எறும்பின் நகர்வு/கோ.முத்துசுவாமி

சிவாயநம. நேற்றைய விருட்சம் நிகழ்வில் வாசித்த கவிதை :

நகர்கிற எறும்பைப் பார்த்து
நின்றனள் குழந்தை; மெல்ல
உகுத்தனள் கையில் ஏந்தி
உண்ணாத பருக்கைச் சோற்றை;
வெகுண்டனள் அன்னை, ‘அன்னம்
வீணாக்கு கின்றாய்!’ ‘அம்மா!’
பகர்ந்தனள் மழலை, ‘பாரு
பசிக்குது எறும்புக்’ கென்றே!

அம்மாவின் அலட்சி யத்தை
அலட்சியம் செய்தே, ‘தாத்தா!
மம்மம்,ஆங்! எறும்புக் கிட்டேன்’
மென்னகை உதிர்த்துப் பார்த்தாள்!
சம்மதம் தேடு கின்ற
சிறுவிழி பார்த்தேன்; தொட்டேன்;
‘உம்’மென்றேன், சிரித்தேன்; பிள்ளை
உவகையில் துள்ள லானாள்!

எறும்பிற்கும் ஈயும் எண்ணம்
எங்ஙனம் பெற்றாள்? தொண்டை
செறுமினாற் போல சத்தம்!
சுற்றுமில் யாரும்! மேல்வான்
உறுமியே இடிக்க வந்து
வளர்நேய மழலை பார்த்துப்
பொறுமையாய் செறுமி னாற்போல்
போயிற்று, சற்றே தூறி!
***