பி. ஆர்.கிரிஜா/அழகு

சந்தியாவிற்கு எப்போதுமே தன் அழகைப் பற்றி பெருமை. எப்போது வெளியே
கிளம்பினாலும் தன்னை ஒரு முறைக்கு இரு முறை பார்ப்பவர்களை பார்த்து மனதிற்குள் பரவசப்படுவாள். அன்றும் அப்படித்தான், தன் தோழி தீபா வீடு வரை போய் வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லி விட்டு வீட்டு வாசல் படி இறங்கினாள். அப்போது தெருவில் ஒரே கூட்டம். ஆவல் மிகுதியால் என்ன என்று பார்க்க அவளும் கூட்டத்திற்குள் நுழைந்தாள். ஒரு நடுத்தர வயது மனிதர் மைக்கில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல் அமைதியாக அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் பார்ப்பதற்கு மிகவும் சுமாராக இருந்தார். சந்தியாவிற்கு பேரதிர்ச்சி. ஏதேச்சையாக அவள் அருகில் இருவர் பேசியதை அவள் கேட்க நேர்ந்தது. “உனக்குத் தெரியுமா ? இவர் பெயர் ஆதி சிவன். அந்த ஈஸ்வரனே நேரில் வந்து சொல்வது போல் எளிமையாக சாமானிய மக்களுக்கு புரியும்படி அருமையாகப் பேசுவார். அவர் பேச்சைக் கேட்க எல்லா ஊர்களிலும் கூட்டம் அலை மோதும். இன்று, நாம் செய்த பாக்கியம், நம் ஊரில் நம் தெருவிற்கே வந்து பேசுகிறார். நாம் இருந்து கேட்டு ரசிப்போம் ” என்றனர்.
சந்தியா தன் நிலைக்கு வருவதற்கு வெகு நேரம் ஆயிற்று. தன் கர்வத்திற்கு ஒரு சாட்டையடி என்று தெரிந்தவுடன் வெட்கித் தலை குனிந்தாள். அழகு ஒருவரின் சொல், செயல், நடத்தை இவற்றில் தான் உள்ளது என்ற தெளிவு பிறந்தது.
அவர்களைப் பார்த்து ஸ்னேகத்தோடு சிரித்து கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவர் பேசுவதை ஆர்வமுடன் கேட்க ஆரம்பித்தாள் சந்தியா.


10/10/2023