சுப்ர பாலனின் “கடிக்கத் தெரியாத எறும்புகள்!”/ஆர்க்கே

மூத்த பத்திரிகையாளரும் சிறுகதை ஆசிரியருமான சுப்ர. பாலனின் பெரும்பாலான கதைகள் பிரபல வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் பிரசுரமும் கவனமும் அங்கீகாரமும் ஒரு சேரக் கண்ட/கொண்ட பெருமை பெற்றவை.

திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள கனவுகளுக்கு காத்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பில் வந்துள்ள நான்காவது சிறுகதைதான்
இந்த “கடிக்கத் தெரியாத எறும்புகள்” சிறுகதை. சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னால் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2013 ல் வந்துள்ள சிறுகதை.

ஓரறிவு கொண்ட செடி,மூன்றறிவு கொண்ட எறும்பு இவை யாவும் ஆறறிவு மனிதனின் வாழ்க்கையில் எப்படி செயல்படுகிறது என்பதை உள்ளாறு ஓட்டமாய் கொண்டு அதே நேரம் வெளிப்பார்வைக்கு நடப்பியல் வாழ்க்கையின் அன்றாடத்தை படமிட்டுக் காட்டுவதாகவும் புனைவு பெறுகிறது க தெ எ.

கதை இதுதான்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் வேலூரிலிருந்து கொண்டு வந்து நட்ட நந்தியாவட்டைக் கன்று பூத்து குலுங்குகிறது. அதற்கு நீருற்றி சீராட்டும் கதை நாயகனுக்கு அந்த பூக்களைப் பறித்து மாலை கட்டி வைத்து விட்டால் சிவனுக்கு பிடித்தமான மலரான இந்த நந்தியாவட்டை மாலைகளை வீட்டின் ஸ்வாமி படங்களுக்கு அணிவிப்பது மகன் வேலை. அதுவும் அவன் மகன் அலுவலகம் கிளம்புமுன் இதை நித்திய மனக் கடமையாக செய்தாக வேண்டும். படிக்க எழுத எல்லாம் பத்து மணிக்கு மேல்தான் இவனுக்கு.

அன்று மழை நாளில் பூப்பறிக்கிறான் நாயகன். தன்னுடைய இயல்புக்கு மாறாக
தொட்டாலே பூக்களை விட்டுக்கொடுத்து விடுகிறது பூச்செடி. இன்றைக்குப் பார்த்து பெரிய பெரிய கருப்பு எறும்புகள் ஊர்கின்றன . பூவோடு கைகளில் ஏறிய எறும்புகளை உதறுகிறான் .

பூக்களை இவன் பறிப்பதை வேடிக்கை பார்க்கும் பக்கத்து வீட்டு குழந்தை “தாத்தா அந்த எறும்பு கடிக்கவே
செய்யாது ” என்று தைரியம் சொல்கிறது.
மூணு வயசு குழந்தை அது. அதன் அறிவுக்கூர்மையை வியந்து கொண்டிருக்கையில் குழந்தை அடுத்த கேள்வியை வீசுகிறது
“ஏன் தாத்தா சின்ன எறும்பெல்லாம் கடிக்குதே. இதுக்கு ஏன் கடிக்கவே தெரியல” பதிலில்லை இவனிடம். தோற்றத்திற்கும் குணாதிசயத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்ன?

“உங்க அப்பா பெரிசா மீசை வச்சிண்டிருக்காரே. உன்னையைத் திட்டுவாரா? அடிப்பாரா?” கேட்டே விடுகிறான்.

“எங்க அப்பா அடிக்கவே மாட்டாரு. கொஞ்சுவாரு. சித்திதான் அடிக்கும் திட்டும். :

குழந்தையிடம் போய் “கடிக்கிற எறும்பு உன் சித்தி. கடிக்கத் தெரியாத எறும்பு உன் அப்பா ” எனத் தோன்றினாலும் சொல்ல முடியுமோ?
“என்ன தாத்தா யோசிக்கறீங்க பதில் தெரியலியா “குழந்தை கேட்கிறது.

குழந்தையானாலும் சரணாகதி ஆவது உத்தமம் என்று
“பாட்டி கிட்ட கேளேன். எனக்கு தெரியல்ல!”

“ஹையா தாத்தாவுக்கே தெரியலை” என
கைகொட்டி சிரிக்கிறது அது.

“அப்படின்னா உனக்கு தெரியுமா சொல்லேன் “

“பாட்டி சொன்னாங்களே! நீங்க சின்னவங்களா இருந்தப்போ நெறைய திட்டுவீங்களாம். இப்போ வயசாகிப்போச்சு. அதுதான் சாதுவாயிட்டிங்களாம். அது மாதிரி கறுப்பு எறும்புக்கு வயசாயிருக்கும் இல்ல தாத்தா!”

புராண மற்றும் கற்பனை கதைகளை நம்புகிற தலைமுறை இல்லை இது. ஒவ்வொன்றிற்கும் ஏன் எப்படி என காரணம் கேட்டு துளைத்துவிடும் நவயுக தலைமுறை.

“சின்னுக்குட்டி! இது சாமிக்கு போடற பூச்செடி. அதனாலே எறும்பு கடிக்காது. கடிச்சா சாமிக்குப் பிடிக்காதாம். அதனாலே!” ஏதோ ஒரு காரணச் சமாதானம் சொல்கிறான்.

“ஓகோ!” ஏதோ புரிந்தமாதிரி கவனம் சிதறி ஓடுகிறது குழந்தை.
” இப்போதைக்குத் தப்பித்தோம் ” பெருமூச்சு விட்டபடி பூக்களை கட்டத் துவங்குகிறான் அவன். கதை இங்கே முடிகிறது.

சிறுகதையின் இலக்கணம் கால அவகாசங்களை உறுத்தாமல் கச்சிதமாய் கதைக்குள் பொருத்துதல். அந்தக் கட்டமைப்பு இக்கதையில் சிறப்பாக வந்திருக்கிறது எனலாம்.

கதையில் வருகிற நந்தியாவட்டை பூச்செடி வீட்டிற்கு வந்து ஆகின்றன ஆறு ஆண்டுகள். நாயகனின் அம்மா காலமாகி மகன் மருமகள் பேரன் பேத்திகள் காலம் பூத்து விட்டது வீடெனும் நந்தியாவட்டைச் செடியில். மழை பொழிவிற்குப் பின் பறிக்க இலகுவாய் பூக்களைத் தருகிற செடிபோல இவன் ரிடையர்மெண்ட் வாழ்க்கையும் தினத்தை பரபரப்பின்றி இலகுவாக்கிவிடுகிறது.

கதையின் சிறப்பம்சம் காட்சிப்படுத்துவதை அப்படியே நம் மனதில் தாக்கமாய் ஏற்படுத்துவது. அதுவும் அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.

கதை மாந்தர்கள் அம்மா, மனைவி, பேரன், பேத்தி ,நண்பர்கள் என இயங்கினாலும் யாருக்கும் பெயர்கள் கிடையாது. பெயர் தெரியாத மலர்களைப்போலத்தான் அவர்கள். பக்கத்து வீட்டு குழந்தைக்கு கூட சின்னுக்குட்டி எனும் செல்லப்பெயர்தான்.

பெரிய மனோதத்துவ உள்ளீட்டை பூச்செடியின் மூலம் உணர்த்தி விடுகிறது இந்த க தெ எ.

பக்கத்து வீட்டு (நல்ல) அப்பா தான் செய்து கொண்ட இரண்டாம் தாரமே சித்தி என்பதை போகிறபோக்கில் சொல்லிப்போகிறது கதை.

கதையை வாசித்து முடித்த பின் சற்று விலகி நின்று யோசித்துப் பார்த்தால்
நாம்தான் வாழ்வின் கட்டங்களில் பூச்செடியாகவும் சின்ன எறும்பாகவும் கடிக்கத் தெரியாத கட்டெறும்பாகவும் இருக்கிறோம் என்பதும் உண்மைதானே?
வாய்ப்பிற்கு நன்றி.


.!

One Comment on “சுப்ர பாலனின் “கடிக்கத் தெரியாத எறும்புகள்!”/ஆர்க்கே”

Comments are closed.