காலி வரவேற்பறை/போர்ஹெஸ்




தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———


வேலைப்பாடுகளுடன் கூடிய மேஜைவிரிப்பின்
தயக்கத்தின் நடுவே
செம்பழுப்பு அறைக்கலன்கள்
தங்கள் முடிவுறாத் தேநீர் விருந்தைத் தொடர்கின்றன.
பாதரச ஆவி புகைப்படங்கள்
கண்ணாடியில் நின்றுவிட்ட காலத்தைக் காட்டுகின்றன
ஆகையால் அவை இருப்பதைவிட
நமக்கு அணுக்கமாகத் தோன்றுகின்றன
அவற்றை நாம் இன்னும் கவனமாகப் பார்க்கும்போது
அவை மங்கலான ஆண்டு நிறைவு நாட்களின்
உபயோகமற்ற தேதிகளைப் போல
தொலைந்து போயிருக்கின்றன.
நீண்ட காலமாகவே
அவற்றின் மனக்கலக்கமுற்ற குரல்கள் நம்மைக்
கூப்பிட்டுக்கொண்டிருந்தன
இப்போது நமது குழந்தைமையின் முதல்க் காலைகளில்
அவை அபூர்வமாகவே அங்கிருக்கின்றன.
இந்த நாளின் ஒளி
ஜன்னல் சட்டகங்களை
தெருவின் இரைச்சலுக்கும் அதனால் ஏற்படும் தலைசுற்றலுக்கும்
மேலே உயர்த்துகிறது
நமது மூதாதையரின் பலகீனமான குரலை
நெறித்து நிராகரிக்கிறது.
—-