உஷா பாரதி/தீண்டுவீராயின் , திருநீலகண்டம்

சுகுணா குடும்பத்தலைவி . அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் களையான முகமும். மாநிறமும் கொண்டவள் . அவள் கணவன் சேகரோ சற்றுக் கருப்பு. ஆனால் அதுவே அவனைக் கவர்ச்சியாகக் காட்டியது . நல்ல உயரம். திரண்ட தோள்களும் விரிந்த மார்பும் அவனை ஓர் ஆணழகன் என்று பறை சாற்றியது .

இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். சுகுணா தன கணவன் மேல் உயிரையே வைத்திருந்தாள் . சேகரும் அப்படித் தான். மனதில் உள்ளதை அப்படியே வெளியிலும் பேசுவான். மனைவியிடம் எதையும் மறைத்துப் பழக்கம் இல்லை.

கோடை விடுமுறை.சுகுணா இரண்டு மாதங்களுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட்டாள் . தனிமை, மனைவியைப் பிரிந்த ஏக்கம் எல்லாம் ஒன்று சேர அலுவலகமே கதி என்று கிடந்து முழு நேரத்தைச் செலவிட்டான் .

ஒரு நாள்’சேகர், இவங்க தான் உங்க செக்ஷனுக்கு வந்திருக்கும் புது ஆபீசர் லதா ‘ என்ற அக்கௌன்டன்ட்டின் குரல் கேட்டு நிமிர்ந்தான். அயர்ந்து போனான். ‘வணக்கம்.’ குரலுக்குச் சொந்தக்காரியை நன்றாகப் பார்த்தான். சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன அவன் தங்கை வசந்தியின் சாயல் .

அவளையே பார்த்துக் கொண்டு இருந்த அவன் திடுக்கிட்டுத் தன நிலைக்குத் திரும்பி அவளுக்குக் கொடுக்க வேண்டிய வேலைகளைக் கொடுத்து விட்டு தன் வேலையில் மூழ்கினான். வந்த ஒரு வாரத்திலேயே வேலையைப் புரிந்து திறமையுடன் செய்த லதாவின் புத்திசாலித்தனம் சேகரை மிகவும் கவர்ந்தது. இருவரிடையே நட்பும் வளர்ந்தது.

அலுவலகம் விட்டதும் அவளோடு சேர்ந்து பேசிக் கொண்டு வந்து பஸ் ஸ்டாண்ட் டில் அவளைப் பஸ் ஏற்றி விட்டு பக்கத்தில் உள்ள அவன் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.. அன்றும் அதே போல்தான். திடீர் என்று மழை வலுத்தது.

‘ லதா , இந்த மழை இப்போது நிற்பது போல் தெரியவில்லை , என் வீடு பக்கத்தில் தான் இருக்கிறது . மழை விடும் வரை இருந்து விட்டு பிறகு செல்லலாமே’. என்று இருவரும் சேகரின் வீட்டுக்கு வந்தார்கள். ஒரே குடையில் வந்ததால் இருவரும் ஓரளவு நனைந்து போய் விட்டார்கள். அங்கே வீட்டுக் கதவு திறந்து இருந்தது . சுகுணா குழந்தைகளுடன் திரும்பி இருந்தாள் . அவனுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று போன் பண்ணிச் சொல்லவில்லை.

இருவரும் நனைந்த உடையில் வருவதைப் பார்த்த படி நின்றாள் சுகுணா. உள்ளே சென்று இருவருக்கும் டவல்கள் எடுத்து வந்து கொடுத்தாள் . ‘துவட்டிக் கொள்ளும்மா’ என்று லதாவிடம் சொன்னவள் இவனிடம் ஒன்றும் சொல்லவில்லை . காபி கொடுத்து சிறிது நேரத்தில் மழை விட்டது. ‘போய் வர்றேங்க ‘ என்றவளிடம் ‘ இரு லதா , நான் வந்து பஸ் ஸ்டாண்ட் டிலே விட்டுறேன்’ என்றவனைத் தடுத்தாள் . ‘இந்தாம்மா குடை , மழை வந்தா புடிச்சுக்கோ , பஸ் ஸ்டாண்ட் பக்கம்தான் ,போயிட்டு வா ‘ என்று இவனைப் பார்க்காமலே சொன்னாள் .

அவள் போகும் போது ‘ எத்தனை நாளா இது நடக்குது ‘ என்று அவள் அவனிடம் கேட்டது லதாவின் காதில் விழுந்தது. ஒரு அவமானம் அவள் உடலைக் குறுக்க வேக வேகமாகச் சென்றாள்.

திரும்பிய இவன் ‘ என்ன கிண்டலா , அவ வசந்தி மாதிரி இல்லே ‘ என்றான். ‘ இல்லே ‘ என்ற பதில் வந்தது . ‘ சரி சாப்பிடுங்க ‘ என்று சாப்பிட்டு இரவில் குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு கட்டிலில் இருந்தவளிடம் , இரண்டு மாத ஏக்கத்தோடு நெருங்கினான்.படுக்கையில் அமர்ந்திருந்த அவள் கரங்களைப் பற்றினான். ‘ தொடாதீர்கள் ‘ அவள் குரலில் இருந்த உறுதி அவனைப் பின் வாங்க வைத்தது. மெதுவாகக் கட்டிலை விட்டு எழுந்தாள். அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
.
‘ நாம் ரெண்டு பெரும் காதலிச்சுதானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒருத்தரை ஒருத்தர் விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்போ, எனக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண உங்களாலே எப்படி முடிந்தது. என்னிக்கி நீங்க இப்படி வேற ஒரு பொண்ணோட இருக்கீங்கன்னு தெரிஞ்சு போச்சோ இனிமே என்னைத் தொடாதீங்க . ஆனா, அதுக்காக உங்களை விட்டுட்டுப் போயிடுவேன்னு நினைக்காதீங்க. நம்ம குழந்தைகளுக்காக நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து இருக்கிறது முக்கியம் . அது மட்டும் இல்லே. நான் இன்னமும் உங்களைக் காதலிச்சுக் கிட்டுதான் இருக்கேன். ‘ என்று விம்மலுடன் கூறியபடி
அறையை விட்டு வெளியே சென்றவளைப் பார்த்தபடி இருந்தான்.

‘சந்தேகக் கோடு , அது சந்தோஷக் கோடு’ என்ற பாட்டு சன்னல் வழி உள்ளே நுழைந்தது .
மறுநாள் ஆபீசுக்கு லதா வரவில்லை. அவளது ராஜினாமா கடிதம் மாலை கூரியர் தபாலில் வந்து சேர்ந்தது .

————————-