ஒரு கோட்டுச் சித்திரம்/நாகேந்திர பாரதி


ஒரு நிமிடம் கோபத்தோடு அந்த டீக்கடைக்காரர் பக்கம் திரும்பிய சந்திரன் ‘ என்ன சார் வடைய இந்த மாதிரி பேப்பரில் வச்சு கொடுத்திருக்கீங்க. .ஓரத்துல எல்லாம் பிளாஸ்டிக் துணுக்குகள் இருக்கு பாருங்க. வடையோடு சேர்ந்து வாயிலே போயிருக்கும் . ஏதோ ஒரு பிளாஸ்டிக் ரோலில் பைண்ட் பண்ண பேப்பர்ல இருந்து கிழிச்ச பேப்பர் மாதிரி தெரியுது ‘ என்றவன் அதிலிருந்த படத்தை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்தே போய் விட்டான் .

சந்திரனும் ஒரு ஓவியன் தான் . கத்துக்குட்டி ஓவியன். அழகியசிங்கரின் கலை புதிது வாட்சப் குழுவில் ஒரு ‘ கத்தரிக்காயை’ வரைந்து போட எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று அவனுக்குத் தெரியும். எனவே இந்த ஓவியத்தின் அருமை அவனுக்குத் தெரியும். இது ஒரே கோட்டில் வரையப்பட்ட சித்திரம் என்று. ஒரு சிறந்த சித்திரம்.

அந்த கோடு ஆரம்பிக்கும் இடம் முடியும் இடம் எதுவென்று தெரியவில்லை .ஆனால் தொடர்ந்து கோடுகள் மூலம் இணைக்கப்பட்ட எத்தனை விஷயங்கள் . ஹாங்கரில் தொங்கும் ஒரு பெரிய பை .பக்கத்தில் ஒரு சிறிய சேர் . ஒரு டெஸ்க் மேலே சுவற்றோடு ஒரு குட்டி ஓபன் அலமாரி . சில புத்தகங்கள் சில பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு. கீழே தரையில் அந்த டைல்ஸ் .எல்லாமே அந்த ஒரே கோட்டிலே கொண்டு வந்த ஓவியம் . அதில் ஒரு த்ரீ டி எபக்டும் தெரிந்தது .

. அந்த ஓவியனின் திறமையை ரசித்தபடி ஓரத்தில் எழுதி இருக்கும் பெயரை பார்த்தான் ஓம்ராமு 5/10/ 13 என்று இருந்தது . ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட இந்த ஓவியம் இப்பொழுது அவன் கையில் இதை வரைந்தவர் யார் என்று அறிகின்ற ஆவல் அவனுக்கு.

அந்த டீக்கடைக்காரரிடம் கோபத்தைத் தணித்துக் கொண்டு கேட்டான். ‘இந்த பழைய பேப்பர்லாம் நீங்க யார்கிட்ட இருந்து வாங்குறீங்க’ ‘இது நம்ம பக்கத்துத் தெரு முத்து அண்ணாச்சி பழைய பேப்பர் கடைல இருந்து தான் . ஏன் கேக்கறீங்க ‘ என்றவரிடம் ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டு முத்து அண்ணாச்சி கடைக்குச் சென்றான்.

அவரிடம் இந்தப் பேப்பரைக் காண்பித்து ‘இது கொடுத்தது யார் என்று தெரியுமா’ என்று கேட்டான். அவன் கேள்வியின் அவலட்சணம் அவனுக்கே புரிந்தது. அவர் பதிலும் அதே பாணியில் வந்தது. ‘ எத்தனையோ பேர் போடுறாங்க சார். யாருன்னு கண்டேன். கொஞ்சம் காமிங்க. . ஓரத்துல அந்த உடைஞ்சு போன் பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கு. இந்த மாதிரி இந்த பிளாஸ்டிக்கிலே பைண்ட் பண்ண பேப்பர் ரோல் வச்சிருக்கிறது நம்ம அடுத்த தெருவில் இருக்கிற ராமானுஜம் அய்யாதான். ‘ ‘அப்படியா’ என்றவன் அவசரமாக வழி கேட்டு அவர் வீட்டுக்குச் சென்றான் .

காலிங் பெல் அடித்தான். திறந்தது ஒரு பெண்மணி. ‘யார் சார் வேணும் ‘ என்றவளிடம் , ,’இந்த பேப்பர்’ என்று காண்பித்தவுடன் அவள் கண்களில் அழுகை பொங்கி , ‘ இது எப்படி உங்களுக்குக் கிடைத்தது ‘ என்றபடி ‘இங்கே வாங்களேன் ‘ என்று உள்ளே பார்த்து கூப்பிட்டாள் . உள்ளிருந்து வந்த ராமானுஜம் , அந்தத் துண்டுப் பேப்பரோடு இவனைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றவர் ‘இது எப்படி சார் உங்களுக்குக் கிடைத்தது ‘ என்றவரிடம் அவன் விளக்கியதும் , ‘இதைத்தான் நாங்க தேடிக்கிட்டே இருக்கோம். பழைய புத்தகங்கள் போனவாரம் போடுறப்போ தெரியாம இதுவும் சேர்ந்து போய்விட்டது போல் இருக்கிறது. எவ்வளவு பத்திரமா பாதுகாத்து வச்சிருந்தோம் ‘ என்று ஆசையோடு அதை வாங்கிக் கொண்டு அதைப் பார்த்து அழுதபடி சொன்னார்.

‘ எங்க பையன் ஓம்ராமு வரஞ்சது சார் . பத்து வயசிலேயே ஓவியம் வரையறதிலே கெட்டிக்காரன். பார்த்தீங்களா , ஒரே கோட்டிலே என்னமா வரைஞ்சிருக்கான். பத்து வருஷம் ஆச்சு அவன் காணாமல் போயி .
பத்து வருஷத்துக்கு முன்னால் மதுரை சித்திரை திருவிழாவுக்குப் போயிருந்தோம். கையிலே இருந்து எப்படியோ நழுவிட்டான். இன்னும் தேடிகிட்டு தான் சார் இருக்கோம். போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் சொல்லி வச்சு, பேப்பர்லே குடுத்து . ம்ஹூம். இப்ப இருபது வயசு பையனா இருப்பான். எங்கே இருக்கானோ என்ன பண்றானோ ‘ என்று அழும் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று சந்திரனுக்குத் தெரியவில்லை.

அதே நேரத்தில் பெங்களூரின் கமர்சியல் ஸ்ட்ரீட் தெருவின் ஓரத்திலே அலங்க மலங்க விழித்தபடி ஒரு இருபது வயது இளைஞன் ,தரையில் வரைந்திருந்த வெங்கடாசலபதி ஓவியம் ,அதுவும் ஒரே கோட்டில் வரையப்பட்ட அதன் மேல் விழுந்த காசுகளை பொறுக்கிக் கொண்டு இருந்தான். ‘ பிரமாதமான ஆர்ட்டிஸ்ட்பா ‘ என்று அவர்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்தமும் அவனுக்குப் புரியவில்லை .

பத்து வயதிலே ஒரு கிரிமினல் கூட்டத்தால் கடத்திச் செல்லப்பட்டு கால் முறிக்கப்பட்டு , பரிதாபமான பிச்சைக்காரனாக்கப்பட்டு , சில வருடங்களில் இவனால் வருமானம் அதிகம் இல்லை என்று ஒதுக்கப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டு , அவன் தான் போன போக்கிலே ரயில் போன போக்கிலே சென்ற ஊர்கள் எத்தனையோ. வயது ஆனது அவனுக்கு தெரியாது அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒரே கோட்டில் வரையக்கூடிய இந்த சித்திரக்கலை தான். அதுதான் சோறு போட்டு கொண்டு இருக்கிறது. இப்போது இங்கே பெங்களூர் கமர்சியல் ஸ்ட்ரீட்டில். அவனுக்கு. ஓம் ராம்.

——————————————————————————