு தேரும். கொரோனா காலமாதலால் வண்டிகளின் போக்குவரத்து குறைந்துபோய், இருநூறுக்குமேல் இப்போது தாண்டுவதில்லை. அதை வைத்து இவர்களுக்கு ஒருவேளை சாப்பாடு போடலாம். அதன் பிறகு? அதிலும் இவர்கள் கடும் உழைப்பாளிகள். உணவு சற்றே அதிகம் தேவைப்படும்.
சாமியும் நாயுடுவும் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று ராகி, கம்பு என்று வசூல் செய்தார்கள். காய்கறிகளும் இனாமாகக் கிடைத்தன. பள்ளிக்கூட வளாகத்திலேயே அடுப்புமூட்டி ஒரே சமையலாகச் செய்து சிலநாட்கள் கழிந்தன.
கிராமமாதலால் பால் தாராளமாகக் கிடைத்தது. அதற்குப் பதிலாக இந்தப் பெண்களில் சிலர் மாட்டுத்தொழுவங்களில் வேலை செய்தார்கள். சிலர் கடுகு, சோளம், அறுவடைக்கு உதவினார்கள்.
ஆனால் அவரிடம் புகலிடம் தேடி மேலும் பலரும் வர ஆரம்பித்தார்கள். “நெடுஞ்சாலை முனியப்பா, நீதான் வழிசொல்லவேண்டும்” என்று நெஞ்சார வேண்டிக்கொண்டார் சாமி.
***
அன்று மாலையே அவர் வேண்டுதல் பலித்துவிட்டது.
“சாமி, வணக்கம்” என்று அவருடைய காலைத் தொட்டு வணங்கினான் மருதுபாண்டி. “நீங்க பண்ற நல்ல காரியத்துல எனக்கும் பங்கு தரக்கூடாதா சாமி?” என்றான்.
மருதுபாண்டி கொஞ்சம் விவகாரமான ஆள் என்று சாமிக்குத் தெரியும். எனவே தனியாக அவனிடம் மாட்டிக்கொள்ளவேண்டாம் என்று நாயுடுவையும் நந்தனாரையும் வரச் சொன்னார். “மருது வந்திருக்கான்” என்றார்.
மருதுபாண்டிக்கு அவர்களை நன்றாகத் தெரியும். அவனுடைய சாராயக்கடையில் அடிக்கடி வந்துபோவார்கள்.
“சாமி! காலத்தோட கொடுமை நீங்க இவ்ளோ கஷ்டப்படுறீங்க” என்று ஆரம்பித்தான் மருது.
“என்ன பண்றதுப்பா? வெளியூர்க்காரங்க புள்ள குட்டிகளோட இங்க வந்து பட்டினி கெடக்கறத பாக்க சகிக்கலயேப்பா! அங்க இங்க பீறாஞ்சிக்கிட்டு வந்து கஞ்சியோ தண்ணியோ ஊத்தறது தானே நம்ம தர்மம்! ஏதோ அவன் படியளக்குறான், அவன் பேரச் சொல்லி நாங்க நடத்தறோம்” என்று வானத்தைக் காட்டினார் சாமி.
“ஆனா ஒவ்வொரு ராத்திரியும் படுக்கறப்போ நாளைக்கு என்ன செய்யப்போறோம்னு அடிவயத்தக் கலக்குதுப்பா!” ஆமாம் என்று தலையாட்டினார்கள் நாயுடுவும் நந்தனாரும்.
“இனிமே அந்தக் கவலையை என்கிட்டே விட்டிடுங்க சாமி! ஒவ்வொரு நாளும் சொளையா ஒங்களுக்கு ரெண்டாயிரம் ரூபா நான் ஏற்பாடு பண்றேன்! மூணு வேளையும் நல்ல சாப்பாடு போடலாம்” என்றான் மருது.
மாலை நேரமானதால் தெரு விளக்குகள் போடப்பட்டு அந்த இடமே ஒளிமயமானது. “நல்ல சகுனம் சாமி” என்றார் நாயுடு.
சாமிக்கு மனதுக்குள் அளவிடமுடியாத ஆனந்தம் ஏற்பட்டது. தினமும் ரெண்டாயிரம் இருந்தால் எவ்வளவு பேருக்குப் பசிதீர்க்கலாம் என்று கணக்குப் போட்டது மனம். “அதுக்காக நாங்க செய்யவேண்டிய வேலை என்னன்னு சொல்லுப்பா மருது. என்னோட லைனே வேறே, ஒன்னோட லைனே வேறே. விபரீதமா எதுவும் இழுத்து விட்டுடாதே” என்று கவலையோடு சொன்னார்.
உலகத்திலுள்ள பயபக்தியெல்லாம் முகத்தில் வரவழைத்துக்கொண்டு மருது கூறினான். “ஐயையோ, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க சாமி! ஏதோ வயத்துப் பொழப்புக்காக சாராயக்கடை நடத்தறேன். அதுவும் நம்ப எம்எல்ஏ தாட்சண்யத்துக்காக. மத்தபடி எம்மேல ஒரு தப்பு தண்ட்டா இருக்கான்னு ஊர்ல கேளுங்க. என்ன நாயுடு நான் சொல்றது?”
நாயுடு இல்லையென்று தலையசைத்தார்.
“சாமி, ஒங்க கிட்ட மாருதி ஆம்னி வேன் இருக்குதில்லையா, அதை எங்களுக்கு ரெண்டு மூணு மாசத்துக்கு வாடகைக்கு குடுக்கணும். அவ்வளவுதான்” என்றான் மருது.
“அட நீ ஒண்ணு. அது ஓடாம நின்னு கெடக்கு. ரிப்பேர் பண்ண என்கிட்டே பணம் ஏது?” என்றார் சாமி.
அதுவரை சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த மெக்கானிக்கை அழைத்தான் மருது. “தாசு, சாமி கிட்ட சாவிய வாங்கி ராத்திரிக்குள்ள வண்டிய ரெடி பண்ணு. என் கணக்குல எழுதிக்க” என்றான்.
நாயுடுவும் தாசும் வேன் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்ததும், நந்தனாரைத் தனியே அழைத்துக்கொண்டு போய் குசுகுசுவென்று ஏதோ பேசியபின் சாமியிடம் வந்தான் மருது.
“சாமி, ஒங்க கிட்ட டிரைவிங் லைசென்ஸ் இருக்கு. அந்த நாள்ல லாரியே ஓட்டினவர் நீங்க. ஒங்க வேனை நீங்களே ஓட்டணும்னா மறுக்கவா போறீங்க?” என்றான் மெல்லிய குரலில்.
சாமிக்குப் பகீரென்றது. அவர் வேன் ஓட்டிப் பல மாதங்களாயின. “ஒண்ணும் கஷ்டமில்லை மருது. வண்டி வாடகை, டிரைவர் சம்பளம் ரெண்டும் சேர்த்து ரெண்டாயிரம்னு சொல்றியே, டீசல் போடறது யாரு?” என்றார் தயக்கத்துடன்.
“டீசல் என்னோட செலவுன்னு இருக்கட்டும். தெனமும் ராத்திரி பத்து மணிக்கு ஓசூர் பஸ் ஸ்டாண்டுல இருந்து அத்திபள்ளி வரை போகணும். பத்து கிலோமீட்டர். காய்கறி இல்லாட்டி பூக்கள் கொண்டுபோய் ஏறக்கணும். அங்கிட்டு பழமோ கிழங்கோ நம்ப ஆள் புடிச்சி அனுப்புவான். அதை இங்க ஏறக்கணும். அவ்வளவுதான். ராத்திரி ரெண்டு மணிக்குள்ள வேலை முடிஞ்சிடும். நீங்க போய்ப் படுத்துக்கலாம். கைமேல காசு. சரீங்களா?”
மருது கொஞ்சம் முரட்டுத்தனமான ஆள். ஆனால் நாணயமானவன் என்று அவருக்குத் தெரியும். ஒப்புக்கொண்டார். அவர் கண்ணில் அவன் தரப்போகும் இரண்டாயிரம் ரூபாய் தெரியவில்லை. அதன் பயனாகப் பசியாறப்போகும் முப்பது நாற்பது மனிதர்கள் தான் தெரிந்தார்கள்.
“நெடுஞ்சாலை முனியப்ப சாமியே சரணம்” என்று கும்பிடுபோட்டார் சாமி.
***
ஓசூர் பஸ் நிலையத்தில் மூட்டை மூட்டையாகச் செண்டுமல்லியும் சாமந்தியும் காய்கறிகளும் கீரைகளும் ஏற்றினார்கள். “என்னா சாமி, திரும்பியும் லோடு ஏத்த வந்துட்டீங்களா? நல்லா இருக்கீங்களா?” என்று பழைய நண்பர்களான டிரைவர்கள் விசாரித்தார்கள். சைக்கிளில் டீ விநியோகிக்கும் முஸ்தபா, “நம்பளை மறக்காதீங்க சாமி!” என்று ஸ்டிராங் டீ கொடுத்தான். “தினமும் இதே டைமுக்கு வந்துருவேன்” என்றான்.
“எல்லாம் ஏத்தியாச்சு. புறப்படலாங்க” என்று உள்ளே வந்து அமர்ந்தார் நாயுடு.
சாமி வண்டியை எடுத்தார்.
வழக்கம்போல தமிழ்நாடு எல்லை முடிந்து கர்நாடக எல்லை ஆரம்பிக்கும் அத்திபள்ளி பார்டரில் இருந்த தமிழ்நாடு செக்போஸ்டில் வண்டியை நிறுத்தினார்கள். “என்ன, காய்கறி, பூ தானே?” என்று வண்டிக்குள் எட்டிப் பார்த்த அதிகாரி, டிரைவர் சீட்டில் இருந்த சாமியைப் பார்த்து, அடையாளம் கண்டுகொண்டவராக, “வணக்கம் சாமி! கோவில் நல்லா நடக்குதுங்களா?” என்றபடி வண்டியைப் போக அனுமதித்தார்.
மார்க்கெட்டை அடைந்து வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்த தெருவோர உணவுக்கடையில் நுழைந்தார் சாமி. சரக்குகளை இறக்கிக் கொடுத்துவிட்டு நாயுடு வந்து சேர ஒருமணி நேரம் ஆயிற்று. “ரசீது கொடுக்க லேட் பண்ணிட்டாங்க” என்றார்.
உணவு முடிந்ததும் ஓசூருக்கு சரக்குகளை ஏற்றும் பணி நடந்தது. சாமியை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு நாயுடு பொறுப்பெடுத்துக்கொண்டார். அப்போது சாமியின் அலைபேசி விர்விர்ரென்று ஓசையிட்டது. மருதுதான் பேசினான். “வணக்கம் சாமி! மொத நாளாச்சே செக் போஸ்ட்டுல ஏதாச்சும் பிரச்சினை இருந்துச்சுங்களா?” என்றான். இல்லை என்றார். “நல்லதுங்க. எதுன்னாலும் ஒடனே என்னைக் கூப்பிடுங்க” என்றான். அதன் பிறகு அவன் நாயுடுவிடம் ஏதோ பேசியதும் அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் அவருக்குத் தெரிய வழியில்லை.
ஓசூரை நோக்கி வண்டியைச் செலுத்தினார் சாமி. அதே அத்திபள்ளியில் கர்நாடகா செக்போஸ்ட்டை அடைந்தபோது அவரை யாருக்கும் தெரியவில்லை. “வண்டியில் இருப்பது என்ன?” என்று மிரட்டலோடு ஒரு அதிகாரி, கையில் நீண்ட இரும்புக் கம்பியை வைத்து மூட்டைகளுக்குள் செலுத்தினார். அதற்குள் நாயுடு வண்டியிலிருந்து இறங்கினார். அதிகாரியிடம் ஏதோ பேசினார். வெளிச்சம் குறைவான பகுதிக்கு இருவரும் போனார்கள். சிறிது நேரத்தில் நாயுடு திரும்பிவந்தார்.
சாமி வண்டியைக் கிளப்பினார். “அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தீர்களா? நாம் ஏதாவது தப்பான பொருளை ஏற்றிவருகிறோமா?” என்று மிகுந்த கவலையோடு கேட்டார். அவர் வாழ்நாளில் செக்போஸ்ட் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததில்லை.
நாயுடு பலமாகச் சிரித்தார். “இப்பல்லாம் தப்பு செய்யாம இருந்தாத்தான் லஞ்சம் கேக்கறாங்க” என்றார்.
ஓசூர் வந்தது. சரக்குகளை இறக்கவேண்டிய இடம் மருதுபாண்டி வீடு என்றார் நாயுடு. சாமிக்கு வியப்பாக இருந்தது. ‘நமக்குத் தெரியாமல் நாயுடு வேறு ஏதாவது விவகாரமான சரக்கை ஏற்றிவிட்டாரா?’
நாளைக்கு விசாரித்துக்கொள்ளலாம் என்று வீட்டிற்குத் திரும்பினார் சாமி. இரண்டாயிரம் ரூபாய் நாயுடுமூலம் வந்து சேர்ந்தது.
***
காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட்டார் சாமி. குளித்து கோவிலில் பூஜையை முடித்தார். நாயுடுவும் நந்தனாரும் அதற்குள் பம்புசெட்டில் குளித்துவிட்டு வந்தார்கள்.
நந்தனார் மூவருக்கும் டீ கொடுத்தார்.
“இன்று என்னென்ன செய்யவேண்டும் நாயுடு?” என்றார் சாமி. புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எதிர்பாராமல் சாப்பாட்டு நேரத்துக்கு வந்துசேருபவர்கள் என்று அனைவருக்கும் காலை உணவுக்கு இட்லி சாம்பாரும், மதிய உணவுக்கு பிரியாணியும், இரவு உணவுக்குச் சப்பாத்தியும் தயிர் சாதமும் தரவேண்டும் என்று முடிவுசெய்து, நாயுடுவுக்குப் பழக்கமான ஒரு சமையல்காரரிடம் பேசி, சிக்கனமான வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
மருதுபாண்டி கொடுத்த இரண்டாயிரத்தில் கொஞ்சம் பணம் சேமிப்பாக சாமியிடம் மிஞ்சி நின்றது.
அன்று இரவும் சாமியின் வண்டி ஓசூரிலிலிருந்து அத்திப்பள்ளி- பின்- அத்திப்பள்ளியில் இருந்து ஓசூர் என்று ஓடியது. தொழிலாளர்களுக்கு வயிறார சோறு கிடைத்தது.
இப்படியே பதினைந்து நாட்கள் கடந்தன. தினமும் இரண்டாயிரம் வரவு, செலவு போக இருநூறு அல்லது முன்னூறு மிச்சம் என்பதாக எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது.
****
பதினாறாவது நாள் விடிந்தும் விடியாத பொழுதில் போலீஸ் ஜீப் முனியப்பசாமி கோவில் வாசலில் நின்றது. போலீசாருடன் சாமிக்கு நன்கு தெரிந்த செக்போஸ்ட் அதிகாரியும் இருந்தார்.
நாயுடுவும் நந்தனாரும் திகிலோடு சாமியின் அருகில் நின்றார்கள்.
“இவர்தான் சாமி என்பவர்” என்று சப்-இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் காட்டினார் செக்போஸ்ட் அதிகாரி.
சாமிக்கு ஒன்றும் புரியவில்லை. மருதுபாண்டி தன் வண்டியின் மூலம் ஏதோ தவறான காரியம் செய்கிறான் என்று அவர் மனதில் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது. அதனால்தான் போலீஸ் வந்திருக்கிறதோ?
அதற்குள் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் ஆண், பெண், குழந்தைகள் உள்பட அங்கு வந்து சூழ்ந்துகொண்டனர். சாமியைக் கைதுசெய்ய போலீஸ் வந்ததாக அவர்கள் புரிந்துகொண்டு இந்தியில் கசமுசாவென்று பேசத்தொடங்கினார்கள். சாமியும் நாயுடுவும் நந்தனாரும் மிகவும் நல்லவர்கள் என்று அவர்கள் பேச்சில் இருந்து போலீஸ் புரிந்துகொண்டது.
“சாமி ! உங்களை விசாரிப்பதற்காக இப்போது மருதுபாண்டி வீட்டுக்கு அழைத்துப்போகிறோம்” என்றார் சப்-இன்ஸ்பெக்டர். சாமி ஜீப்பில் ஏறிக்கொண்டார்.
மருதுபாண்டி எத்தனை வருஷமாக சாராயத் தொழிலில் இருக்கிறான்! அவனுக்குத் தெரியாத போலீசா? “வாங்க சார், வாங்க சார்” என்று வரவேற்றான்.
“இந்த சாமியின் வண்டி மூலம் பெங்களூரில் இருந்து தினமும் மதுக் கடத்தல் நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மருது, இதில் வேறு யாரோதான் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும். ஏனென்றால் இந்த ஆசாமி நல்லவராகத் தெரிகிறார். தினமும் ஏழைகளுக்கு சாப்பாடு போடுகிறார் என்கிறார்களே!” என்று சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“ஆமாம் சார்! இவர் நெஜமாவே சாமி மாதிரிங்க. வெளிமாநிலத் தொழிலாளிகளுக்குத் தன் சொந்தப் பணத்தில் சோறு போடுகிறார். முனியப்ப சாமி கோவிலையும் இவர்தான் பார்த்துக்கொள்கிறார். ரொம்ப நல்லமாதிரி” என்று சான்றிதழ் வாசித்தான் மருதுபாண்டி.
“அப்படியானால் உங்கள் வண்டியை மட்டும் வாடகைக்கு விடுகிறீர்கள் என்று அர்த்தமா? வண்டியை ஓட்டும் டிரைவர் யார்?” என்று சாமியிடம் கேட்டார்.
சாமி பதில் பேச வாயெடுப்பதற்குள், “இந்த நாயுடுதான், சாமியோட வண்டிக்கு டிரைவர்” என்றான் மருது. யாரும் பார்க்காதவண்ணம் செக்போஸ்ட் அதிகாரியைப் பார்த்துக் கண்ணடித்தான். அவர் முந்திக்கொண்டு, “ஆமாங்க, இவர்தான் அன்று ஓட்டினார். ஆனால் சாமியும் வண்டியில் இருந்தார்” என்றார்.
“அப்ப நாயுடுவைத்தான் கைது செய்யவேண்டும்” என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.
“ஐயய்யோ, வேண்டாம் சார்! பாவம், குடும்பம், புள்ள குட்டி இல்லாதவர் சார் இந்த நாயுடு. ஏதோ சபலத்துல செய்திருப்பார். இனிமே அப்படிச் செய்யாதபடி நான் பாத்துக்கறேன். விட்டுடுங்க சார்!” என்று கெஞ்சுவதுபோல மருதுபாண்டி நடித்தான்.
“அப்படீன்னா உனக்காகத்தான் இந்த நாயுடு கடத்தல் பண்ணினார்னு ஒத்துக்கறியா?” என்று பட்டென்று கேட்டார் சப்-இன்ஸ்பெக்டர். “எவ்வளவு நாளா இது நடக்குது? உண்மையைச் சொல்” என்று அதட்டினார்.
அசட்டுச் சிரிப்பு சிரித்தான் மருதுபாண்டி. “நமக்குள்ள பிரச்சினை எதுக்கு சார்? நான் நாளைக்கு ஸ்டேஷன்ல வந்து உங்களைப் பாக்கறேன். இந்தாள விட்டுடுங்க. என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க மாட்டீங்களா?“ என்றான்.
அதிலிருந்த இரண்டு விஷயங்களை இன்ஸ்பெக்டர் புரிந்துகொண்டார். ஒன்று, நாளைக்கு அவன்மூலம் தனக்கு வருமானம் வரப்போகிறது. இரண்டு, அதை மறுத்தால் அவன் டிஎஸ்பி அல்லது எஸ்பி மூலம் தான் யார் என்பதைக் காட்டிவிடுவான்.
“சாமி! இனிமேல் இந்த வண்டியை மதுக் கடத்தல் காரியங்களுக்குப் பயன்படுத்தினா கடுமையா நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும். நாயுடு, ஒனக்கும்தான். புரிஞ்சுதா?” என்று மிரட்டிவிட்டுக் கிளம்பியது போலீஸ் ஜீப்.
பெருத்த கவலையிலும் அவமானத்திலும் இருந்தார் சாமி. நாயுடுவைப் பார்த்து அவருக்குக் கோபமாகவும் இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. தொழிலாளர்களுக்குச் சோறு போடுவதற்குப் பணம் வேண்டுமென்பதற்காக நாயுடுதான் இந்தக் கடத்தல் ஏற்பாட்டைச் செய்துகொடுத்திருக்கிறார் என்று தெளிவாகப் புரிந்தது. நோக்கம் நல்லதுதான், ஆனால் அதற்கான வழிதான் பிழையாகிவிட்டது.
அதுவரை செலவுபோக, கையிலிருந்த பணத்தை எண்ணிப்பார்த்தார் சாமி. நாலாயிரத்த்துச் சொச்சம் இருந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளைக்கு இதை வைத்து அவர்களுக்குச் சோறு போட முடியும். அதற்குப் பின்?
மருதுபாண்டி ஓடிவந்து, “ஐயா, ஒங்க நல்ல காரியத்துக்கு உதவணும்னுதான் இப்படிச் செய்தேன். இந்த மாதிரி காரியங்களுக்கு என்னிடம் எத்தனையோ டிரைவர்கள் இருக்காங்க. ஆனால் அவங்களால ஒங்க மாதிரி மத்த ஏழைகளுக்குச் சோறு போட மனசு வராது. அதனால்தான் நாயுடுக்கிட்ட சொல்லி இந்த ஏற்பட்ட செஞ்சேன். என்னை மன்னிச்சிடுங்கய்யா. இனிமேல் வேற ஆளைப் பாத்துக்கறேன்” என்று அவர் காலில் விழுந்தான்.
எதோ முடிவுக்கு வந்தவர் போல் சாமி, நாயுடுவையும் நந்தனாரையும் அழைத்தார்.
“இந்தக் கொரோனா இன்னும் எத்தனை நாளைக்கு இருக்குமோ, ஊரடங்கு எப்ப நீக்குவாங்களோ தெரியாது. அது வரைக்கும் இந்த ஏழைகளுக்குச் சோறு போட்டுத்தான் ஆகணும். இவங்கெல்லாம் நம்ப ஊரை நம்பி வந்தவங்க. இவங்களைப் போலத்தானே நம்ப ஊர்க்காரங்களும் வேற வேற ஊர்ல திண்டாடிக்கிட்டு இருப்பாங்க? அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துருக்கேன். மருதுபாண்டி, உன்னைத்தான் நம்பியிருக்கேன்!”
“சொல்லுங்க சாமி, செய்யறேன்!”
“இந்த வேன் இருக்கிறதால் தானே தப்பு நடக்குது? இதை வித்துட்டா? மருதுபாண்டி, நீயே ஒரு வெல போட்டு இதை எடுத்துக்கோ. எனக்கு அந்தப் பணத்தை மொத்தமாக கொடுத்துடாதே. இப்ப மாதிரியே தெனம் ரெண்டாயிரமாக் குடு. அத வச்சி இவங்களுக்கு நான் சோறு போடறேன். எப்படியும் அதுக்குள்ளே நல்ல காலம் பொறக்காதா? என்ன சொல்றே?” என்றார் சாமி.
“மிச்சப்பணம் ஏதாச்சும் அப்ப இருந்தா எனக்குக் கொடு. அதை வச்சு நான் பக்கத்துலயே ஒரு சின்னக் கடை வச்சிக்கிறேன்.”
நந்தனார் ஓடிவந்து சாமியைக் கட்டிக்கொண்டார். “ஒங்க நல்ல மனசுக்கு சீக்கிரமே நல்லது நடக்கும்” என்று நாயுடுவும் அருகில் வந்தார்.
போலீஸ் ஜீப்புக்குப் பின்னாடியே கூட்டமாக வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் சாமிக்கு போலீசால் தொந்தரவு ஏற்படவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்கள்.
“வழக்கம்போல் நாளை காலையில் இட்லி சாம்பார் உண்டு” என்று அவர்களை அனுப்பிவைத்தான் மருதுபாண்டி.
அன்று இரவுபோல நிம்மதியாக அதுவரை உறங்கியதில்லை சாமி என்கிற முனிசாமி. எல்லாம் நெடுஞ்சாலை முனியப்பசாமியின் அருள்!
****

சிறப்பான நடை