கனவு இல்லம்/பி. ஆர். கிரிஜா

விதம் விதமான செடிகளை வளர்த்து அவற்றை வீடு முழுவதும் அழகு படுத்தும் தொழிலை முழு நேரம் செய்பவள் சுதா. வழக்கம் போல் அவளுடைய கஸ்டமர் ஒருவர் அவருடைய தேவைகளை கை பேசியிலேயே விளக்கமாகக் கூறி இருந்தார்
அதை செய்ய ஒரு வாரம் ஆகும் என்றாள் சுதா.
” பரவால்ல மா, உங்க வேல ரொம்ப நேர்த்தியா இருக்கு, மெதுவா பண்ணுங்க” என்றார். சுதாவும் மகிழ்ச்சியுடன் அட்வான்ஸ் பணத்தை வாங்கி வேலையை ஆரம்பித்தாள்.
ஒரு வாரம் கழித்து செடிகளை அவர் வீட்டில் டெலிவரி செய்வதற்காக ஒரு வண்டி ஏற்பாடு பண்ணி அதில் செடிகளை
ஏற்றினாள். பாதி தூரம் போகும்போது ஒரு திருப்பத்தில் மிகவும் அழகான வீடு. தனி வீடும் அல்ல, பிளாட்
மாதிரியும் அல்ல,.ஒரு மூன்றடுக்கு உள்ள
சித்திரத்தில் காண்பது போல் அழகான, நேர்த்தியான வீடு. கண்ணை எடுக்க முடியவில்லை அத்தனை அழகு. அதிலும் அங்கு அலங்கரிக்கும் செடிகள் சுதாவிற்கு பிரமிப்பை ஏற்படுத்தின. உடனே வண்டியை நிறுத்தி விட்டு அந்த வீட்டின் மேலே போய் கதவை தட்டினாள். ஒரு வயதான ஆண் கதவைத் திறந்து என்ன என்பது போல் பார்த்தார்.
சுதா தன்னை அறிமுகம் செய்து கொண்டு தன்னுடைய வேலையைப் பற்றி குறிப்பிட்டாள். அவரும் அதே தொழில் செய்வதாகவும், விற்காத செடிகளை தன் வீட்டில் வேறு வழி இல்லாமல் வைத்திருப்பதாகவும் சிறிது வருத்தத்துடன் தெரிவித்தார்.
சுதா அவருக்கு ஒரு
ஐடியா சொன்னாள். ” சார், நான் உங்க வீட்ட மாடலா காண்பித்து, பிசினஸை விரிவு படுத்தி இன்னும் சில கஸ்டமார்களை பிடிக்க முடியும். அதுக்கு அனுமதி தாங்க, வர லாபத்தில் உங்களுக்கு ஒரு பங்கு தரேன் என்றாள் சுதா.
அவர் இந்த சின்ன பெண்ணின் விடா முயற்சியையும், திறமையையும் பார்த்து வியந்து போனார்.
சற்றும் எதிர்பாராத விதமாக அந்த முதியவர் உள்ளே போய் ஒரு போட்டோவை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தார். அது அந்த வீட்டின் புகைப்படம். அந்த கனவு இல்லம் அவர் மனைவி வரைந்ததாம். அதை அப்படியே கட்டி முடித்தாராம். அதற்குப் பிறகு அவள் ஒரு வருடம் தான் உயிருடன் இருந்தார் என்று சொல்லி முடிக்கும் போது அவர் கண்கள் குளமாயின.
சுதா சமாளித்துக் கொண்டு அவர் கையை ஆதரவாகப் பற்றினாள். அவர் அன்பாக அவளைப் பார்த்து திருப்தியுடன் தலை அசைத்தார்

13/10/2023